Header Ads



இலங்கையில் மதவாதப் போக்கும், ஹலால் ஹராம் சர்ச்சைகளும்


(சட்டத்தரணி இஸ்மாயில் பீ.மாரிப்)

பேதங்களை உண்டு பண்ணுவதில் மத மனோபவம் சக்திவாய்ந்த ஊடுருவலை செய்யக்கூடியதாகும். பல்லின மத சமய கலாசார விழுமியங்களைக் கொண்ட இலங்கையில் கடந்த காலங்களில் அரசியல் சமூக கலாசார விடயங்களில் மத ரீதியான மனோபாவம் கூடுதல் ஆதிக்கம் செலுத்தியிருப்பதை மறுப்பதற்கில்லை. பேதங்களை ஏற்படுத்தக்கூடிய மதமனோபாவம் மனோ பக்தியோடு முன்னெடுக்கப்பட்டால் சச்சரவுகளையும் சங்கடங்களையும் கூட களைந்தெறிந்து விடலாம். ஆனால் இன ரீதியாக மத மனோபாவமும் மேலாதிக்க உணர்வை நிலைநாட்டுவதற்காக உயிர் பெறுகின்ற மத மனோபாவமும் மனித உணர்வுகளையே சுட்டெரித்து விடலாம்.

மத ரீதியாகவும் பேரினவாத மேலாதிக்க ரீதியாகவும் ஏற்கனவே கட்டிப் போடப்பட்டுள்ள ராஜாங்க கட்டமைப்பின் லட்சணத்தில் மத ரீதியாகவும் ஷரிஆ சட்ட ரீதியானதுமான நடவடிக்கைகளை முன்னெடுக்கையில் அல்லது ஏற்கனவே முன்னெடுத்த நடவடிக்கைகளில் பேரினவாத மனோபாவத்தை பிரயோகிப்பது அல்லது பிரயோகிக்க முனைகையில் இக்கூட்டுகள் சந்திக்கப்படுவது மாத்திரமின்றி லட்சியங்களை சீர்குலைத்து அவலட்சணத்தை ஏற்படுத்தி தேசத்தையே ஆபத்துக்குள் தள்ளிவிடலாம்.

பிறமத அனுஷ்டானங்கள், சட்டதிட்டங்கள் போன்றவற்றிலிருந்து இஸ்லாமிய ஷரீஆ சட்டத்திட்டங்கள் கடினமும் கடுமையும் கொண்ட தாகும். இஸ்லாமிய சட்டத்திட்டங்களோடு போட்டிப் போட்டோ அல்லது வேறு மதங்களின் விடயங்களில் தலையீடுகளை செய்தோ சாதனைகளையன்றி வேறு காரணங்களையே சாதிக்க முடியும். இஸ்லாமிய ஷரிஆ சட்டங்களின் வலிமை காரணமாக இலங்கையின் உயிரொன்று வெளிநாட்டில் பறிபோனதை அரசாங்கத்தினால் தடுக்கமுடியாமல் போனதை அறிந்தோம். ஒவ்வொருவருக்கும் அவரவர் மதங்களும் அனுஷ்டானங்களும் நம்பிக்கைக்குரியதும் மேன்மைக்குரியதுமாகும். அரசாங்கமும் எதிர்க்கட்சியும் பரஸ்பரம் குறிப்பிட்டுக்கொள்வதைப் போன்று மத நம்பிக்கையில் வலிமை குறைந்தவர்கள் பரஸ்பரம் மத அனுஷ்டானங்கள் பற்றி குறைபட்டுக் கொள்ளாமலுமில்லை. அது மாத்திர மன்றி சொந்த மதத்தைப் பற்றியும் அதன் நடவடிக்கைகள் பற்றியும் மனதுக்குள் குறைபட்டுக் கொள்கின்ற அதே மதத்தாரும் இருக்காமல் இருக்க முடியாது.

எவ்வாறாயினும் இலங்கையைப் பொறுத்தவரை குறிப்பிட்ட சிலரின் மதவாத போக்குகள் காணப்படினும் சமயங்களல் அனுஷ்டானங்கள் கிரியைகள் விடயத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் பரஸ்பர ஒற்றுமையுடனும் பரிமாறல்களுடனும் பெரும்பான்மைப் பிரதேசங்களில் கூட வாழ்ந்து வருவதை மறுப்பதற்கில்லை. மதவாதிகளின் மத மனோபாவத்துடனான நடவடிக்கைளை முன்னெடுப்பதற்காகவும் இயக்க ரீதியான நாமம் தேவைப்படுகின்றது. இதனை மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட மதங்களின் தலைவர்களே முன்வருவார்களானால் அது அமைதியை  சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்.

நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்களளல்ல எனக்கூறும் பொது பல சேன இயக்கம் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்றும் இங்கு பல்மத அடிப்படைக்கான இடமில்லை என்றும் அண்மையில் கூறியது. அதேநேரம் தமது  பெயரைப் பாவித்து சில குழுவினர் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிணக்குகளை தோற்றுவிப்பதற்காக சில நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதையிட்டு பொலிஸில் முறைப்பாடு செய்திருப்பதாகவும் அந்த இயக்கம் கூறிற்று. இந்த இயக்கத்தின் இலச்சினையை பாவித்துக்கொண்டே குளியாப்பிட்டியவில் ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் மகரகம சம்பவத்துடனும் தங்களுக்கு தொடர்பில்லை என்றும் கூறுகின்ற பொது பல சேன ஸ்தாபனம் ஒரு மதத்தை தாக்குவதன்றி சிங்களவர்களையும் பௌத்தத்தையும் பலப்படுத்துவதாகும் எனக் கூறியுள்ளது.

இதற்கு முன்பதாக இஸ்லாத்தை இழிவு படுத்தி பதாகைகளை தாங்கியவண்ணம் முஸ்லிம்களுக்கு எதிரான எதிர்ப்பிரசாரம் ஒரு பிரிவினரால் குளியாப்பிட்டியில் அரங்கேற்றப்பட்ட போது அவலட்சணமான நிலையடைந்தது. அது போன்று பிக்குகள் குழுவினர் மஹரகமவில் ஜவுளி ஸ்தாபன நிர்வாகத்தை அச்சுறுத்தி நிர்வாகஸ்தர் முஸ்லிம் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக ஸ்தாபனம் முன்பாக ஆர்ப்பாட்டம் அரங்கேற்றப்பட்டது. இவ்வாறான வெறுப்புப் பிரசார நடவடிக்கைகள் ஊச்ஞிஞுஞணிணிடு, ஞடூணிஞ்ண், கூதீடிttஞுணூ போன்ற பரப்புஒளி சாதனங்களூடாக வலைப்பின்னல் படுத்தப்பட்டன. எவ்வாறாயினும் வேண்டுமென்றே ஒரு குழுவினர் இருந்துகொண்டு சமூகங்களிடையே இணக்கமின்மையை தோற்றுவிப்பதாக கூறப்படுகின்றது. குளியாப்பிட்டிய ஆர்ப்பாட்டத்தின்போது கூட சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவோர் பாராமுகமாக இருந்ததாக ஐ.தே.க. சுட்டிக்காட்டியது. குறித்த பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வு தேடுவதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கபடும் என அரசாங்கம் கூறியது. பின்னர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் அறிக்கை எதிர்ப்பார்க்கப்படுவதாக கூறப்பட்டது.

அரசியலமைப்புச் சட்டமும் பிற சட்டங்களும் மத சுதந்திரத்தை பாதுகாக்கின்றது. ஆளொவ்வொருவரும் தான் விரும்பும் மதத்தை அல்லது நம்பிக்கையை உடையவராக இருப்பதற்கான அல்லது மேற்கொள்வதற்கான சுதந்திரமுட்பட சிந்தனை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சியை பின்பற்றும் சுதந்திரம், மதச்சுதந்திரம் என்பனவற்றுக்கு உரித்துடையவராதல் வேண்டும். தனியாக அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து பகிரங்கமாகவேனும் அந்தரங்கமாகவேனும் தனது மதத்தையோ அல்லது நம்பிக்கையையோ வழிபாட்டிலும்  அனுசரிப்பிலும் சாதனையிலும் போதனையிலும் வெளிக்காட்டுவதற்கான சுதந்திரமுண்டு. இலங்கைக் குடியரசில் பௌத்த மதத்துக்கு முதன்மை ஸ்தானத்தையும் அதனைப் பேணிக் காக்கும் அரசின் கடமையை அரசியலமைப்பு குறிப்பிட்டிருப்பினும் பிற மத சுதந்திரம் மற்றும் மேலே கூறப்பட்டுள்ள உரிமைகள் எல்லா மதங்களுக்கும் காப்புறுதி செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றது. எவ்வாறாயினும் பௌத்த மதத்தை ராஜ்ய மதமாக அரசியலமைப்பு அங்கீகரிக்கவில்லை. அரசு பகிரங்கமாக மதச் சுதந்திரத்தை உறுதி செய்துள்ள போதிலும் செயல்பாட்டளவில் சில பிரதேசங்களில் பிரச்சினைகள் இருந்ததாகவும் மத சுதந்திர துஷ்பிரயோகங்கள் இருந்தாகவும் கடந்த வருட அமெரிக்க ராஜாங்க திணைக்கள அறிக்கை கூறியதை அறியமுடிகின்றது.

சமகாலச் சர்ச்சைகள் பல இலங்கையில் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் மத ரீதியான சர்ச்சைகளும் உள்ளன. குறிப்பாக மத ரீதியான பதற்றத்தை தோற்றுவித்துள்ளதும் சமகாலத்தில் சூடான தலைப்பாக மாறியுள்ளதுமான ஹலால்  ஹராம் சர்ச்சை பராளுமன்றத்திலும் பேசப்படுகின்ற தர்க்கத்துக்குள்ளான விவகாரமாக மாறிப்போயுள்ளது. ஷிராணி பண்டாரநாயக்கவை குற்றம் கண்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு சட்ட அதிகாரம் இல்லை என நீதிமன்றம் கூறியது போன்று ஹலால் சான்றிதழ் வழங்கும்  சட்ட அதிகாரம் ஜம்மியதுல் உலமா சபைக்கு கிடையாது என்று ரணில் கூறிவிட்டார். சபை முதல்வரோ அதற்கு வேறு விதமாக பதிலளித்து உலமா சபையின் செயற்பாடுகளை நியாயப்படுத்தினார். பொது பல சேன எனும் அமைப்புக்கு  ரணிலின்  கூற்று இனிப்பான செய்தியாகக் கூட இருந்திருக்கலாம்.

பெரும்பான்மை இனத்தவரின் செல்வாக்கில் வீழ்ச்சி கண்டுள்ள ரணிலுக்கு பௌத்த மக்களின் மனோபாவத்துக்கு இணைந்து பணியாற்ற வேண்டிய தேவையுள்ளது. அம்மக்கள் மத்தியில் தனது கொள்கை ரீதியான மாற்றத்தை வெளிச்சம் போட்டுக்காட்ட அவர் முனைந்திருக்கக்கூடும். முஸ்லிம் அரசியல் வாதிகள் மௌனித்திருக்க முஸ்லிம்கள் சார்பான விடயங்களை தான் எடுத்துக் கூறவேண்டியுள்ளதை சிலாகித்த ரணிலின் உரையில் நியாயத்துவம் இருந்திருப்பினும் ஹலால் சான்றிதழ் வழங்கக் கூடிய பணியிலுள்ள உலமாக்களின் நியாயதிக்கத்தை கேள்விக்குட்படுத்தாயிருந்திருக்கலாம்.

உண்மையில் ஹலால் என்ற அரபுப்பதம் இஸ்லாமிய  ஷரிஆவின் படி அனுமதிக்கப்பட்ட செயலையும் பொருளையுமே குறிப்பிடுகின்றது. அனுமதிக்கப்பட்ட உணவைக்குறிப்பதற்காக ஹலால் என்ற பதத்தைப் பாவிப்பது போன்று இதற்கு எதிரான பதமாக ஹராம் விலக்கப்பட்டது அனுமதிக்கப்படாதது என கூறுகின்றோம். இஸ்லாமிய சட்டத்திட்டங்களின் கீழ் முஸ்லிம்கள் சாப்பிட அனுமதிக்கப்பட்ட உணவினையே ஹலால் உணவு எனப்படுகிறது. எத்தகைய உணவு சாப்பிடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றன? எவ்வாறு உணவு தயார் செய்யப்பட வேண்டும்? என்ற பரிமாணங்களும் ஹலால் உணøவை நிர்ணயிக்கின்றன.

சட்டபூர்வமானது அனுமதிக்கத்தக்கது என்பதை அர்த்தப்படுத்துகின்ற அரபுப் பதமான ஹலால் என்ற சொற்பதம் வெறுமனே திண்மத்தையும் திரவத்தையும் மாத்திரம் உள்ளடக்கவில்லை. தினசரி வாழ்க்கையின் சகல சமாச்சாரங்களையுமே உள்ளடக்கி நிற்கின்றது. ஹலால் உணவு என்கையில் அநேகமான மக்கள் இறைச்சி உணவையே சிந்திக்கின்றனர். எவ்வாறாயினும் முஸ்லிம்கள் சகல உணவு வகைகளிலும் குறிப்பாக பதனிடப்பட்ட உணவுகள், மருந்து தயாரிப்புகள், உணவுப் பண்டங்களல்லாத அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றையும் அவை ஹலாலானவையா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஜம்மியதுல் உலமா சபையினால் வழங்கப்படுகின்ற ஹலால் சான்றிதழ் என்பது வியாபார நோக்கங்கொண்ட முஸ்லிமல்லாதவர்களின் கோரிக்கையில் பேரிலானதாக தெரிவிக்கப்படுகின்றது. உண்மையிலேயே இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழக்கூடிய முஸ்லிம்கள் ஹராம் ஹலால் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவர்களாகவே உணவை உட்கொள்ளும் பழக்கம் கொண்டவராக இருப்பர். மார்க்கப்பற்றும் அனுஷ்டானங்களில் அக்கறை கொண்டோரும் அதில் சிரத்தை எடுக்காதிருப்பர் எனக் கூற முடியாது. விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் விதிவிலக்கானவர்களும் இருக்கக்கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

எது எவ்வாறாயினும் ஹலால் சான்றிதழ் வழங்குதற்கான உத்தரவு பத்திரத்தைப் பற்றி பேசினாலும் பொது பல சேன போன்ற அமைப்புகள் முஸ்லிம்களின் மத உணர்வுகளை புடம் போட்டுப் பார்க்கத் தேவையில்லை. அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை பிற மதத்தவர்களுடனான விவாதங்கள், உரையாடல்கள் போன்றவற்றில் ஈடுபடுவோர் ஐந்திரி ரிபஷ சமய விவகாரங்கள் தொடர்பில் விளக்கமளிப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆள் கணக்குக்கு அல்லது வாய்ப்புக்கு சங்கை செய்கின்ற அமைப்பில் அமருகின்ற பட்சத்தில் விளக்கத்தில் குழப்பம் ஏற்பட்டுவிட வாய்ப்புண்டு.

சர்வதேச ரீதியான ஹலால் சான்றுபடுத்துகை தேவைப்படுகின்ற ஒரு காலகட்டத்தில் இலங்கையில் இதனைத் தூக்கிப்பிடிக்கத் தேவையில்லை. சாமிக்குபடைத்ததை குறிப்பாக சரஸ்வதி பூஜை, தைப்பொங்கல் போன்ற தமிழ் விசேட அனுஷ்டானங்களின் போதும் முஸ்லிம்களுக்கு வழங்க தமிழ் மக்கள் முன்வருவதில்லை. அவர்களுக்கென புறம்பாக தயார் பண்ணப்பட்டதை அல்லது புறம்பாக எடுத்துவைத்ததை பறிமாறுவார்கள். அது புரிந்துணர்வு நடவடிக்கையாகும். சிலவேளை சாமிக்கு படைத்ததையே உட்கொள்கின்றவர்களும் இருக்கலாம். ஹலால் உணவை உட்கொள்வதை பௌத்த பெருமக்கள் விரும்பவில்லை என்றால் சுவரொட்டிகளை ஒட்டி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஹலால் சான்றிதழ் வழங்குவோரை தடுக்க முனைவதிலும் பார்க்க அச்சான்றிதழ் கோரிக்கையை முன்வைப்போரை தடுக்க முனையலாம்.

ஹலால் உணவை உட்கொள்ள விருப்பமின்றேல் ஹலால் சான்றிதழ் உறுதிப்படுத்தப்படாத உணவுப் பண்டங்களை கொள்முதல் செய்யுமாறு இனம் சார்ந்தோரை நிர்ப்பந்திக்கலாம். அதற்காக மத மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளத் தேவையில்லை. ஒரே வீட்டில் தனியொருவருக்காகவே சிவப்பு சோறும் மற்றவர்களுக்காக வெள்ளைச் சோறும் பானையேறுவதைப் போன்று ஹலால் உணவு தேவைப்பட்டோர்    ஹலால் உணவையும் ஹலால் உணவு தேவைப்படாதோர் ஹலால் அற்றதையும்   சாப்பிட வேண்டியதுதான். நீரிழிவுக்கு இருப்பதைப் போன்ற வாய்ப்பு மனஇழிவுக்கும் உண்டெனக் கருதி செயல்பட வேண்டாமா?

No comments

Powered by Blogger.