'மட்டக்களப்பில் இன ரீதியான பிரதேச செயலகங்களை உருவாக்க கூடாது'
மட்டக்களப்பு மாவட்டத்தின் 4 பிரதேச செயலகப் பிரிவுகளின் எல்லைகள் மாற்றப்படுதல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரிந்துரை அடங்கிய அறிக்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி நடுப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட எல்லைக் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில், ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் திட்டம் ஒன்றைத் தயாரிக்கும் வேலைகளில் மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஈடுபட்டிருந்தனர். அதன் இறுதிக் கட்டத் தீர்மானம் எடுக்கப்பட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை அறிக்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதன் பிரதிகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கும் பொது நிர்வாக அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரியநேத்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
"இந்தப் பிரதேச செயலகங்களின் எல்லைகள் ஏற்கனவே இருந்தபடியே இருக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வந்துள்ளது.
இதுவே எங்களது முடிவாகும். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு மட்டுமன்றி மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் மக்களின் முடிவாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் இன ரீதியான பிரதேச செயலகங்களை உருவாக்கக் கூடாது என்பது எங்களது முடிவாக இருக்கிறது. எமது மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் 4 முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுகளும் 10 தமிழ்ப் பிரதேச செயலாளர் பிரிவுகளும் உள்ளன.
நான்கு தவிர 10 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 26,300 ஏக்கர் விவசாய நிலங்கள் முஸ்லிம் மக்களுக்கு உள்ளதுடன், 832 ஏக்கர் நிலங்களில் முஸ்லிம் மக்கள் குடியிருக்கிறார்கள். ஆகவே, எங்களுக்கு எந்தவிதமான பாகுபாடும் இல்லை. அவர்கள் எங்கும் வாழலாம்‘ என்று தெரிவித்தார்.
எல்லை நிர்ணயம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடந்த ஜனவரி 13 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் பொது நிர்வாக அமைச்சின் மேலதிக செயலாளர் மட்டக்களப்பின் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளின் எல்லைகள் மீள நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவித்ததையடுத்து, ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக கடந்த 24 ஆம் திகதி பொது நிர்வாக அமைச்சருக்கும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.
அந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படாத நிலையில், ஜனாதிபதிக்கு ஒவ்வொரு தரப்பும் பரிந்துரைகளை முன்வைக்கும் படியும் ஜனாதிபதி முடிவுகளை அறிவிப்பார் என்றும் பொது நிர்வாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்திருந்தார்.
அதற்கமைவாக மட்டக்களப்பு சிவில் சமூகத்தின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற ஆராய்வுகளையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது பரிந்துரைகளை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஏனைய தமிழ்க் கட்சிகள் தனித்தனியாக தமது பரிந்துரைகளையும் முன்வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட எல்லை நிர்ணயத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புனாணை கிழக்கு எனும் 211 பி கிராம சேவையாளர் பிரிவின் ரிதிதென்ன, ஜயந்தியாய, ஓமடியாமடு, பாலம்பக்கேணி, ஆலங்குளம், புவனேசபுரம், மேலாண்டகுளம் ஆகியன கோரளைப்பற்று மத்தியுடன் இணைக்கப்படுகிறது. இதில் சுமார் 12 ஆயிரத்து 500 க்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பு உள்வாங்கப்படுகிறது.
அதேபோன்று கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் வாகனேரியில் 610 குடும்பங்களைக் கொண்ட 210 ஆம் இலக்க கிராம சேவையாளர் பிரிவின் மேற்கு 240 குடும்பங்களைக் கொண்ட 210 ஈ கிராம சேவையாளர் பிரிவின் புனானை, மயிலந்தனை, சாளம்பைச்சேனை, முள்ளிவட்டவான், புனானை அணைக்கட்டு ஆகிய கிராமங்கள் கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுடனும் குளத்துமடு, குடாமுனைக்கல், குளவால்சேனை, பெட்டைக்குளம், புணானை இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் சுமார் 11 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு உள்ளவாங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment