Header Ads



பலவந்தமாகப் பணம் அறவிடும் அதிபர்கள் ஆசிரியர்கள் உடனடியாக இடைநிறுத்தம்


(TL)பாடசாலைகளில் மாணவர்களிடம் பலவந்தமாகப் பணம் அறவிடப்பட்டால் அதனுடன் தொடர்புபட்ட அதிபரோ, ஆசிரியரோ உடனடியாக பதவி நீக்கம் செய்யப்படுவரென கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் அறிவித்ததுடன் இது தொடர்பான சுற்றறிக்கை இரு வாரத்தினுள் வெளியிடப்படும் என்றார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது ஐ.தே.க. எம்.பி. புத்திக பத்திரண எழுப்பிய கேள்விக்கே இவ்வாறு தெரிவித்த கல்வி அமைச்சர் மேலும் கூறியதாவது;

ஹொரணை மாணவியின் விவகாரம் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கூடிய கவனமெடுத்தார். மாணவர்களிடமிருந்து அதிபர், ஆசிரியர்கள் பலவந்தமாக பணம் அறவிட முடியாதென ஏற்கனவே சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் பல பாடசாலைகளில் மாணவர்களிடமிருந்து பலவந்தமாகப் பணம் அறவிடப்பட்டு வருவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்து அது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுத்தோம்.

இவ்வாறு நாம்  நடவடிக்கைகளை எடுக்கும் போது அவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் அரச சேவைகள் ஆணைக்குழுவிடமும் செல்கின்றனர். இது எமது நடவடிக்கைகளுக்கு தடையை, தாமதத்தை ஏற்படுத்தியது. அத்துடன், இவர்களுக்கு எதிராக கல்விச் சேவை ஆணைக்குழுவே நடவடிக்கை எடுக்கக் கூடியதாகவிருந்தது. எனவே, தான் நாம் இந்த நடைமுறையை மாற்றி நேரடியாக நாமே நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் திருத்தம் செய்துள்ளோம்.

இதன்படி பாடசாலைகளில் மாணவர்களிடம் பலவந்தமாக பணம் அறவிடும் அதிபரோ, ஆசிரியரோ உடனடியாக தற்காலிக பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். அதன் பின்னரே விசாரணைகள் இடம்பெற்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். இது தொடர்பான சுற்றறிக்கை இரு வாரங்களுக்குள் வெளியிடப்படும்.

No comments

Powered by Blogger.