தீ விபத்தில் இருந்து உரிமையாளரை காப்பாற்றி உயிர் துறந்த கிளி
பிரிட்டனில் வீடு தீப்பற்றிக் கொண்டதை அறிந்து உரிமையாளரை எச்சரித்துக் காப்பாற்றிய கிளி, தீயில் சிக்கி உயிரிழந்தது.
பிரிட்டன், செளத் வேல்ஸில் உள்ள லானெல்லி பகுதியைச் சேர்ந்தவர் பென் ரீஸ். "குக்கி' என்று பெயரிடப்பட்ட ஆஸ்திரேலிய நாட்டுக்கிளி ஒன்றை வளர்த்து வந்தார். 19 வயதுக்கு உட்பட்டவரான பென், சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தார்.
பென், தனது படுக்கையறையில் ஊதுபத்தியைப் பொருத்தி வைத்து விட்டு, குளிக்கச் சென்று விட்டார். எதிர்பாராத விதமாக, ஊதுபத்தியில் இருந்து விழுந்த சிறு தீப்பொறியால், படுக்கையறை தீப்பற்றி எரிந்தது.
அப்போது, "குக்கி' உடனடியாக குளியலறைக்குப் பறந்து சென்று, தொடர்ந்து கத்தியது. மேலும், அவரைச் சுற்றி செங்குத்தாக கீழ் நோக்கி, விநோதமாகப் பறந்து அவரை எச்சரிக்கை செய்தது.
குக்கியின் இந்த விநோதமான நடவடிக்கையால், ஏதோ பிரச்னை என்பதை உணர்ந்த பென், அறையில் இருந்து வெளியில் வந்து பார்த்து தீ விபத்து என்பதை உணர்ந்தார். பின், வீட்டின் மற்றொரு பகுதிக்கு பாதுகாப்பாக இடம் பெயர்ந்து, தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தார்.
துரதிருஷ்டவசமாக, பென்னைக் காப்பாற்றிய "குக்கி'யால் தீயில் இருந்து தப்ப முடியவில்லை. தீயணைப்புத் துறையினர் வந்து, தீயை மேலும் பரவாமல் தடுத்து, முதலுதவி அளித்தனர். தன் உயிரைத் தியாகம் செய்து, தனது உரிமையாளரை கிளி காப்பாற்றியது அக்குடும்பத்தினரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. கிளியின் உடல், வீட்டு வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
பென்னின் தாயார், விக்கி ரீஸ் கூறுகையில், ""குக்கி எனது மகனின் காவல் தேவதை. வீர நாயகனான குக்கி, இறக்கும் போதும் நாயகனாகவே இறந்தது'' என்றார்.
Post a Comment