அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு
(எஸ்.எம்.அறூஸ்)
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு 26-02-2013 தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் தலைமையில் இன்று காலை பத்து மணிக்குஆரம்பமானது. இதன்போது கடந்த மாதத்தின் கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு அது தொடர்பாக கருத்துப்பறிமாறப்பட்டது.
அத்தோடு பிரதேச சபைக்குட்பட்ட நூலகங்களில் நீண்டகாலமாக கடமையாற்றுகின்றவர்களுக்கே நிரந்தர நியமனம் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்ற உறுப்பினர்களான யாஸீர் ஐமன் மற்றும் எஸ்எல்.முனாஸ் ஆகியோரது வேண்டுகோள் இங்கு ஆராயப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்து தவிசாளர் அன்ஸில் வேறு ஒரு நிகழ்விற்குச் செல்வதற்காக கூட்டத்தலைமையை உதவித் தவிசாளர் ஏ.ஏல்.அமானுல்லாவிடம் ஒப்படைத்துவிட்டு சபையை விட்டு வெளியேறினார். சபை தொடர்ந்தும் உதவித் தவிசாளரின் தலைமையின் கீழ் நடைபெற்றது.
சபை உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்ததுடன் பல்வேறு தீர்மானங்களையும் முன்மொழிந்தனர். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான புதிய நிரந்தரமான கட்டிடத்திற்கு நிதி கிடைக்கப்பெற்றும் இதுவரை கட்டடம் அமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மந்த கதியில் உள்ளதாக உறுப்பினர்கள் ஆக்ரோசமாகக் கருத்துத் தெரிவித்தனர்.
பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் கருத்துத் தெரிவிக்கும் போது மக்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதமாக சபை எடுக்கவேண்டும். மக்கள் பிரச்சினைகளை எங்களிடம் முறையிடுகின்றார்கள். மக்கள் சபையை பிழையாகச் சொல்வதற்கான நிலையை நாம் ஏற்படுத்தக் கூடாது. பிரதேச சபைக்குள்ள சட்டங்களை பாவித்து மக்கள் நலனை முன்னிலைப்படுத்த வேண்டும். பாதைகளுக்கு மின்குமிழ்கள் உடனடியாக பொறுத்தப்படவேண்டும். மக்களுக்குத் தொல்லையாக உள்ள மாட்டுக்காளைகள் அகற்றப்படவேண்டும்.
அதுமட்டுமல்ல சபை உறுப்பினர்கள் சபையில் இருந்து இடைநடுவில் வெளியேறுவது இனிமேல் மாற்றப்படவேண்டும். மாதத்தில் ஒரு தடைவ நடக்கின்ற கூட்டத்தில் முழுமையாக இருக்க முடியாமல் வெளியேறுவது கவலைக்குரிய விடயமாகும். வாக்களித்த மக்களுக்கு சேவை செய்வது இப்படித்தானா? என்று காட்டமாக கருத்துத் தெரிவித்தார்.
Post a Comment