தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புறக்கணிக்கப்பட்ட ஹக்கீம் - நீதி நிலைநாட்டிய மஹிந்த
(எஸ்.எம்.அறூஸ், எம்.ஐ.எம்.பைசல்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் இன்று செவ்வாய்க்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
அத்துடன் குவைத் அரசாங்கத்தின் 600 மில்லியன் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட 700 மாணவர்கள் தங்கக்கூடிய விடுதிக் கட்டடம், நிர்வாக மற்றும் விரிவுரை மண்டபம் உள்ளிட்ட கட்டிடத் தொகுதிகளையும், குவைத் நட்புறவு நினைவுத் தூபி என்பனவற்றையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், உள்ளுராட்சி அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, சிரேஸ்ட அமைச்சர் பி.தயாரத்ன, கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் உட்பட பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரபினால் ஆரம்பிக்கப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இன்று பல்வேறு அபிவிருத்திகளையும், சிறந்த கல்விச் சாதனைகளையும் படைத்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
மர்ஹூம் அஸ்ரபிற்குப் பிற்பாடு இப்பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கு முன்னாள் அமைச்சரும், முன்னாள் குவைத் நாட்டுக்கான தூதுவருமான ஏ.ஆர்.எம்.மன்சூர் பங்களிப்புச் செய்திருந்தமை விசேட அம்சமாகும்.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீமின் பெயர் இவ்வைபவத்திற்கு அழைக்கப்பட்ட அழைப்பிதலில் இடம்பெற்றிருக்கவில்லை.
இவ்விடயம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையிட்டு ஜனாதிபதியின் அழைப்பில் அமைச்சர் ரவுப் ஹக்கீம் இவ்வைபவத்தில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வைபவத்தில் அமைச்சர் அதாஉல்லா தரப்பினருக்கு கூடுதலான முக்கியத்துவத்தை பல்கலைக்கழக உபவேந்தர் வழங்கியிருப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றது. அது மட்டுமல்ல நிகழ்ச்சி நிரலில் அமைச்சர் அதாஉல்லா பேசுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தும் ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் அதாஉல்லா பேசுவது தடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
அத்தோடு இவ்வைபவத்திற்கு குறிப்பிட்ட ஒரு சில ஊடகவியலாளர்களுக்கே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment