குண்டு வீச்சில் ஒபாமா எரிவது போல வீடியோ - வடகொரியா வெளியிட்டது
அமெரிக்க அதிபர் ஒபாமா, அணுகுண்டு வீச்சில் எரிவது போன்ற வீடியோ காட்சிகளை வட கொரியா வெளியிட்டது. வட கொரியா கடந்த 12-ந் தேதி அணுகுண்டு சோதனை நடத்தியது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து அமெரிக்காவுக்கு எதிரான பிரசாரத்தில் வடகொரியா ஈடுபட்டுள்ளது.
சமீபத்தில் ஏவுகணை தாக்குதலில் நியூயார்க் நகரம் தாக்குதலுக்கு உள்ளாவது போன்றும், நகரம் எரிவது போன்றும் வீடியோ காட்சிகள் இடம் பெற்றது. இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புதிதாக ஒரு வீடியோ காட்சியை வடகொரியா வெளியிட்டுள்ளது. அதில் அணுகுண்டு வீச்சில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ராணுவ வீரர்களும் பற்றி எரிவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
நியூயார்க் நகரம் தாக்கு தலுக்கு உள்ளாவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியான இரண்டு வாரங்களில் அந்த வீடியோ காட்சிகள் “யூ- டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஊடுருவல்காரர்களை கருத்தில் கொண்டே வடகொரியா அணுகுண்டு சோதனையை நடத்தியது. எங்கள் நாட்டின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் அதை முறியடித்து இறையாண்மையை பாதுகாத்துக் கொள்வதற்காகவே இந்த சோதனை நடத்தப்பட்டது என்று மேலும் ஒரு தலைப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த வீடியோ காட்சியில் கொரிய மொழியில் பல்வேறு தகவல்கள் கூறப்பட்டுள்ளன. அதில் அமெரிக்காவுடனான விரோதம் காரணமாகவே பிப்ரவரி 12-ந் தேதி அணுகுண்டு சோதனை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் வடகொரியாவுக்கு ஏற்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தலைப்புகளுக்கு அடுத்து அணுகுண்டு வீச்சில் அமெரிக்கா தீப்பற்றி எரிகிறது. தீ எரியும் காட்சியின் பின்னணியில் அதிபர் ஒபாமா நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அப்போது தரையில் மறைத்து வைத்திருந்த அணுகுண்டு வெடித்து சிதறுகிறது. அத்துடன் காட்சிகள் முடிகிறது. இறுதியில் இப்போது உலகமே பார்த்துக்கொண்டு இருக்கிறது. அமெரிக்கா பதில் அளிக்க வேண்டும் என்ற தகவலும் இடம் பெற்றுள்ளது.
இந்த இரண்டு காட்சிகளுமே வட கொரிய அரசின் அதிகாரப்பூர்வ இணைதயமான உரிமின் ஜொக்ரி மூலம் யூ.டியூப் பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நியூயார்க் நகரம் எரிவது போன்று வெளியான வீடியோ காட்சி கால் ஆப் டூட்டி என்ற வீடியோ கேமில் இருந்து எடுக்கப்பட்டது என்று தெரிய வந்தது.
இந்த கேமை கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கியது. அந்த நிறுவனம் காப்புரிமை மீறல் புகார் கொடுத்ததால் வட கொரிய இணைய தளத்தில் இடம் பெற்று இருந்த “வீடியோ கேம்” காட்சிகள் வாபஸ் பெறப்பட்டது.
Post a Comment