இந்திய பாராளுமன்றத்தில் வெடித்த இலங்கை விவகாரம்
இலங்கை தமிழ் விவகாரம் தொடர்பான, விவாதம் ராஜ்யசபாவில் நடந்தது. இந்த விவாதத்திற்கு பதிலளித்து பேசிய சல்மான் குர்ஷித், இலங்கையை எதிரி நாடாக பார்க்க முடியாது என்றும், இலங்கைக்கு எதிரான தீர்மானம் பற்றி இப்போது கூற இயலாது என்றும் கூறினார்.ராஜ்யசபாவில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பான விவாதம் இன்று 27-02-2013 நடந்தது. இந்த விவாதத்தில் பல உறுப்பினர்கள் பேசினர்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசுகையில்,தமிழர் விவகாரம் தொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சருடன் விவாதம் நடத்தப்பட்டது. தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வலியுறுத்தப்பட்டது. தமிழர்களுக்கு அரசியல் சாசன உரிமை கிடைக்க தொடர்ந்து வலியுறுத்துவோம். ஆக்கப்பூர்வமான உரிமைகள் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. என கூறினார்.
மத்திய அரசு மீது புகார்: இதன் பின்னர் அ.தி.மு.க., எம்.பி., மைத்ரேயன் பேசுகையில்,இலங்கை தமிழர்களின் அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்ற அடையாளம் மாறி எதிரிநாடு என மாறி வருகிறது. இலங்கை தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள மத்திய அரசு மறுக்கிறது. இலங்கை தமிழர் உரிமைகளை பாதுகாக்க ஐ.மு., தவறிவிட்டது. இலங்கை தமிழர்களின் உண்மையான நிலையை மத்திய அரசு தெரிந்து கொள்ளவில்லை. தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை. பல நாட்டு தூதர்களை சந்தித்து மனு கொடுப்பதால் பலனில்லை என கூறினார்.
இதற்கு தி.மு.க., உறுப்பினர்கள் கனிமொழி, சிவா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இலங்கைக்கு எதிராக ஓட்டு:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., டி.ராஜா பேசுகையில்.இலங்கையில் திட்டமிட்ட இன அழிப்பு நடக்கிறது. ராஜபக்சே அரசை விமர்சிக்கும் இலங்கை ஊடகங்கள் தாக்கப்படுகின்றன. தமிழரை பாதுகாக்க இந்தியா நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தமிழ் சமுகத்தை அரசு ஏன் ஏமாற்றுகிறது. உலக நாடுகளை ஏமாற்றும் இலங்கையை இந்தியா ஏன் நம்ப வேண்டும். ஜெர்மனியின் நாஜி முகாம்களில் நடக்காத கொடூரங்கள் இலங்கையில் நடைபெற்றது. இலங்கையில் ரத்த ஆறு ஓடுகிறது. ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக ஓட்டுப்போட வேண்டும். இலங்கையில் சுதந்திரமாக தேர்தல் நடப்பதில்லை. இலங்கை தமிழர்களின் அடையாளங்கள், பாரம்பரிய உரிமைகள் அழிக்கப்பட்டுள்ளன என கூறினார்.
மத்திய அரசு மீது நம்பிக்கையில்லை:
தி.மு.க,. எம்.பி., திருச்சி சிவா பேசுகையில், இலங்கை தமிழ் விவகாரத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கை இழந்து விட்டோம். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா கொண்டு வந்திருக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும். இலங்கை விவகாரத்தில் பொறுமை இழந்து வருகிறோம். இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. ஆதாரங்கள் அதிகரித்த நிலையிலும் இந்தியா கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. வெளிநாட்டு பத்திரிகையாளர்கள். ஐ.நா., ஊழியர்கள் இலங்கைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. தமிழர்களை கொல்லும் இலங்கைக்கு இந்தியா எவ்வாறு உதவி செய்தது. இந்தியாவின் குரலுக்கு இலங்கையில் மதிப்பில்லை என கூறினார்.
பா.ஜ., புகார்:
இந்த விவாதத்தில் பா.ஜ., சார்பில் வெங்கையா நாயுடு பேசும் போது, இலங்கை நட்பு நாடு என்றாலும் வேடிக்கை பார்க்க முடியாது. புலித்தலைவர் மகன் பாலசந்திரன் கொடூரமாக கொல்லப்பட்டதை அமைதியாக பார்க்க முடியாது என கூறினார்.
சிவசேனா கண்டனம்:
இலங்கை பிரச்னையை வெறும் தமிழர் பிரச்னையாக மட்டும் பார்க்க கூடாது. தேசிய பிரச்னையாக பார்க்க வேண்டும். 12 வயது சிறுவன் கொல்லப்பட்டதை அமைதியாக வேடிக்கை பார்த்தது ஏன் என சிவசேனா எம்.பி., சஞ்சய் கேள்வி எழுப்பினார்.
அண்டை நாடான இலங்கையில் நடப்பதை வேடிக்கை பார்க்க முடியாது. இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். அரசு கவனமாக செயல்பட வேண்டும். அரசியல் தீர்வு காண தூதரக ரீதியாக அழுத்தம் கொடுக்க முயல வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி., டி.கே.ரங்கராஜன் கூறினார்.
இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை கொடுக்க இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என திரிணமுல் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை ராணுவம் போர்க்குற்றம் புரிந்ததை மறுப்பதிற்கில்லை. போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை விவகாரத்தில் உணர்ச்சிவசப்படுவதை விட தீர்வு காண வேண்டும். இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ஞானதேசிகன் வலியுறுத்தினார்.
இதன் பின்னர் இந்த தீர்மானத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,இலங்கையை எதிரிநாடாக பார்க்க முடியாது.இலங்கை அரசு உண்மையை உணர வேண்டும். ஜெனிவா தீர்மான விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க முடியும். 13வது சட்டப்பிரிவை அமல்படுத்த வலியுறுத்தல் இலங்கை பிரச்னை தமிழக மக்களின் கவலை மட்டுமல்ல. இந்திய மக்களின் கவலை. குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது . தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்க சட்ட மசோதா நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள தீர்மானம் குறித்து இப்போது கூற இயலாது அரசியல் முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது போர் நடைபெற்ற காலம் இலங்கை வரலாற்றில் மோசமான காலம். இலங்கை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் அங்குள்ளவர்கள் அமைதியாக வாழ வேண்டும். பிற நாட்டின் விவகாரத்தில் தலையிட முடியாது . இந்தியா பெரியண்ணனாக செயல்படவில்லை. சகோதரனாக செயல்படுகிறது. இலங்கையின் வடக்கு பிரதேசத்தில் செப்டம்பருக்குள் தேர்தல் நடைபெற வேண்டும் என கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.பி.,க்கள் கூச்சலிட்டனர்.
Post a Comment