Header Ads



காதி நீதவான்களுக்கான விஷேட பயிற்சி - நீதியமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு



அடுத்த மாதம் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களையும் உள்ளடக்கி 'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சி நடாத்தப்படும் சந்தர்ப்பத்தில் அதனோடு இணைந்ததாக காதி நீதிவான்களுக்கான ஒரு பயிற்சி வகுப்பை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளேன். அது நீதிச் சேவை ஆணைக்குழுவின் ஊடாக மேற்கொள்ளப்படும்.  

இவ்வாறு நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

இலங்கை காதி நீதிவான்களின் அமைப்பு கொழும்பில் ரண்முத்து ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற போது வருடாந்த பொதுக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே நீதி அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார். 

காதி நீதிபதிகள் அமைப்பின் தலைவர் எம்.எச்.எம். யெஹியா தலைமையில் இக் கூட்டம் இடம்பெற்றது. உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்ஸீப் நீதியமைச்சின் செயலாளர் திருமதி கமலினி டி சில்வா ஆகியோரும் இதில் உரையாற்றினர். 

நேற்று கொழும்பில் நடந்த ஒரு நிகழ்வில் முஸ்லிம் சட்டம் என்ற தலைப்பில் 1500 பக்கங்களுக்கு மேற்பட்ட நூல் வெளியிடச் சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் எனவும் சங்க அதனை எழுதியிருந்தார் அங்கு சங்கை அமில தேரர் ஆற்றிய உரை அதாவது, சமய சம்பந்தமான சர்ச்சையை கிளப்பும் தீயசக்திகளைக் கடுமையாகச் சாடுகின்ற போக்கில் அவரது அந்த உரை அமைந்திருந்தது. சமகால பிரச்சினைக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. 

அந் நூல் சட்டம் சம்பந்தமாக சிங்களத்தில் வெளிவந்த சிறந்த நூலாகத் தென்பட்டது. காதி, சட்டத்தரணிகள், சட்ட மாணவர்கள், யாவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம். இது நல்ல முயற்சி ஓர் ஆதார உசாத்துணை நூலாக இதனை வாசிக்கலாம். ஷரிஅச் சட்டத்தைப் பற்றியும் அதனோடு தொடர்புபட்ட இந்நாட்டுச் சட்டங்கள் பற்றியும் அவர் அதில் ஆராய்ந்திருக்கின்றார். 

நீதியரசர் சலீம் மர்ஸூப் அவர்களின் தலைமையில் முஸ்லிம் தனியார் சட்டத்தில் குறிப்பாக முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்திற்கு கொண்டு வர வேண்டிய திருத்தங்களைப் பற்றிய அறிக்கை இப்பொழுது முடிவுறும் தருவாய்க்கு வந்துள்ளது. நீதியரசர் தமது நேரத்தை வெகுவாகச் செலவிட்டு பல கூட்டங்களையும் நடத்தி இப்பொழுது அதனை நிறைவு செய்யும் தருணத்தை எட்டியிருக்கின்றார். 

ஜம்இய்யதுல் உலமாவுக்கு வழங்கப்பட்ட கேள்விக் கொத்தை உரிய காலத்தில் அனுப்பாததன் காரணமாகத்தான் அது தாமதமாகியது. தற்பொழுது அது கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் முன்மொழியப்பட்ட விடயங்களை உள்ளடக்கி இன்னும் சில விஷயங்களையும் சேர்த்து ஓர் ஒட்டுமொத்தமான அறிக்கை தயாரிக்கப்பட்;டிருக்கின்றது. 

ஓர் இடைக்கால அறிக்கையையாவது தந்துதவ முடியுமா என நான் கேட்டபோது, அதற்குப் பதிலாக நீதியரசர் மர்ஸூப் அவ்வாறான இடைக்கால அறிக்கையில் பயன் இராது என்றும், அது முழுமையான அறிக்கையாக அமைவதோடு, அதனை நான் நீதியமைச்சராக பதவி வகிக்கும் காலத்திலேயே செயலுருப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகவுள்ளன என்றார்.  

திருத்தங்கள் சிறப்பாக உள்வாங்கப்படுவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியதோடு முன்னாள் சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அஸீஸ், பாயிஸ் முஸ்தபா ஆகியோரும் இதில் உரிய பங்களிப்பை செய்திருக்கின்றனர். 

அவர்கள் காதிமாரின் சமூக அந்தஸ்தை உயர்த்துவதற்கு அரும்பாடுபட்டிருக்கின்றனர். அந்தஸ்த்து குறித்த பிரச்சினையால் காதி நீதிவான்களான நீங்கள் நிறைய உள ரீதியாக பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றீர்கள். 

இதனையும் வருடாந்த ஆள்சேர்ப்பு நடைபெறும் பொழுது, மஜிஸ்ரேட் நீதிவான்களை நியமிக்கும் பொழுது காதிமாரின் பொறுப்புக்களையும் நிறைவேற்றக்கூடிய சிலரையும் உள்வாங்குவது சிறப்பாக இருக்குமென்ற அபிப்பிராயத்தை நான் நீதியரசர் சலீம் மர்ஸூம் மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழு உயர்அதிகாரிகளுடனும் பகிர்ந்து கொண்டேன். புதிய நீதியரசருடனும் இதைபற்றி நாம் கலந்துரையாடலாம். 

நல்லிணக்கம், மத்தியஸ்தம் போன்ற அம்சங்கள் குறித்தும் நாம் உரிய கவனத்தைச் செலுத்தி வருகிறோம். 

காதி நீதிவான்களின் திறன்களை வளர்த்தல் சம்பந்தமாகவும் விரிவாகவும் விவாகம் விவாகரத்து விஷயங்களில் அவற்றிற்கான தீர்வு முயற்சிகளில் பயிற்றுவிப்பவர்களை அடையாளம் கண்டு, அந்த விஷயத்தில் ஒரு பயிற்சி நெறியை நடாத்துவது பற்றி இங்கு எடுத்துக் கூறப்பட்டது. அது விஷயத்தில்தான் நீதியமைச்சு உரிய கவனம் செலுத்தும். 

அடுத்த மாதம் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களையும் உள்ளடக்கி 'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சி நடாத்தப்படும் சந்தர்ப்பத்தில் எமது அமைச்சு அதனோடு இணைந்ததாக காதி நீதிவான்களுக்கான ஒரு பயிற்சி வகுப்பை அமைச்சினூடாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளேன். அதை நீதிச் சேவை ஆணைக்குழுவின் ஊடாக செய்வதற்கு தீர்மானித்துள்ளோம். 

காதி நீதவான்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் தீர்வையற்ற வாகன கொள்வனவுக்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் என்னிடம் இதர கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. அதைபற்றி மிகவும் சாதகமாக பரிசீலிக்கப்படும்.  

முஸ்லிம் பெண் ஒருவரின் திருமண வயதெல்லை பற்றித் தீர்மானிப்பது மிகவும் முக்கியமானது. இதனையும் முஸ்லிம்களுக்கு எதிரான விஷமப் பிரசாரத்தின் ஓர் அங்கமாக முன்னெடுத்து வருகின்றனர். முஸ்லிம் சமூகத்தினர் ஏனைய சமூகத்தினரை விட சனப் பெருக்கத்தை ஏதேதோ பாணிகளில் மேற்கொள்கின்றனர் என்ற விஷமக் கருத்தும் பரப்பப்படுகின்றது. 
இவற்றை விட சிறு வயதினர் கற்பழிப்புக்குள்ளாகி வயது வித்தியாசம் காரணமாக சிறையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதற்கும் குற்றவியல் சட்டத்தில் சட்டதிருத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது.  அண்மைய எனது வெளிநாட்டுப் பயணங்களின் போது குவைத், கட்டார் நீதியமைச்சர்களை சந்தித்து உரையாடிய போது, காதி நீதவான்களுக்கான விசேட பயிற்சிநெறியை அந் நாடுகளில் வழங்குவது குறித்து விரிவாக ஆராய்ந்திருக்கின்றேன். 

விமான கட்டளைச் செலுவுகளை எமது அரசு பொறுப்பேற்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இதர செலவுகளை அந் நாட்டு அரசாங்கங்கள் கவனித்துக்கொள்ளும். 

நீதிச்சேவை ஆணைக்குழுவோடு கதைத்து சில உடன்பாடுகளை எட்டியுள்ளோம்;. இருதரப்பு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. 

பராமரிப்பு போன்ற விவகாரங்களில் தலைதூக்கும் போது குழந்தையின் பெற்றோரை தீர்மானிக்கும் டீஎன்ஏ பரிசோதனை முக்கியத்துவம் பெறுகிறது. அதற்கான பரிசோதனை கூடமொன்று எனது அமைச்சின் கீழ் வரும் இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் நிறுவப்பட்டுள்ளது. 
இறுதியாக இவ்வாண்டுக்குள் முஸ்லிம் விவாகம், விவாகரத்துச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்றார்.  

டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர் 


1 comment:

  1. He always willing to get like this never mind about the Muslim Umma why our Umma doing like this, when this people will learn after war

    ReplyDelete

Powered by Blogger.