முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் நிவாரணம், சலுகைகள் சிங்கள மக்களுக்கு கிடைப்பதில்லை
முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் வழங்கப்படும் நிவாரணம், சலுகைகள் சிங்கள மக்களுக்கு கிடைப்பதில்லை. வடக்கு யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ், முஸ்லிம் மக்கள் மட்டுமல்ல. சிங்கள மக்களும் தான். அரசாங்கம் சிங்கள மக்களுக்கு உரிய வழி செய்ய வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய வேண்டுகோள் விடுத்துள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கென அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்கள் அரசினூடாக பண உதவிகளையும் வீடுகளையும் வழங்குகிறது. அதேபோல வடக்கில் முஸ்லிம் குடியேற்றமும் நடக்கிறது. மீள்குடியேற்றத்திற்கு எவ்விதத்திலும் சம்பந்தப்படாத அமைச்சர் ரிசாத் பதியூதீன் முஸ்லிம் மக்களுக்கான மீள்குடியேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றார் என ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான நிஷாந்த சிறிவர்ணசிங்க தினக்குரலுக்கு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியாவது; அவர் சிங்கள மக்களுக்கென வடக்கு கிழக்கில் எந்தவொரு சலுகையும் வழங்கப்படவில்லை. எனவே, அவர்களுக்காக நாங்கள் அரசிடம் கதைக்கவுள்ளோம். ஆனால், நாங்கள் ஜெனீவாவுக்கு செல்லமாட்டோம். உள்நாட்டு பிரச்சினையை உள்நாட்டிலேயே தான் பேசித் தீர்க்க வேண்டும்.
வடக்கில் முஸ்லிம்களை குடியமர்த்துவதற்காக சவூதி அரேபியா போன்ற முஸ்லிம் நாடுகள் நிதி வழங்குகின்றன. வீடுகளும் அமைத்து கொடுக்கின்றன. தமிழ் மக்களுக்கென 50ஆயிரம் வீடுகளும் கட்டிக்கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
வடக்கில் தமிழ், முஸ்லிம்களுக்கு கிடைக்கும் சலுகைகள், சிங்கள மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். சிங்களவர்களுக்கான உரிமையை ஜாதிக ஹெல உறுமய பெற்றுக்கொடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment