Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம் பிரதிநிதிகளுடன் இந்திய உயர் ஸ்த்தானிகர் சந்திப்பு (படம்)



யாழ்ப்பாணம் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடன் இந்திய உயர்ஸ்த்தானிகர் அசோக் ஏ.காந்தா அவர்கள் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றினை 24-பெப்ரவரி 2013 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தில் நடாத்தினார். மேற்படி சந்திப்பிற்கு யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் விஷேடமாக அழைக்கப்படிருந்தனர். சம்மேளனத்தின் தலைவர் நிலாம், முன்னை நாள் தலைவர்களான சகோ. தாஹிர், சகோ.ஜமால், உப தலைவர் சகோ.லாபிர் யாழ் மாநகர சபை உறுப்பினர் ஷரபுல் அனாம், மற்றும் சம்மேளனத்தின் ஸ்த்தாபக செயலாளர் அஷ்-ஷெய்க் அஸ்மின் அய்யூப் ஆகியோர் குறித்த சந்திப்பில் முஸ்லிகள் சார்பாக கலந்துகொண்டனர்.

முஸ்லிம் பிரதிநிதிகள் சார்பாக சம்மேளனத்தின் ஸ்த்தாபக செயலாளர் அஷ்-ஷெய்க் அஸ்மின் அய்யூப் ஒரு சில கருத்துக்களை குறித்த சந்திப்பின்போது பகிர்ந்துகொண்டார். அதன்போது,,

இவ்வாறான ஒரு சந்திப்பிற்கு எம்மை அழைத்தமைக்கு நன்றி தெரிவித்து, இது எமது முதலாவது சந்திப்பல்ல இதற்கு முன்னரும் நாம் பல சந்தர்ப்பங்களில் சந்தித்திருக்கின்றோம், எமது பிரச்சினைகளை உங்களின் முன்னிலையில் எடுத்துரைத்திருக்கின்றோம். ஆனால் இன்றைய சந்தர்ப்பம் சற்று வித்தியாசமானது. தமிழ் சமூகத்தின் சிவில் சமூகத்தலைவர்கள் முன்னிலையில் எமது பிரச்சினைகளை எடுத்துரைக்கும் வாய்ப்பு சிறப்பானது. 

நாம் உங்களிட தீர்வினை எதிர்பார்த்தவர்களாக இந்தக்கருத்துக்களை முன்வைக்கவில்லை மாற்றமாக இங்கே நிலவும் நிலைமைகளை உங்களுக்கு அறியத்தருக்கின்றோம். 

1990களில் நாம் இங்கிருந்து மிகப்பலவந்தமான அமைப்பில் வெளியேற்றப்பட்டோம், தற்போது மீள்குடியேறுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்திய அரசும் மீள்குடியேற்றத்திற்காக ஏராளமான அபிவிருத்தித்திட்டங்களை உதவியாக முன்வைக்கின்றது. மீள்குடியேறும் போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவரும் சமமாகவே மதிக்கப்படவேண்டும். எல்லோருக்கும் பாதிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன, ஒருவருடைய பாதிப்பு இன்னுமொருவருடைய பாதிப்பை விட கூடுதலானதோ அல்லது குறைவானதோ அல்ல, இவ்விடத்தில் பாரபட்சம் காட்டப்படுமாக இருப்பின் அது ஏற்றத்தாழ்வுள்ள சமூக அமைப்பை உருவாக்கும். மீள்குடியேற்ற செயற்திட்டத்தில் தேவைகளையும் நிலைமைகளையும் வைத்து முன்னிலைப்படுத்துதல் இடம்பெற முடியும் மாறாக பாதிப்புகளை வைத்து தரப்படுத்தக்கூடாது. 

இங்கே தமிழ் உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன அவர்களுடைய பாதிப்புகள் முஸ்லிம் சமூகத்தின் பாதிப்புகளை விட கூடுதலனாதோ அல்லது குறைவானதோ என்று கூறுவது சிறப்பானதல்ல. ஆனால முஸ்லிம் சமூகத்தின் தேவைகள் வித்தியாசமானது பாதிப்புக்குள்ளான தமிழ் சமூகத்தின் தேவைகள் வித்தியாசமானது. யாழ்ப்பாணம் முஸ்லிம்  சமூகம் தனது மிகவும் அடிப்படையான தேவையாக வீட்டுத்திட்டங்களையே வேண்டி நிற்கின்றனர். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் ஊக்குவிக்கப்படுவதற்கும் யாழ்ப்பாணத்தின் முஸ்லிம் சமூகம் பாதுகாக்கப்படுவதற்கும் வீட்டுத்திட்டம் பிரதானமாகும். 

இதுவிடயமாக நாம் அரச அதிகாரிகளுடன் பேச்சுகளை நடத்தினோம், குறிப்பாக யாழ்ப்பாண பிரதேச செயலளாருடன் பேச்சுக்களை நடாத்தினோம். 2011ல் 168 பயனாளிகளை உள்ளடக்கிய இந்திய வீட்டுத்திட்ட பயனாளிகள் என ஒரு அட்டவணையினை பிரதேச செயலாளர் எமக்குத் தந்தார். பின்னர் 2012ல் குறித்த பயனாளிகள் தெரிவில் குறைபாடுகள் காணப்படுகின்றன என்று கூறி 163 பேர்களின் விபரங்கள் அடங்கிய பிரிதொரு ஆவணத்தை பிரதேச செயலாளர் எமக்குத் தந்தார், தற்போது வீட்டுத்திட்டத்திற்காக மீண்டும் பயனாளிகளைத் தெரிவு செய்யவேண்டும் முன்னைய தெரிவுகள் ஒழுங்கற்றவை என்கின்றார். வலிகாமம் பிரதேச செயலகங்கள் இந்திய வீட்டுத்திட்ட பயனாளிகளின் விபரங்களி வெளியிட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் பிரதேச செயலளார் அதற்கான ஆரம்ப முயற்சிகளைக் கூட மேற்கொள்ளவில்லை. இதனை நாம் முஸ்லிம்கள் இந்திய வீட்டுத்திட்டத்தில் இருந்து முற்றாக புறக்கணிக்கப்படுவதற்கான சதித்திட்டமாகவே நோக்குகின்றோம். 

அது மாத்திரமல்ல இந்திய அரசினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட எத்தனையோ அபிவிருத்தி செயற்திட்டங்களில் முஸ்லிம்கள் பயன்பெறாது தடுக்கப்பட்டுள்ளார்கள் அல்லது தவிர்க்கப்பட்டுள்ளார்கள். இதற்கு பிரதேச செயலாளர் முக்கிய காரணியாக செயற்பட்டுள்ளார் என்பதையும் இவ்விடத்தில் உங்களின் கவனத்திற்கு முன்வைக்கின்றேன் என்று கூறி இதுவரை காலமும் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகள் குறித்த முழுமையான ஆவணங்களையும், எமது எதிர்பார்ப்புகள் உள்ளடங்கிய மகஜர் ஒன்றினையும் இந்திய உயர் ஸ்த்தானிகரிடா கையளித்தார்.

இதற்கு பதிலளித்த உயர்ஸ்த்தானிகர்: உங்களின் பிரச்சினைகள் நியாயமானவை என்பதை நான் அறிகின்றேன். இந்திய உதவித்திட்டங்கள் எதுவும் இனரீதியான பாகுபாடுகளை உள்ளடக்கியத்தல்ல அது தேவையானவர்களுக்கு முதலிடம் என்பதை அடிப்படையாகக் கொண்டது. எமது பொதுவான தரப்படுத்தல் முறைமைக்குள் உள்ளடங்கும் அனைவருக்கும் நாம் உதவித்திட்டங்களில் உள்ளடக்கும்படி பணித்திருக்கின்றோம். புதிய அகதிகள், பழைய அகதிகள் என்ற பாகுபாடும் நீக்கப்பட்டுள்ளது, அரச ஊழியர்களையும் இத்திட்டத்தில் இணைக்கும்படி நாம் கேட்டிருக்கின்றோம், சிங்களவர்களையும் நாம் இணைத்திருக்கின்றோம் இந்திய வீட்டுத்திட்டத்தில் இதுவரைக்குமான பயனாளிகளில் 10%மானவர்கள் முஸ்லிம்கள். எனவே எதிர்காலங்களிலும் இவ்வாறு நாம் இணைத்துக்கொள்வோம். 

அரச நிறுவனங்களில் இவ்வாறன முறைகேடுகள் அல்லது பாகுபாடுகள் இருக்கின்றனவா என ஆராய்ந்து எம்மால் நடவடிக்கை எடுக்க முடியாது. இதற்காகவே எமது செயற்திட்டங்களை அரச நிறுவனங்களின் ஊடாக மேற்கொள்ளாமல் சர்வதேச நிறுவங்களை நாம் பணிக்கமர்த்தியிருக்கின்றோம். UN Habitat, International Foundation f Red Cross, SLRC போன்ற அமைப்புகள் இந்திய வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளன, எனவே உங்கள் சமூக அமைப்பு அவர்களுடன் நேரடியாகத் தொடர்புகளை ஏற்படுத்தி உங்கள் வீட்டுத்தேவைகள் குறித்த ஆவணங்களை அவர்களிடம் கையளியுங்கள், அவர்களினூடாக நீங்கள் வீட்டுத்திட்டத்திற்கு நேரடியாக விண்ணப்பிக்க முடியும். யாழ்ப்பாணம் இந்திய தூதரக துணைக்காரியாலயம் அதற்கான உதவிகளை உங்களுக்குப் பெற்றுத்தரும். எனவே நீங்கள் நேரடியாக இவ்விடயத்தில் எம்மோடு இணைந்து பங்காற்ற முடியு, அதற்கு உங்களை நான் அழைக்கின்றேன். என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.