அம்பறையின் முஸ்லிம் பகுதிகளில் சுதந்திதின நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)
(ஏ.எல்.நிப்றாஸ்)
இலங்கையின் 65 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் அம்பாறை மாவட்டத்திலுள்ள அரச நிறுவனங்கள் பலவற்றிலும் இன்று காலை வேளையில் இடம்பெற்றன. அரச உயரதிகாரிகள் ஊழியர்கள் அதிகமானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள், உள்ளுராட்சி மன்றங்கள், அரச நிறுவனங்களில் காலையில் விஷேட நிகழ்வுகள் இடம்பெற்றன. ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க பிரதேசமெங்கும் தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.
சுதந்திர தினமானது தேசிய அரச, வர்த்தக விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த போதிலும், நிறுவன உயரதிகாரிகளின் விஷேட வேண்டுகோளுக்கிணங்க ஊழியர்கள் சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்குபற்றியிருந்தனர். தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன் நிறுவன தலைமை அதிகாரிகளின் முன்னிலையில் ஊழியர்கள் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட அலுவலகம் ஏற்பாடுசெய்திருந்த சுதந்திர தின நிகழ்வுகள் நிந்தவூரில் அமைந்துள்ள மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.ஏ.ஜாபீர் தேசிய கொடியை ஏற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.
இதேவேளை, அம்பாறை நகர், அக்ககரைப்பற்று, கல்முனை போன்ற பிரதேசங்களில் அன்னதான சாலைகள் பலவும் நிறுவப்பட்டிருந்ததுடன் இரத்ததானம், விளையாட்டுப்போட்டி மற்றும் கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
...................................................
இலங்கையின் 65 ஆவது தேசிய சுதந்திர தின விழா நிகழ்வுகள் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி அல்ஹாபிழ் என்.எம். அப்துல்லா மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதன் பின்னர் பிரதம அதிதி தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். இதன்போது தேசிய கல்விக் கல்லூரியில் மாணவிகளினால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பீடாதிபதி மற்றும் உப பீடாதிபதிகளான எம்.ஏ.கலீல், எஸ்.எல்.எஸ்.ஏ.சத்தார், எம்.எச்.எம்.மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று twoknowledge நிறுவனம் இலங்கையின் 65வது சுதந்திர தினத்தை கொண்டாடு முகமாக விழா நிகழ்வு ஒன்றினையும் ஊர்வலத்தினையும் நடாத்தியது.
கிறாத்துடன் ஆரம்பமான விழா நிகழ்வில் தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல் என்பன இடம் பெற்றன. தேசியக் கொடியை தரம் மூன்றைச் சேர்ந்த மாணவர்கள் ஏற்றி வைத்தனர். இந்நிகழ்வை நிறவனத்தின் அதிபர் சகோதரி ஸுமைறா முஹம்மத் புஹாரி நடாத்தி வைத்தார்.
தொடர்ந்து பிள்ளைகளுடன் பெற்றோரும் இணைந்து ஊர்வலம் ஒன்றை நடாத்தினர். தேசியக் கொடியையும் வண்ண பலூன்களையும் ஏந்திய வண்ணம் மூன்று வயது முதல் எட்டு வயது வரையான பிள்ளைகள் இதில் பங்கு கொண்டனர்.
Post a Comment