Header Ads



அறிஞர் சித்திலெப்பையின் வீட்டை பாதுகாக்க முஸ்லிம்கள் முன்வருவார்களா..?


(இக்பால் அலி)

அறிஞர் சித்திலெப்பை பற்றிய நினைவுகளும் அவரது சேவைகளும் மங்கிச் செல்லும் கால கட்டத்தில் அவரது நினைவு தினம் அவர் பேரில் இயங்குகின்ற பாடசாலையில் இன்று கொண்டாடப்படுவது மகிழ்ச்சியான செய்தியாகும். அவர் நினைவு தினத்தை  இவ்வளவு விமர்சையாக ஏற்பாடு செய்த அதிபரையும் ஏற்பாட்டுக் குழுவினரையும் பாராட்டுவது முக்கியமாகும். மத்திய மாகாணத்தில் கண்டியில் பிறந்த சித்திலெப்பை முஸ்லிம்களின் முழு வாழ்வையும் எதிர்காலத்தையும் மறுமலர்ச்சிக்கு இட்டுச் சென்ற ஒரு பெரிய செயற்பாட்டாளர் என்று பேராதனை பல்கலைக்கழக மெய்யியல்துறைப் பேராசிரியர் கலாநிதி எம். எஸ் எம். அனஸ் தெரிவித்தார்.

கண்டி சித்திலெப்பை மஹா வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் சித்திலெப்பை ஞாபகார்த்த நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில்  06-02- 2013  பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பேராசிரியர் கலாநிதி எம். எஸ் எம். அனஸ் அங்கு இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,,

பெரும்பாலும் சித்திலெப்பை தமது போராட்டங்களை தனி நபராக எடுத்துச் சென்றார். பழமை மரபுகளில் இருந்து இன்னும் விடிவு பெறாத ஒரு காலப்பகுதியில் அவரது சேவைகள் ஆரம்பமாகின. 19ம் நூற்றாண்டில் இலங்கையில் மட்டுமன்றி தென்கிழக்காசியாவிலும் முஸ்லிம்கள் எண்ணற்ற பிரச்சினைகளை எதிர்நோக்கினர். அவற்றுள் அதிகமான பிரச்சினைகள் எல்லா இடத்திலும்  பொதுவானதாக இருந்தன. மாறும் காலத்தை நோக்கிய சமூக மாற்றம் ஒன்றுக்கு சமூகம் தயாராக வேண்டும் அல்லது தயார்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் அன்றிருந்த முக்கிய தேவையாகும். 

நவீன கல்வி, நவீனத்துவம், பொருளாதாரம், நாகரிகம், நவீன அரசியல் போன்ற பல விடயங்களில் முன்னேற்றமின்மையின் அடையாளங்கள் தெளிவாக தெரிந்த காலம் அது. அந்நிய ஆதிக்க ஆட்சி முறைகளின் மாற்றங்களினால் இலங்கை சமூகத்தில் திருப்பு முனை மிக்க மாற்றங்கள் 1850ம் ஆண்டுகளிலேயே ஆரம்பமாகிவிட்ட ஒரு புதிய சூழ்நிலையில் முஸ்லிம்கள் இதை எவ்வாறு எதிர்கொள்வார்கள் அல்லது எதிர்கொள்ள வேண்டும் என்பது ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்தது. இவ்வாறான பல பிரச்சினைகள் முஸ்லிம் சமூகத்தை அச்சுறுத்திய நேரத்தில் சித்திலெப்பை தனிநபராக முஸ்லிம்களின் எதிர்காலத்திற்கான மாற்றுத் திட்டங்களையும் காலத்திற்கு ஏற்ற விதமான சீர்திருத்தங்களையும் முஸ்லிம் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்தார். 

முழு தென்கிழக்காசியாவையும் எடுத்து நோக்கினாலும்கூட சித்திலெப்பை தனது சேவைகளைத் தொடங்கிய 1860ம் ஆண்டுகள் இந்த பிராந்தியத்திற்கே சித்திலெப்பையின் சேவைகள் தனித்துவமானவை என்று கூறலாம். அவ்வாறான தலைவர்கள் முஸ்லிம் சமூகத்தில் காண்பது கடினமானதொரு காலப்பகுதியில் அவரது சேவைகள் நடைபெற்றன. 

சித்திலெப்பை அவரது குடும்ப பின்னணில் செல்வந்த வகுப்பைச் சேர்ந்தவர். அவரது தந்தை அரபு வம்ச வழியைச் சேர்ந்தவர். அரபு வர்த்தகர். கழுத்துறையில் வர்த்தக தொடர்புகளில் முக்கியமானவராக இருந்தவர். அவரது மூன்றாவது அல்லது நாலாவது தலைமுறை வரையும் அந்த வர்த்தகச் செல்வாக்கு சித்திலெப்பையின் குடும்பத்திற்குரியதாக இருந்தது. 

சட்டக் கல்வி கற்று சட்டவாதியாக தனது தொழிலை ஆரம்பித்த சித்திலெப்பை நினைத்திருந்தால் கண்டியில் மிகப்பெரிய செல்வந்தர் என்ற பெயரை பெற்றிருக்க முடியும். மாறாக சித்திலெப்பையின் எண்ணங்கள் வேறுவிதமாக இருந்தன. சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும் அதற்கான போராட்டங்களை சாத்வீகமான முறையில் முன்னெடுப்பதும் அவரது இரத்தத்தில் ஊறிய பண்புகளாக இருந்தன. தனது வருமானம் சட்டவாதித் தொழில் எல்லாவற்றையுமே புறக்கணித்து விட்டு முஸ்லிம் சமூகத்திற்கான முழு நேர சேவையாளனாக அவர் மாறினார். தமது செல்வத்தின் பெரும்பகுதியை தமது இலட்சியங்களுக்காகவும் சமூக முன்னேற்றத்திற்காகவும் எவ்வித தயக்கமும் இன்றி செலவு செய்தார். 

அவர் ஆரம்பித்த பள்ளிக்கூடங்கள் பலவற்றிற்குத் தேவையான நிலம், செலவுக்கான பணம் அவரது சொந்த கஜானாவில் இருந்து அள்ளி இறைக்கப்பட்டதாகும். கண்டியிலும் குருனாகலையிலும் அவர் உருவாக்கிய பாடசாலைகள் நவீன கல்வியின் ஆரம்பக் கல்விக் கூடங்களாக அமைந்திருந்தன. மாணவிகளும் பெண் தலைமை ஆசிரியர்களும் அவருடைய பள்ளிக்கூடங்களில் 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலேயே பங்கு கொள்ளத் தொடங்கி விட்டனர் அதாவது சித்திலெப்பை பெண்கல்வியின் மிகப்பெரும் முன்னோடியாக விளங்கினார் என்பது இதன் பொருளாகும். 

சித்திலெப்பையின் சேவைகளை கல்விப்பணி என்ற ஒரு வட்டத்திற்குள் மாத்திரம் சிறைவைத்துவிட முடியாது. சித்திலெப்பையினுடைய முயற்சிகளும் அவரது போராட்டங்களும் நாம் நினைத்திருப்பதை விட பரந்தவை, ஆழமானவை. சமூக மாற்றம் என்பது அவரது அசையாத குறிக்கோளாக இருந்தது. 20ம் நூற்றாண்டை நோக்கிய புதிய யுகத்திற்கு முஸ்லிம்களை வழிநடத்தும் பெரிய பொறுப்பை அவர் தாமாக சுமந்து கொண்டார். அது ஒரு இலகுவான பணியல்ல. பழமைவாதமும் பழம் சம்பிரதாயங்களும் மண்டிக்கிடந்த ஒரு காலப்பகுதியில் அவற்றை எதிர்த்துப் போராடுவது சாதாரண விடயமுமல்ல. அவருக்கு எதிரான பல குழுக்களும் கோஷ;டிகளும் இயங்கியதோடு அவரது அநேக முயற்சிகளை தடுப்பதிலும் பலர் ஈடுபட்டனர். இவை அனைத்திற்கும் எதிராக இயங்கி பல துன்பங்களுக்கு மத்தியில் முஸ்லிம்களுக்கான ஒரு முன்னேற்றமான பாதைக்கு வழிவகுத்ததோடு தனது இலட்சியங்களையும் சாதனைகளையும் நிறைவேற்றினார். அவர் ஒரு நாவல் ஆசிரியர், பத்திரிகையாளர், பல மொழிப் பாண்டித்தியம் உள்ளவர், சட்டத்துறை அறிஞர், சூபித்துவ அறிவில் இலங்கையிலேயே அக்காலத்தில் மிகப் பெரும் அறிவாளியாக விளங்கியவர். அதற்காக நூல்களையும், சஞ்சிககைகளையும் வெயிட்டவர் என்று அவரைப் பற்றி ஒரு தொடர் பட்டியலை வரிசைப்படுத்த முடியும். 

சித்திலெப்பையின் பல் பரிமாணங்களில் முக்கியமானது அவரது அரசியல் கருத்துக்களும் போராட்டங்களுமாகும். இலங்கையின் சுதந்திரத்திற்கும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பொதுப் பணிகளுக்கும் முஸ்லிம்கள் சாதித்தது என்ன? என்று இன்று கேட்கப்படும் கேள்விகளுக்கு சித்திலெப்பையின் அரசியல் பணிகள் அல்லது சேவைகள் மிகச்சிறந்த தேசிய அடையாளமாகவும் பங்களிப்புக்களாகவும் அமைந்திருப்பதை நம்மில் பலர் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. 1882ம் ஆண்டு அவர் தொடங்கிய முஸ்லிம் நேசன் ஒரு செய்திப் பத்திரிகை மட்டுமல்ல. அது சமூக அரசியல் சீர்திருத்த ஏடு. அவரது அரசியல் கருத்துக்களை மக்களுக்கு முன்வைத்த முக்கியமான பத்திரிகை முஸ்லிம் நேசன். 

ஒரு பத்திரிகையானது சமுதாய நோக்கில் அதன் அரசியல் பணியை  எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதற்கு சித்திலெப்பையின் முஸ்லிம் நேசன் ஒரு சிறந்த எடுத்துக் காட்டான பத்திரிகையாகும். 1880களில் அப்போதிருந்த சட்டநிரூபன சபை அரசாங்க முறையில் உள்ள குறைபாடுகளை முஸ்லிம் நேசன் சுட்டிக் காட்டியது. ஆங்கில ஏகாதிபத்திய குழுவினர் தமக்காக மாத்திரம் அல்லது தமது இலட்சியங்களை நிறைவேற்றுவதற்காக மாத்திரம் அந்த சட்ட நிரூபன சபையை நடத்தி வருவதாகவும் அது தவறான ஒரு நடைமுறை என்றும் சித்திலெப்பை முஸ்லிம் நேசனில் பகிரங்கமாக எழுதினார். சிறுபான்மை இனங்களுக்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினருக்கு எந்தவொரு பிரதிநிதியும் அந்த சபையில் இல்லாதிருப்பதை மிகக் கவலையோடு சுட்டிக் காட்டினார். அங்கு சமர்ப்பிக்கப்படும் நிதி அறிக்கைளில் அவர் குறை கண்டு பிடித்தார். வெள்ளைக்கார துரைமார்களுக்கு அவர்களது சுககோகங்களுக்கு உதவும் வகையில் நிதி கையாளப்படுவதாக தனது பத்திரிகையில் ஆதாரங்களோடு வெளிப்படுத்தினார். இந்தப்பணம் இலங்கை மக்களின் பணம் என்றும் இது இலங்கை மக்களுக்காகவே செலவழிக்கப்பட வேண்டும் என்றும் பலமுறை சுட்டிக்காட்டினார். 

இவ்வாறு சித்திலெப்பை ஏறத்தாழ ஒரு சமூக அரசியல் கிளர்ச்சியாளனாக செயல்பட்டார் என்தை எடுத்துக் காட்ட பல ஆதாரங்களையும் சம்பவங்களையும் குறிப்பிட முடியும். மக்களின் அறிவு மலர்ச்சிக்காகவும் கல்வி வளர்ச்சிக்காகவும் மாத்திரம் அன்றி அரசியல் விளிப்புணர்ச்சிக்காகவும் அவர் குரல் கொடுத்தார். இன்று நாம் எழுப்ப வேண்டிய கேள்வி இவற்றை எவ்வளவு தூரம் சித்திலெப்பையின் பங்களிப்பாக இன்றைய தலைமுறையினருக்கு நாம் விளக்கமளித்திருக்கிறோம்; என்பது கவலைக்கிடமானதாகும். சித்திலெப்பை பெயரிலுள்ள இந்தப் பாடசாலையில் சித்திலெப்பையின் பிறந்த தினம் எது என்று கேட்டாலோ அல்லது அவர் எழுதிய நாவல் எது என்று கேட்டாலோ யாரும் பதில் சொல்வார்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. அது அவர்களது தவறும் அல்ல. 

சித்திலெப்பையை அறிமுகப்படுத்துவதில் அவரது சேவைகளைக் கொண்டாடுவதில் போதிய முயற்சிகள் இல்லாமை முழு சமூகத்திற்குமான கவலையாக மாற வேண்டும். இந்தளவு சேவையாற்றிய ஒரு பெருமகனை வேறெந்த சமூகம் பெற்றிருந்தாலும் அவனுக்கு வழங்கப்படும் கௌரவமும் பெருமையும் சொல்லில் வடிக்க முடியாத அளவு உயர்வானதாக இருந்திருக்கும். இலங்கையின் புகழ்பெற்ற சிங்கள எழுத்தாளர் இலக்கியவாதி  மார்ட்டின் விக்கிரமசிங்கவின் நினைவை இந்த நாடும் அரசும் சிங்கள மக்களும் கொண்டாடும் விதத்தை மாத்திரம் நாங்கள் அறிந்தால் போதும் நாம் எவ்வளவு தூரம் பின்னால் உள்ளோம் என்பதை அறிந்து கொள்வதற்கு. 

சித்திலெப்பையின் நினைவை பல சந்ததிகளுக்கு கொண்டு செல்லக்கூடியதாகவும் தேசிய அளவில் எல்லோரது கவனத்தையும் கவரக்கூடியதாகவும் ஆசியக் கண்டத்திலேயே ஒரு ஆச்சரியமான செயல்வீரனாக அவரை சித்தரிக்கக்கூடியதாகவும் பல விடயங்கள் நம் கண்முன் இருந்தும் அவற்றை நாம் கானாதவர்கள் போல் இருந்து வருவது பெரும் கவலைக்குரியதாகும். அவரது முஸ்லிம் நேசன் பத்திரிகை அது வெளிவந்த மத்திய மாகாணத்திலேயே இன்று காணக்கூடிய நிலையில் இல்லை. 

அவர் வாழ்ந்த மாளிகை போன்ற வீடு மஹிய்யாவைக்கு அருகில் கம்பீரமாக இன்றும் காட்சி தருகின்றது. அது கண்டி மக்களுக்கும் இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்கும் உரிய செல்வம் மாத்திரம் அல்ல இலங்கைத் தேசத்தினுடைய சொத்துமாகும். அதை சித்திலெப்பையின் பெயரில் ஒரு முஸ்லிம் கலாசார மையமாக மாற்றி ஒரு வரலாற்று சேவையை மத்திய மாகாண முஸ்லிம்களால் செய்ய முடியுமா அல்லது உலகின் எந்தவொரு செல்வந்த நாடோ செல்வந்தர்களோ முன்வந்து அந்த வீட்டை பாதுகாக்கும் ஒரு முயற்சியில் வெற்றிபெற உதவுவார்களா என்பது இன்றைய தினத்தில் நான் எழுப்பும் கவலை மிகுந்த ஒரு கேள்வியாகும். 

இந்நிகழ்வில் கண்டி ஒராபி பாஷ கலாசார நிலையத்தின் பணிப்பாளர் எஸ் சலீம்தீன், வர்த்தகப் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




2 comments:

  1. Jazakallah for your valuable words.

    ReplyDelete
  2. May Allah give success to those who seek to preserve his enlightened thought and contributions.

    ReplyDelete

Powered by Blogger.