யாழ்ப்பாண முஸ்லிம் மண்ணைப் பாதுகாப்போம்...!
யாழ் முஸ்லிம் மீள்குடியேற்றத்திற்கான சிவில் சமூக முன்னெடுப்புகள்” செயற்திட்டத்தின் சுருக்க அறிமுகம்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்கள் இலங்கையின் முக்கியத்துவம் மிக்க பிரதேசங்களாகும் இப்பிரதேசங்களின் முஸ்லிம் இருப்பானது இலங்கைத் தேசிய முஸ்லிம் சமூகத்தின் இருப்பில் முக்கிய செல்வாக்குச் செலுத்தும் காரணியாகவும் அமைகின்றது. இலங்கையின் வரலாற்றில் ஆரம்ப காலங்களில் முஸ்லிம்களின் குடியிருப்புகள் காணப்பட்ட பிரதேசங்களில் யாழ்ப்பாணமும் ஒன்றாகும். ஒரு தொன்மையான முஸ்லிம் வரலாற்றைக்கொண்ட பிரதேசத்தில் இருந்து முஸ்லிம்கள் 1990களில் பலவந்த வெளியேற்றத்தை எதிர்கொண்டார்கள். அப்போது அது ஒரு வரலாற்றுத்தவறாகவும், முஸ்லிம்கள் தம்மை வெளியேற்றிய புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்திருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டது. எனினும் அப்போதிருந்த முஸ்லிம் சமூகத்தின் பலவீனமான நிலையின் காரணமாக அவ்வாறான ஒரு எதிர்த்தாக்க்குதல் நடாத்தப்படவில்லை. 2009களில் யுத்த முடிவினைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியேறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும் தற்போது இப்பிரதேசங்களில் தற்போது முஸ்லிம்களின் இருப்புக்கான சவால்கள் தோன்றியுள்ளன.
இத்தகைய சவால்களுக்கான முக்கிய காரணிகளாக
 இலங்கை அரசின் பழைய அகதிகள், புதிய அகதிகள் என்னும் பிரிப்பு முறையினால் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறும் முஸ்லிம்களுக்கு எவ்வித அரச, அரச சார்பற்ற உதவிகளும் வழங்கப்படுவதில்லை
 தமிழ் உயர் அதிகாரிகளினால் மீள்குடியேறும் முஸ்லிம்கள் முற்றாகப் புறக்கணிக்கப்படுகின்றமை
 முஸ்லிம் பிரதேசத்தின் காணிகள் அந்நியர்களால் விலைக்கு வாங்கப்படுகின்றமை
 யாழ்ப்பாண முஸ்லிம்களிடம் மீள்குடியேற்றம் குறித்த அவநம்பிக்கை தோன்றியிருக்கின்றமை
 இலங்கை முஸ்லிம்களிடம் யாழ்ப்பாண முஸ்லிம்கள் குறித்த போதிய கவனம் காணப்படாமை
இத்தகைய சவால்களை எதிர்கொள்வதற்கு திராணியற்றவர்களாக யாழ்ப்பாண முஸ்லிம்கள் இருக்கின்றார்கள் என்ற கசப்பான உண்மையினை இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.
வெளியேற்றத்தின்போது 2917 குடும்பங்களின் 10,968 நபர்களாக அடையாளப்பட்டுத்தப்பட்ட யாழ்ப்பாண முஸ்லிம்களின் சனத்தொகையானது 2011ம் ஆண்டில் 5483 குடும்பங்களின் 22,204 நபர்களாக அதிகரித்திருந்தமையினை புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இவர்களுள் 2012ம் ஆண்டுவரை யாழ்ப்பாணத்தில் மீளவும் குடியேறுவதற்காக 2252 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டிருந்தார்கள். 459 குடும்பங்கள் நிரந்தரமாக மிகவும் சாதாரண வசதிகளுடன் யாழ்ப்பாணத்தில் குடியேறியிருந்தார்கள். ஏனையவர்கள் தமக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுமிடத்து மீளக்குடியேறக்காத்திருந்தார்கள். எனினும் மிக நீண்டகாலமாக முஸ்லிம்கள் எதிர்நோக்கிய காணி மற்றும் வீடமைப்பு பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. நான் மேலே குறிப்பிட்ட காரணிகளினால் முஸ்லிம்களின் மீளக்குடியேற்றம் கேள்விக் குள்ளாக்கப்பட்டது. 68 குடும்பங்கள் தாம் மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியேற முடியாது என்பதனையுணர்ந்து மீள்குடியேற்றப்பதிவுகளை இரத்துச்செய்து மீண்டும் வெளிமாவட்டங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளார்கள். இவ்வாறான நிலையினை நாம் அங்கீகரிப்போமேயானால்
* 26 முஸ்லிம் கிராமங்களைக் கொண்ட யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பாலான முஸ்லிம் கிராமங்கள் கைவிடப்படும்
* இப்பிரதேசங்களில் காணப்பட்டுகின்ற 45க்கும் அதிகமான பள்ளிவாயல்களில் பெரும்பாலானவை நாளடைவில் கைவிடப்படும்
* 8 முஸ்லிம் பாடசாலைகளுள் 1பாடசாலை மாத்திரமே முஸ்லிம் பாடசாலையாக தற்போது இயங்குக்கின்றது. மற்றுமொரு பாடசாலை தமிழ் பாடசாலையாக மாற்றம் பெற்றுள்ளது ஏனைய பாடசாலைகளும் அவ்வாறே மாற்றப்படும்.
* இலங்கையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வர்த்தக நகரத்தையும் வர்த்தக வாய்ப்பையும் முஸ்லிம்கள் இழந்துள்ளார்கள்
* முஸ்லிம் சமூக நிறுவனங்கள், மதராஸாக்கள், அடக்கஸ்த்தலங்கள் கைவிடப்படும் அபாயம் உருவாகியிருக்கின்றது
* சுருக்கமாக யாழ்,கிளிநொச்சி மாவட்டங்களில் முஸ்லிம்களின் இருப்பு இல்லாமலாக்கப்படும்.
யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் முஸ்லிம் சமூகத்தின் இருப்பினை உறுதி செய்வதற்கு யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தைப் பாதுகாக்கவேண்டிய் ஒரு பாரிய பொறுப்பு எம் அனைவருக்கும் இருக்கின்றது. ஏனெனில் மிகவும் துரிதகதியில் யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தின் பிரதேசங்களின் காணிகள் மாற்று மதத்தவர்களுக்கு விற்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் முஸ்லிம் பிரதேசம் இவ்வாறாக அந்நியவர்களின் கரங்களுக்கு சென்றுவிடுமாயின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் முஸ்லிம்களின் இருப்பும் இலகுவாக இல்லாமலாக்கப்படும்.
மிகப்பிந்திய கணக்கெடுப்பின் பிரகாரம்
· ஹாதி அபூபக்கர் வீதி- 126 காணிகளில் 37காணிகள் முஸ்லிமல்லாதோர்க்கு விற்கப்பட்டுள்ளன முஸ்லிம் கல்லூரி வீதி-262 காணிகளில் 28காணிகள் முஸ்லிமல்லாதோர்க்கு விற்கப்பட்டுள்ளன.
· கலீபாஅப்துல்காதர் வீதி274காணிகளில் 51 காணிகள் முஸ்லிமல்லாதோர்க்கு விற்கப்பட்டுள்ளன.
· ஆஸாத் வீதி- 86 காணிகளில் 23 காணிகள் முஸ்லிமல்லாதோர்க்கு விற்கப்பட்டுள்ளன.
· ஜின்னா வீதி-78 காணிகளில் 41 காணிகள் முஸ்லிமல்லாதோர்க்கு விற்கப்பட்டுள்ளன
· மானிப்பாய் வீதி-69 காணிகளில் 36 காணிகள் முஸ்லிமல்லாதோர்க்கு விற்கப்பட்டுள்ளன
மொத்த முஸ்லிம் வீடுகள்,காணிகள்- 1714 (ஜே-86,87,84 கிராம சேவகர் பிரிவுகள் மாத்திரம்) முஸ்லிமல்லாதோர்க்கு விற்கப்பட்டுள்ள வீடுகள் – 311 (18%மான வீடுகள் விற்கப்பட்டுள்ளன)
இது ஒரு பாரிய சவாலாகும். இத்தகைய சவால்களை முறியடிப்பதற்கு ஒரு பலமான சமூகச்செயற்பாட்டின் தேவை இந்த இடத்தில் வலியுறுத்தப்படுகின்றது. எல்லாவிதமான பேதங்கள், முரண்பாடுகளுக்கும் அப்பால் அது ஏற்படுத்தப்படவேண்டும். அத்துடன் இலங்கை முஸ்லிம் உம்மத்தினதும், சர்வதேச உம்மத்தினதும் ஆதரவு இதற்கு அவசியமாகின்றது.
இந்த சவாலை முறியடிப்பதற்கு யாழ் முஸ்லிம் சமூகத்தினரின் பங்களிப்புகளுடன் இணைந்து தேசிய முஸ்லிம் உம்மத்தினதும் பங்களிப்புகள் தேவைப்படுகின்றன. “யாழ் முஸ்லிம் மீள்குடியேற்றத்திற்கான சிவில் சமூக முன்னெடுப்புகள்” Civil Initiatives of Jaffna Muslims’ Resettlement என்னும் கருத்திட்டத்தினை யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தில் நீண்டகாலமாக செயற்பட்டுவரும் நான்கு பிரதான அமைப்புகள் இணைந்து முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளன. யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தில் பிரதான அங்கத்துவம் பெறும் இவ்வமைப்புகள் சம்மேளனத்தையும் இணைத்து இத்திட்டத்திற்கான அமுலாக்கங்களில் ஈடுபடும்.
அண்மைக்காலமாக இவ்வமைப்பினர் பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களையும் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் பிரதிநிதிகள், முஸ்லிம் கவுன்ஸில் ஒப் சிறீலங்காவின் பிரதிநிதிகள் மற்றும் மாவனல்லை, உடுநுவர, கண்டி, அக்குரணை ஆகிய பிரதேசங்களின் பள்ளிவாயல் நிர்வாகங்கள், இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து மேற்படி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் கலந்துறையாடல்களை நடாத்தியுள்ளனர். இன்ஷா அல்லாஹ் வெகுவிரைவில் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட கருத்திட்டம் முன்வைக்கப்பட்டு தேசிய மட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்புகளும் பெறப்பட்டு யாழ்ப்பாணம் முஸ்லிம் மண்ணைப் பாதுகாக்கும் செயற்திட்டம் அமுலாக்கப்படும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ஒத்துழைப்புவழங்க விரும்புவோர், கருத்துக்களை முன்வைக்க விரும்புவோர் பின்வருவோருடன் தொடர்புகளை மேற்கொள்ளும்படியும் வேண்டப்படுகின்றார்கள். யாழ் முஸ்லிம் மீள்குடியேற்றத்திற்கான சிவில் சமூக முன்னெடுப்புகள்” அஷ்-ஷெய்க் அஸ்மின் அய்யூப்- 0770-525 391 சட்டத்தரனி எம்.எம்.எம்.றமீஸ் 0777-805 399
Post a Comment