Header Ads



இலங்கையின் சுதந்திரமீட்சிக்கான பயணத்தில் சிறுபான்மையினரின் பற்றுருதி..!


(எஸ். எல். மன்சூர்)

நமதுநாடு 2500ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டதாக அமைந்தாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்நாட்டுவாழ் குடிகளில் பல்லின மக்களின் வாழ்வுமுறைகள் பின்னிப்பிணைந்திருந்தமை வரலாறாகும். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயேர் வரையிலான வெளிநாட்டு ஆட்சியாளர்கள் சுமார் 443வருடங்கள் ஆட்சியுரிமையுடன் இருந்தபோது எம்மக்கள் அனைவரும் சிறுபான்மை என்றோ, பெரும்பான்மை என்றோ, சமயம்சார் மக்கள் என்றோ பார்க்கவில்லை. இந்நாட்டிலிருந்து அந்;நியரை வெளியேற்றுவதில் ஒற்றுமை பார்க்கப்பட்டது. அங்கு நாட்டின் பற்றுருதி பார்க்கப்பட்டதேதவிர இம்மியளவும் வேற்றுமை காணப்படவில்லை. சுதந்திர இலங்கையைப் பெறுவதற்கு ஒவ்வொரு சமூகமும் தங்களுக்குள் இருந்த அதிகார மட்டத்திற்கேற்ப தம்மாலான வேட்கையை வெளிப்படுத்துவதற்குக்கூட பின்ணிற்கவில்லை. ஆனால்; இன்று இனங்களுக்கிடையில் பிரித்தாளும் தந்திரங்களும், சமயக்கோட்பாடுகளை அவமதிக்கும் ஏற்பாடுகளும், நாட்டுப்பற்றுருதியில் அவநம்பிக்கையை மிகைப்படுத்தும் தாளாராள பக்குவம் வெளியிடுப்படுகின்றமை மிகுந்த வருத்தத்தை தருகின்றது. நாட்டு மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் சுதந்திர இலங்கையின் பின்னரான காலப்பகுதியில் இதன் தாக்கம், பெற்றுக் கொண்ட சுதந்திரத்தின் அர்த்தம் ஏனோதானோ என்கிற நிலமைக்குள் தள்ளப்பட்டுவிடக் கூடாது. ஒற்றுமையுடன் இந்த சுதந்திரமான நாளை இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாய் கொண்டாடுவதே சிறப்பானதாக அமையும்.  

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 65வருடங்களாகின்றன. பெற்ற சுதந்திரத்தை இன்றுவரை பாதுகாத்து வருகின்ற எமது மக்கள் குறிப்பாக இந்த சுதந்திரக்காற்றை அன்று சுதந்திரமாக சுவாசிப்பதற்கு முன்னின்று உழைத்திருந்த மக்களை நாம் நினைவூட்டுவது சாலச் சிறந்தது. அப்போது இந்நாட்டில் வாழ்ந்த மக்கள் சமூகம்பாராது, சமயம்பாராது, இனம்பாராது அனைவரும் ஒரே நாட்டுமக்கள் என்கிற அவாவில் வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரத்தைப் பெறுவதற்காக அவர்கள்பட்ட கஷ்டங்களை நாம் நினைவில் கொள்வது இந்நாளின் சிறப்பாக அமையும். ஆனால் பேரினம் என்றும், சிறுபான்மையினம் என்றும் எமக்குள்ளே எழுந்துள்ள சமூகப்பிரச்சினைகளை சிலர் அழுத்தமாக எதிர்கொண்டு இந்நாட்டுக்கு ஏகபோக உரிமை கோருகின்ற ஒருகூட்டம் அண்மைக்காலமாக சமூகப்பிளவுகளையும், சமயரீதியான நிந்தனைகளையும் மேற்கொண்டுவருவதானது மிகவும் கவலையான விடயமாகப் மானிடவியலாளர்களால் பார்க்கப்படுகின்றது. 

'சுதந்திரம் இல்லாமல் ஒரு நாடு நல்ல நிலைமையில் இருக்கமுடியாது. ஒழுக்கநெறிகள் இல்லாமலும் சுதந்திரம் இருக்க முடியாது' என்னும் கருத்தை முன்வைத்திருந்தார் அறிஞர் ரூசோ. இலங்கை மாதாவின் பூமியில் சுதந்திரத்திற்கு முன்னர் அனைவரும் ஒற்றுமை ஓங்கும் வகையில் நடந்து கொண்டமையினால்தான் இன்று இந்த சுதந்திரக் காற்றை சுவாசிக்கும்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காகப் பட்ட கஷ்டங்கள், தியாகங்கள் அனைத்திலும் எமது மக்கள் தோளோடுதோள் நின்றார்கள். குறிப்பாக சிங்கள மொழியின் பற்றுக்காக தம்மை அர்ப்பனித்த முஸ்;லீம்களை மறக்கத்தான் முடியுமா?

1927ஆம்ஆண்டு சிங்களமொழியின் அவசியத்தை உணர்ந்துகொண்ட முன்னாள் கல்வியமைச்சராக இருந்த டாக்டர் பதியுதீன் மஹ்மூத் காலியிலிருந்து குரல்கொடுத்திருந்தார். 1951ஆம் ஆண்டில் முன்னாள் சபாநாயகராக இருந்த பாக்கீர் மாக்கார் பேருவலை பட்டிண சபையின் தலைவராக இருந்தபோது சிங்களமொழியை அரச கரும மொழியாக்க தீர்மானம் ஒன்றை மேற்கொண்டார். இலங்கை முஸ்லீம் சமூகத்தின்; கல்விக்காக தன்னை அர்ப்பணித்த அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் எமதுநாட்டின் தேசிய மொழிகளான சிங்களத்திற்கும், தமிழுக்கும் உரிய இடமளிக்கப்பட வேண்டுமென்று பல இடங்களிலும் குரல் கொடுத்துவந்தார். டாக்டர் ரீபி. ஜாயா எமது சுதந்திரத்தின் தாகத்தை உணர்ந்து, அப்போராட்டத்தின் வலிமையை உணர்ந்து, இந்நாட்டின் பேரின சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழவேண்டியதன் அவசியத்தை ஒருநிமிடம்கூட தாமதிக்கக்கூடாது என்கிற தொனியில் கோரிக்கை விட்டிருந்தார். ஆனால் இன்று தலைகீழாகவே நிலைமை மாறிவருகின்ற ஒருகாலகட்டத்தில் இந்த சுதந்திரதினம் முக்கியத்துவமிக்கதாக பார்க்கப்படுதல் அவசியமாகும்.

65வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் முகமாக நாடுதழுவிய ரீதியில் ஒவ்வொரு இலங்கைப்; பிரஜையும் தனது சுதந்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் இலங்கைமாதாவின் பிள்ளைகள் நாம் என்பதை பறைசாற்றுவதுடன், தேசியக்கொடி ஏற்றப்பட்டு பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை நிலைக்கத்;தக்கவாறு நினைவுகூறும் வகையில் மக்கள் அனைவரும் சுதந்திரத்தின் முழுச்சுவாசத்தையும் வெளிக்காட்டுதல் அவசியமாகும். தேசிய வைபவம் இயற்கைத் துறைமுக நகரான திருகோணமலையில் நடைபெறுவது பாராட்டத்தக்கது. இந்தச் சுதந்திரத்தை அன்று பெறுவதற்காக பல்லாயிரக்கணக்கான உயிர்களும், உடமைகளும் தியாகம் செய்யப்பட்டுள்ளதையும் இந்நாளில் நினைகூறவேண்டும். இரத்தம் சிந்தாப்புரட்சி மூலம் அகிம்சா மூர்த்தி அண்ணல் காந்தியவர்கள் இந்தியாவின் விடுதலைநோக்கிய பயணத்தில் மக்களை ஒன்றுதிரட்டிய வரலாறுகளின் பின்னணியில் இந்தியாவுக்கான சுதந்திரம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இலங்கைக்கும் சுதந்திரத்தை வழங்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குள் பிரித்தானிய பேரரசு தள்ளப்பட்டிருந்தாலும் இதற்காக பாடுபட்ட மூவின மக்களையும் அக்காலத் தலைவர்களையும் இலங்கை மாதாவின் தலைவர்களையும் நாம் இக்கால கட்டத்தில் நினைவு கூறுவதன் ஊடாக சமூக ஒற்றுமையை ஏற்படுத்தலாம் என்பது எமது நம்பிக்கையாகும். 

இந்த சுதந்திர இலங்கையைக் காண்பதற்கான போராட்டம் வெறுமனே சொல்லில் வடிக்ககூடியதல்ல. இந்த சுதந்திரமான காற்று வெறுமனே கிடைத்ததொன்றல்ல. நாட்டின் பற்றுருதிமிக்க பல்லாயிரக்கணக்கான வீரர்களினது தியாகத்தின் பின்னணியில் விளைந்ததாகும். நாட்டின் சுதேசிகளின் ஆட்சிகளைத் தொடர்ந்து இலங்கையின் அமைவிடத்தின் கேந்திர முக்கியத்துவம் ஏகாதிபத்தியத்தின் ஆட்சிக்கு வித்திட்டது. 1505ஆம் ஆண்டிலிருந்து ஐரோப்பியர்களது ஆதிக்கத்தின்கீழ் இருந்துவந்த எமது சின்னஞ்சிறு நாட்டை தத்தமது தேவைகருதி பயன்படுத்தினர். எமது நாட்டின் அபிவிருத்தியில் அவர்கள் கவனம் கொள்ளாது அவர்களது நாட்டின் நலனை முன்னிலைப்படுத்தியே ஒவ்வொரு திட்டத்தையும் ஆரம்பித்தனர். 

தோற்றுப்போன அடிமை சாசனத்தின் கீழ் எம்மக்கள் இருந்தபோது சுதந்திரத்தை அடைவதில், தாய் நாட்டுக்காக போராடிய வகையில் இந்நாட்டு மக்கள் எல்லோரும் இன, மத பேதமற்ற ஒரேதாய் பிள்ளைகள்போன்று ஒற்றுமையுடன் தமது எதிர்ப்பைக் காட்டிக் கொண்டார்கள். இந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்ட பிரித்தானியப் பேரரசு 1948.02.04ஆந்திகதி எம்மை நாமே ஆளும் நிலைக்கு வித்திட்டது. வளம் கொழித்த நாட்டை சீரழித்துவிட்டு வெறுமையுடன் ஒப்புவித்திருந்தனர். அதுமட்டுமன்றி, அந்நியர்கள் பிரித்தாளும் தந்திரத்தின் வெளிப்பாடாக சமயரீதியான குழப்பங்களுக்கு தூபமிட்டு இனங்களுக்கிடையிலான இடைவெளியை அதிகரிப்பதில் வெற்றியும் கண்டனர். ஏகாதிபத்தியவாதிகளோ ஒற்றுமைப்பட்டிருந்த மக்களிடையே குழப்பங்களை தூபமிட்டனர். அதன் விளைவுகள் இன்று 65ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டில் முஸ்லீம்களுக்கு எதிரான வாதப்பிரதிவாதங்கள் சகோதர இனத்தவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற நிலைமையை மாற்றம் செய்வதற்கான தலைமைத்துவங்கள் இன்றைய சுதந்திர நாளில் உதயமாகுவது பொருத்தமாகும். 

இலங்கையின் சுதந்திரத்தைப் பெறுவதற்கான போராட்டத்தில் நாட்டுப் பற்று மேலோங்கியமையினால் அந்நியரின் சமயரீதியான கருத்துக்கள், சமயத்திற்குள் உட்படுத்துவதற்கான முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டபோதிலும் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.  அநகாரிக தர்மபால, ஆறுமுக நாவலர், அறிஞர் சித்தி லெவ்வை, வாபிச்சி மரைக்கார் போன்றோர் தங்களது சமரீதியான நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்தி, தத்தமது ஒழுக்க நெறிமுறைகளை மேற்கொண்டு சமய கலாச்சார பண்பாட்டு பழக்கவழக்கங்களையெல்லாம் வளர்தெடுப்பதில் கங்கஙனம் கட்டிக்கொண்டனர். சமூகத்தின் ஏகபோகத் தலைவர்களாக இருந்து கொண்டு ஆங்கிலேயருக்கு அடிபணியாது நடந்து கொண்டனர். மத்தியதர வர்க்கத்தினரின் ஏகபோக உரிமையாக இருந்துவந்த அக்கால ஆங்கிலக்கல்வி முறையிலமைந்த நடவடிக்கைகள் இனரீதியான பிளவுகளுக்கும், பிரிவுகளுக்கும் வித்திட வழிவகுத்திருந்தமையினால், சமயப்பற்றுடன் தாம் கற்ற கல்வி மூலமாக இவர்களே பின்நாளில் தலைவர்களாக உருவாக்கம் பெற்றனர். ஒன்றுபட்ட இலங்கையினைப் பெறுவதில் பெரும்பான்மையினருடன் இணைந்து, சமூகத்தலைமைகளுடன் சிறப்பான வழிகாட்டலுடன், அனைவரும் நல்லுறவு பூண்டிருந்த வரலாறுகளின் அடிச்சுவடுகள் பதிவுகளாக இன்றும் உள்ளது.

அதன் அடிப்படையில் சமய ரீதியான கல்விக்கு முக்கியத்துவம் வழங்கியவேண்டிய நிலையில் அன்றைய தலைவர்கள் சமயரீதியான சித்தாந்தங்களை தம்மினத்தாரிடையே போதிப்பதில் வெற்றி கண்டனர். ஆங்கிலக்கல்வியின் மோகம் காரணமாக நாட்டுப்பற்றாளர்கள் குறைந்து கொண்டுவருகின்றனரோ என்கிற அச்சத்தின் மத்தியில் நாட்டுப்பற்றாளர்களை உருவாக்கும் நோக்குடன் கல்விரீதியான மதசார்பு கொள்கையை கடைப்பிடிக்கத் தொடங்கினர். அந்தவகையில் சமூதாய நலனில் அக்கரைகொண்ட தலைவர்களாக ஹென்ரி ஸ்டீல் ஒல்கொட், அநாகரிக தர்மபால, குணாநந்த தேரர், ஸ்ரீ ஆறுமுக நாவலர், சேர் பொன்னம்பலம் இராமநாதன், அறிஞர் சித்திலெவ்பை, கொடைவள்ளல் வாப்பிச்சி மரைக்கார், அப்துர் றகுமான், ஓராபிபாஷா, அப்துல் அஸீஸ், சேர் ராசிக் பரீத், டாக்டர்கலீல், எம்.எஸ் காரியப்பர், லத்தீப் சின்னலெவ்பை போன்றோர்கள் கல்வி ரீதியான மறுமலர்;ச்சிக்குரிய வழிவகைகளை ஏற்படுத்தியவாறு சமுதாயத்தின் நலனிலும், நாட்டு நலனிலும் அதிக அக்கரையுடன் செயற்பட்டனர்.

மேலும், தேசிய விடுதலை நோக்கிய பயணத்தில் பல்வேறு இயக்கங்கள் ஊடாக தலைவர்கள் பலர்  தங்களது பங்களிப்பினை நல்கியிருந்தனர். மத்தியதர வர்க்கத்தினரிடம் காணப்பட்ட செல்வச் செழிப்பு மற்றும் கல்வியறிவு போன்றவற்றை பயன்படுத்தி அரசியல் பலத்தைக் கைக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்தத் தொடங்கியதன் விளைவு இயங்கங்கள் வளர்ச்சி பெறலாயின. அந்தவகையில் தொழிலாளர்களின் நலனில் அக்கரைகொண்டதன் காரணமாக 1893ஆம் ஆண்டில் அச்சகத் தொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது போராட்ட வடிவத்திற்கு பக்கத்துணையாக மத்தியதர வர்த்தினரின் ஆதரவு காணப்பட்டது. இதன் பின்னணியில் இடதுசாரி தலைவர்கள் பாரியளவிலான பங்களிப்பினையும் நல்கியிருந்தனர்.

இலங்கையில் தேசிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதன் பிற்பாடு சமயரீதியான விழிப்புணர்வுகள் மேம்படலாயின. பௌத்த, இந்து, இஸ்லாமிய சமயரீதியான மறுமலர்ச்சிக்கு மத்தியதர வர்க்கத்தினரின் கல்வியும் செல்வமும் பக்கபலமாய் அமைந்திருந்தன. இக்கால கட்டங்களில் பத்திரிகைகள் ஊடாக நாட்டின் விடுதலைக்கு வித்திடவும் காரணியாய் அமைந்திருந்தன. அந்தவகையில் 1864இல் லக்மினி கிரண, பஹண, அருனோதய, 1866இல் ஞானார்த்த பிரதீபய, 1880இல் சரசவி சந்தேஷய, 1902இல் சிங்கள ஜாதிய, 1888இல் இந்து சாதனம், 1909இல் தினமின, 1930இல் வீரகேசரி, 1931இல் தினகரன், அறிஞர் சித்திலெவ்பையின் முஸ்லீம் நேசன், ஞானதீபம் போன்ற பத்திரிகைகள் வெளியாகி தேசிய விடுதலைக்கு வழிவிடக் கோரிநின்றதையும் இதன்பின்னணியில் இயங்கிய மத்தியதர வர்க்கத்தினரையும் மறந்துவிடலாகாது.

இந்த இயக்கத்தினரால் கலாசார மறுமலர்;ச்சிக்கும் அப்பால் அரசியல் சீர்திருத்தங்களுக்கான போராட்டங்களும் கைக்கொள்ளத் தொடங்கின. தேசிய மது ஒழி;ப்பு இயக்கத்தின் ஊடாக தேசிய தலைவர்களான டி. எஸ் சேனநாயக்க, எப்ஆர். சேனநாயக்க, அநாகரிக தர்மபால, எட்மன் ஹேவாவிதாரண, சேர் டிபி. ஜயதிலக, டபிள்யு ஏ.சில்வா, பியதாஸ சிரசேன, ஆத்தர்.வி. தியெஸ் போன்றோர்கள் மதுபாவனைக்கு எதிரான பிரசங்கிகளாக தமது போராட்ட வடிவத்தை முன்கொண்டு சென்றனர். பிரித்தானிய ஆட்சியாளர்கள் கதிகலங்கும் அளவுக்கு இவ்வியக்கத் தலைவர்கள் போராட்டத்தின் ஊடாக தேசியத்தலைவர்களாக மாற்றம் பெற்றுக் கொள்ளவும், பின்னர் தேச விடுதலைக்கும் வெளிப்படையான ஆதரவையும் நல்கினர். 

அதேவேளையில் 1919ஆம் ஆண்டில் இலங்கைத் தேசிய சங்கத்தை ஆரம்பித்திருந்த திருவாளர் பொன்னம்பலம் அருணாச்சலம் வீரப் பெருந்தகைப் பட்டத்தையும் பெற்று தேசிய விடுதலைக்கு வித்திட்ட மாமனிதர். இவரது நாட்டுப்பற்றின் விளைவு, தேச விடுதலையின் ஒருவடிவமாக பின்னர் ஆரம்பி;க்கப்பட்ட இலங்கைத் தேசிய காங்கிரஸின் முதலாவது தலைவராகி, அனைவரும் ஒன்றினைந்து சுதந்திரத்திற்கான போராட்டங்களில் சேர் வைத்தியலிங்கம் துரைசாமி, முத்துக் குமாரசாமி போன்றோர்கள் அயராது உழைத்ததை வரலாறு மறக்கவில்லை. ஆனால் இன்று தமிழ் சிங்கள மற்றும் முஸ்லீம்களுக்கிடையிலான தொடர்புகள் சிறிதுசிறிதாக சீர்கொடத் தொடங்கி இரன முரண்பாடுகள் என்றும், ஹறாம் ஹலால் பிரச்சினைகள் என்றும், பேச்சு மற்றும் எழுத்துச் சுதந்திரம் அற்றநிலையிலும், முறையற்ற குடியேற்ற முற்போக்குச் சிந்தனைகளால் உந்தப்பட்டு நாட்டை பிளவுக்கு இட்டுச் செல்லும் அளவுக்கு இன்று அரசியல்வாதிகள் தங்களது நடத்தைவாதப்போக்குகளை மேம்படுத்தி ஐரோப்பிய காலத்தில் தமது இனத்திற்குக் கிடைக்கத்தவறிய விடயங்களை சரிசெய்வதாகக் கூறி இனமுரண்பாட்டினை போட்டிபோட்டுக் கொண்டு உருவாக்கப்படுவதன் பின்விளைவு மீண்டும் ஒரு சுதந்திரத்திற்கான வாசலைத் தேடவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையதை; தோற்றுவிக்கும் என்று சமூக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இவ்வாறாக பல்வேறு சமூகத்தின் தலைவர்கள் ஒன்றிணைந்து பெற்ற சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் பிரித்தாளும் தன்மைகள் மேலோங்கி, ஒற்றுமை ஓடிமறைந்துவிட்டது. சமாதானம் எங்கோ பறந்துவிட்டது. ஒரு இனம் இன்னோர் இனத்தை சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சுதந்திரத்திற்கு முன்னர் இருக்கவில்லை. நாட்டுப்பற்றில் பற்றுருதிமிக்கவர்களாக வாழ்ந்த இலங்கை மாதாவின் பி;ள்ளைகளை பிரித்தாள முற்பட்டவர்கள் யார்? என்கிற கேள்விகளை அடிக்கிக் கொண்டே போகலாம். அழகிய சின்னஞ்சிறு நாடு. இயற்கை எழில் கொஞ்சும் நாடு. எமக்குள் பிரிவினை வேண்டாம். அனைத்திலும் சமம்பார்க்கப்படும் மனித உரிமைகளை மதிக்கும் நாம் ஜனநாயகப் பண்புகளை மேலோங்கச் செய்து அனைவரும் ஒற்றுமையுடன் மனிதனை மனிதன் மதிக்கின்ற ஒருயுகத்தை ஏற்படுத்த இன்றைய சுதந்திரத்திலிருந்து உறுதிபூணுவோம்.

சிந்தனைக்கு விருந்தாக ஈருலக இரட்சகர் எம்பெருமான் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் திருவாய்மொழிந்த சுதந்திரம் பற்றிய கருத்துரையிது. 'பசியோடு இருப்பவர்களுக்கு உணவு கொடுங்கள், நோய்வாய்ப்பட்டவர்களைச் சென்று விசாரியுங்கள்: நியாயமற்ற முறையில் சிறைப்படுத்தப்பட்டிருக்கும்; கைதிகளுக்கு சுதந்திரம் கொடுங்கள். கஷ்டப்படுபவர்கள் முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீம் அல்லாதவர்களாக இருந்தாலும் உதவி செய்யுங்கள்' எனக்கூறியுள்ளார்கள். இவ்வழகிய கருத்துரையை சிந்தையில் கொண்டு சிந்திப்போமாக.

No comments

Powered by Blogger.