Header Ads



பிரித்தானியாவிலுள்ள இலங்கை முஸ்லிம்கள் கோட்டபய ராஜபக்ஸவுக்கு மகஜர்



இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான சமகால செயற்பாடுகள் தொடர்பாக பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழும் ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர் அமைப்பினர் பிரத்தானியாவிலுள்ள உயர்ஸ்தானிகராலய தூதுவர் உள்ளிட்ட தூதுவராலய மேல்நிலை அதிகாரிகளை கடந்த19.02.2013ம் திகதியன்று நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர் அமைப்பின் சார்பில் அதன் தலைவர் எம்.எல்.நஸீர், உப தலைவர் மொஹமட ;பௌஸிக், செயலாளர் ஸெய்யத் எம். இஸ்ஸதீன், பொருளாளர் மொஹமட மபாஸ் ஆகியோருடன் உறுப்பினர்களான அமீன் இஸ்ஸதீன், மௌலவி இஸ்ஸத் ஆப்தீன், அய்ஸான் அப்துல்லாஹ் ஆகியோர் பிரித்தானியாவிலுள்ள ஸ்ரீலங்காவின் உயர்ஸ்தானிகர் கலாநிதி கிறிஸ்நோனீஸ், உதவி உயர்ஸ்தானிகர் நெவில் டி. சில்வா, தூதுவராலய இணைப்பு கொன்சலர் சமிந்த குலரத்ன மற்றும் பொது விவகாரங்களுக்கான செயலாளர் யோகநாதன் ஆகியோருடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் செயலாளர் ஸெய்யத் எம். இஸ்ஸதீன் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், ஸ்ரீலங்காவின் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் சிங்கள – முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் தோன்றியுள்ள மத ரீதியான முரண்பாட்டு நிலைமை குறித்து தமது அமைப்பின் சார்பில் ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு பேசுகையில் குறிப்பிட்டதாவது:

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரும், சுதந்திரம் அடைந்த பின்னரும் இலங்கையில் வாழுந்து வருகின்ற முஸ்லிம் சமூகமானது இலங்கையை ஆட்சி செய்து வந்துள்ள அனைத்து அரசாங்கங்களுடனும் மிக்க விசுவாசத்துடனேயே இணைந்து வாழ்ந்து செயற்பட்டு வந்திருக்கின்றது.

இன்றும்கூட இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல முஸ்லிம் அரசியற் கட்சிகளும் தற்போது பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் தலைமையிலான அரசாங்கத்திற்கு விசுவாசமாகவும், ஆதரவாகவுமே இருந்து வருகின்றன.

இந்தநிலையில் இலங்கையின் பெரும்பான்மை மக்களான சிங்கள மக்களின் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்தி ஆட்சியிலுள்ள அரசாங்கத்திற்கு அந்நாட்டில் சிறுபான்மையிலும் சிறுபான்மையாக வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகத்தின் மத ரீதியான மற்றும் கலாசார ரீதியான உரிமைகளை அவர்கள் பேணி வாழ்வதில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு சிறிய குழுவினர் தீவிரப்போக்குடன் அச்சுறுத்தும் விதமான நடவடிக்கைகளை சமீப காலத்தில் முனைப்புடன் மேற்கொண்டு வருவது உண்மையில் கவலைக்குரிய விடயமேயாகும்.

இந்த கவலைக்குரிய விடயத்தை நாங்கள் சமூகப் பொறுப்புடனும், நாட்டுப்பற்றோடும் கவனத்திற்கெடுத்து எமது தாயகத்தின் நலன்களுக்கும், நாம் பின்பற்றும் இஸ்லாம் மார்க்கத்திற்கும் எந்த வகையிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டு விடாத வகையில் தீர்வுகளைக் காணக்கூடிய வழிவகைகள் குறித்து கலந்துரையாடும் நோக்குடனேயே நாம் இச்சந்திப்பை ஏற்படுத்த விரும்பியதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து அமைப்பின் உறுப்பினரான அய்ஸான் அப்துல்லாஹ் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

பொது பலசேனா அமைப்பின் இத்தீவிரவாதச் செயற்பாடுகளை நாட்டிலுள்ள சில ஊடகத்துறையினரும் தமது வெளியீடுகளின் பக்கம் வெகுஜன ஈர்ப்பை வேகமாகத் திருப்பிக் கொள்ளும் நோக்குடன் சாதாரண சிறிய அளவிலான செய்திகளைக்கூட அளவுக்கதிகமாக மிகைப்படுத்தியும், பரபரப்பாக்கியும் வெளியிட்டு வருவதும் இன்று தாய் நாட்டில் தோன்றியுள்ள பதற்றமான சூழ்நிலைக்கு ஒரு புறக்காரணியாக இருப்பதாகவும் எமது அமைப்பு கருதுகிறது எனவும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில்,

முஸ்லிம்களின் ஹலால் உணவுகளை உறுதிப்படுத்தும் வகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினால் வழங்கப்படும் ஹலால் சான்றிதழ், முஸ்லிம்களின் ஆடை ஒழுங்கு விடயத்தில் இஸ்லாம் வலியுறுத்தும் பர்தா நடைமுறையைப் பின்பற்றுதல் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் வணக்க வழிபாடுகளை மேற்கொள்ளும் பள்ளிவாசல்களின் நிலையான இருப்பு போன்ற விவகாரங்களில் தற்போது அங்கு எழுந்துள்ள பதற்றமான நிலைமைகளைத் தணிக்க வேண்டிய பொறுப்பு மற்றெல்லா சக்திகளையும் விட பதவியிலுள்ள அரசாங்கத்திற்கே கடமையானது என்பதை பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழும் ஸ்ரீலங்கா முஸ்லிம்களின் அமைப்பின் சார்பில் கௌரவ உயர்ஸ்தானிகர் அவர்களுடாக இலங்கை அரசாங்கத்தை நாம் வேண்டிக் கொள்கின்றோம் என்றார்.

இதையடுத்து அங்கு கருத்துத் தெரிவித்த மௌலவி இஸ்ஸத் ஆப்தீன் அவர்கள், முஸ்லிம்களின் ஹலால் உணவு தொடர்பாகவும், அதற்கான சான்றிதழை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினர் வழங்குவது தொடர்பிலும் உயர்ஸ்தானிகருக்கும், அதிகாரிகளுக்கும் விளக்கமளித்தார்.

இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் வழங்கப்படுகின்ற ஹலால் சான்றிதழானது, அங்கு வாழுகின்ற முஸ்லிம்களுக்கு மாத்திரம நன்மை பயக்காமல் இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத் துறையில் ஈடுபட்டிருக்கும் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த உற்பத்தியாளர்களின் உற்பத்திகளுக்கு வெளிநாட்டுச் சந்தையில் கூடிய கேள்விகளை ஏற்படுத்தும் வாய்ப்புக்களை அதிகரித்திருப்பதாகவும் அவர் அங்கு சுட்டிக் காட்டினார்.

இதனடிப்படையில், இலங்கையின் உற்பத்திப் பொருட்களுக்கு வழங்கப்படும் ஹலால் சான்றிதழை இரத்துச் செய்யுமாறு விடுக்கப்படும் கோரிக்கையானது, நாட்டின் தேசிய ஏற்றுமதி வர்த்தகத்துறை வளர்ச்சிக்கும், நாட்டின் அந்நியச் செலாவணி வருவாய்க்கும் எதிராக அரசுக்கு விரோதமான பெரும்பான்மைச் சமூகத்திலுள்ள சிறு குழுவினரால் மேற்கொள்ளப்படும் இறங்குமுகப் பொருளாதாரத்திற்கான ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியாக இருக்கலாமென தமது அமைப்பு கருதுவதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய தரப்பின் பதிலளிப்பு

இதனையடுத்து பதிலளித்து உரையாற்றிய பிரித்தானியாவிலுள்ள ஸ்ரீலங்காவின் உயர்ஸ்தானிகர் கலாநிதி கிறிஸ்நோனீஸ அவர்கள் கருத்துரைக்கும்போது, பிரித்தானியாவிலும், ஸ்ரீலங்காவிலும் வாழுகின்ற முஸ்லிம்களுக்கும், தமது தூதுவராலயத்திற்கும் இடையிலான நீண்டகால நெருக்கமான உறவுகளையும் நினைவு கூர்ந்ததுடன், ஒரே குடும்பத்தினர் போலவே தாமும், தமது அதிகாரிகளும் இங்கு முஸ்லிம் மக்களுடன் இணைந்து வாழ்ந்து வருவதாகவும் வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.

அந்த வகையில் தற்போது இலங்கையில் ஒரு சிறிய குழுவினரால் தோற்றுவிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான தீவிரமான அச்சுறுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஏனைய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் தீவிரமாக எதிர் நடவடிக்கைச் செயற்பாடுகளில் அவசரப்பட்டு இறங்குவதைப் போன்றல்லாமல் ஸ்ரீலங்காவைச் சேர்ந்த முஸ்லிம்கள் உள்நாட்டிலும், பிரித்தானியாவிலும் மிகப் பொறுமையாகவும், அமைதியாகவும் இருந்து வருவதுடன், இத்தகைய ராஜதந்திர வழிமுறைகளில் நேர்மைத்ன்மையுடன் இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கு தமது தூதுவராலயத்துடன் தொடர்பு கொண்டு செயற்பட்டமைக்காகவும் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தார்.

உதவி உயர்ஸ்தானிகர் நெவில் டி. சில்வா அவர்கள் அங்கு கருத்துரைக்கும்போது, முஸ்லிம்களுக்கு எதிரான இத்தகைய தீவிரப்போக்குச் சம்பவங்கள் உலகெங்கும் பல்வேறு நாடுகளிலும் பரவலாக இடம்பெற்று வருவதை நாம் அனைவரும் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும் என்றார்.

பிரான்ஸிலும் பர்தா எனும் இஸ்லாமிய ஆடையொழுங்குக்கு எதிராக மிகத் தீவிரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் பிரித்தானியாவிலும் டீNP போன்ற சில குழுக்கள் இத்தகைய தீவிரப்போக்குடன் செயற்படுகின்றன. இவ்வாறே இப்போது நமது தாயகத்திலும் பொது பலசேனா என்ற குழுவினர் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான தீவிரப்போக்கை கடைப்பிடித்து வருகின்றது. இது கவலைக்குரியதாகும்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள முஸ்லிம் விரோதப்போக்கை அங்கு மேலும் விகாரப்படுத்துவதற்கும், அதனை சர்வதேச ரீதியாக விஸ்வரூபப்படுத்துவதற்கும் பின்னணியில் செயற்பட்டு வருபவர்களுக்கு  எங்கிருந்து ஊக்குவிப்புக்களும், நிதியுதவிகளும் கிடைக்கின்றன என்பதைக் கண்டறிவதில் அரச புலனாய்வுப் பிரிவுகள் உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் தமது புலனாய்வுகளை விரிவுபடுத்தியுள்ளன என்றும் அவர ;மேலும் தெரிவித்தார்.

தமிழ் மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி நாட்டைக் கூறு போடுவதற்கு முயன்ற பயங்கரவாதப் பிரிவினைவாதிகளின் திட்டங்களும், அவர்களின் ஆயுதப் போராட்டங்களும் எமது அரசாங்கத்தினால் தவிடுபொடியாக்கப்பட்டது போலவே, முஸ்லிம் மக்களை மையப்படுத்தி மதவாதப் பிரச்சினையை வளர்த்து நாட்டை மீண்டும் நாசப்படுத்த முற்படும் பிற்போக்குச் சக்திகளின் கனவுகளும் விரைவில் முற்று முழுதாக முறியடிக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கை அரசுக்கெதிராக சர்வதேச அரங்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அரசின் செயற்பாடுகள் என்ற தலைப்பில் தமிழ் மக்களுடன் முஸ்லிம் மக்களையும் சேர்த்துக் கொண்டு செயற்படுவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்விடயத்தில் முஸ்லிம் சமூகம் விழிப்புணர்வோடும், பொறுமையோடும், தாய்நாட்டிற்கான விசுவாசத்தோடும் தொடர்ந்தும் இருந்து வரவேண்டும் எனவும் அவர் அதன்போது வேண்டுகோள் விடுத்தார்.

இச்சந்திப்பின் இறுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் தலைவர் எம்.எல். நஸீர் அவர்கள் பேசும்போது, இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான விவகாரம் என்று ஒரு விவகாரம் எழுகின்றபோது உலக அரங்கில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் நாடுகள், மொழிகள், நிறங்கள் என்ற எல்லைகளைக் கடந்து மிக விரைவாக தாம் பின்பற்றும் மார்க்கம் என்ற அடிப்படையில் இஸ்லாத்தின் பெயரால் ஒன்றுபட்டுச் செயற்படும் சம்பவங்கள் பல கடந்த காலங்களில் ஏற்பட்டதை நாம் அவதானித்திருக்கின்றோம். 

இவ்வாறான ஒரு நிலைமை எமது தாய்நாட்டிற்கு எதிராகவும் உலகஅரங்கில் உருவாக்கப்படுவதை எமது அமைப்பு ஒரு போதும் விரும்பாது. அதன் காரணமாகவே இங்கு விசனத்திற்குள்ளாகியுள்ள பலரையும் நாம் வெகுவாகப் பொறுமையாக இருக்கச்செய்து இச்சந்திப்பை தங்களுடன் ஏற்படுத்தி தற்போது தாய் நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலைத் தணிப்பதற்கு அரசாங்கமும் மேதகு ஜனாதிபதி அவர்களும் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோருகின்றோம் எனத் தெரிவித்தார்.

இவ்வாறான ஒரு கலந்துரையாடலுக்கு பல்வேறு வேலைப் பணிகளுக்கு மத்தியிலும் எமக்கு நேரம் ஒதுக்கித் தந்தமைக்காக பிரித்தானியாவிலுள்ள ஸ்ரீலங்காவின் உயர்ஸ்தானிகர், உதவி உயர்ஸ்தானிகர் மற்றும் மேல்நிலை அதிகாரிகள் அனைவருக்கும் தமது அமைப்பின் சார்பில் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மிகவும்சுமூகமான முறையில் நடைபெற்ற இச்சந்திப்பின் இறுதியில் இலங்கை ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஸ, ஸ்ரீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோருக்கு முகவரியிடப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் சார்பிலான மகஜர்களையும் அமைப்பின் தலைவர்எம்.எல். நஸீர் பிரித்தானியாவிலுள்ள ஸ்ரீலங்காவின் உயர்ஸ்தானிகரிடம் கையளித்தார்.

இதன் பிரதிகள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஸ்ஸெய்க் றிஸ்வி முப்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் அல்ஹாஜ் என்.எம். அமீன் ஆகியோருக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இச்சந்திப்புக்கு முன்னதாக பிரித்தானியாவிலுள்ள மஞ்செஸ்டர் கெட்டுமடி பௌத்த மஹா விகாரைக்குச் சென்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம் பெயர்ந்தோர் அமைப்பினர் அவ்விகாரையின் மகாநாயக்கர் சங்கைக்குரிய பிடிவெல்லி பியதிஸ்ஸ தேரர்அவர்களுடனும், பிர்மிங்ஹம் மஹா விகாரைக்குச் சென்று அவ்விகாரையின் பிரதம மகாநாயக்கர் சங்கைக்குரிய விகாரந்தெனிய தேரர் அவர்களுடனும், பிர்மிங்ஹம் ஜெதாவன மஹா விகாரைக்குச் சென்று அவ்விகாரையின் பிரதம மகாநாயக்கர் சங்கைக்குரிய குணவன்ச தேரர் அவர்களுடனும் இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வரும் நெருக்கடிகள் பற்றி விரிவாகக் கலந்துரையாடினர். 

இதன்போது கருத்துத் தெரிவித்த மகாநாயக்க தேரோக்கள், முன்னர் தம்புள்ள பள்ளிவாசல் அச்சுறுத்தலுக்குள்ளான சமயத்திலும் இங்குள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம்களின் சார்பில் இவ்வமைப்பினர் தங்களோடு தொடர்பு கொண்டு கலந்துரையாடியது, பின்னர் ஜனாதிபதி அவர்கள் எங்களைச் சந்திக்க இங்கு வந்தபோது அவருடன் அப்பள்ளிவாசல் தொடர்பில் நாம் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு பெரிதும் உதவியிருந்ததாகத் தெரிவித்தனர்.

அது போலவே தற்போது ஸ்ரீலங்காவில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக எழுந்திருக்கும் ஹலால் - பர்தா மற்றும் வணக்கத்தலங்கள், வர்த்தக நடவக்கைகள் பற்றிய விடயங்கள் தொடர்பாகவும் நாம் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.




No comments

Powered by Blogger.