கன்றுக் குட்டிகளின் கதி..? (படம் இணைப்பு)
கன்றுக் குட்டிகளுக்கு பால் கொடுப்பதை திடீரென நிறுத்திய பசு மாடுகள் ஒரு நாய்க்கு பால் கொடுத்து வரும் வினோத சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் நடக்கிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த ராவணாபுரத்தில் பண்ணை வீட்டில் வசிப்பவர் விவசாயி சதானந்தம். 2 கறவை மாடுகள் வைத்துள்ளார். ஒவ்வொன்றும் தினமும் காலை 6 லிட்டர், மாலை 4 லிட்டர் பால் கொடுத்து வந்தது. கடந்த 2 வாரமாக பால் கறவை திடீரென குறைந்தது. காலையில் 2 லிட்டர், மாலையில் ஒரு லிட்டர் மட்டும் கிடைத்தது. திடீரென்று ஏன் பால் வற்றியது? மாடுகளை நோய் தாக்கிவிட்டதா என்று விவசாயி கவலைபட்டார்.
இதற்கிடையில், பால் கறக்கும் நேரத்தில் மட்டும் அவரது செல்ல நாய் திடீரென அவரை நோக்கி பாய்ந்து வருவதும், பால் கறப்பதை தடுக்கும் வகையில் தொடர்ந்து குரைத்துக்கொண்டே இருப்பதும் அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதே நேரம், கன்றுகளை அருகில் நெருங்க விடாமல் மாடுகள் முரண்டு பிடித்தன. கன்றுகளுக்கு பால் கொடுப்பதையே மாடுகள் நிறுத்திவிட்டன. இதனால் சதானந்தம் மேலும் குழப்பம் அடைந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு காலையில் வழக்கமாக பால் கறக்கும் நேரத்துக்கு கால் மணி நேரம் முன்பு பால் கறக்க வந்தார். அப்போது அவர் கண்ட காட்சி அதிரவைத்தது.
அவரது செல்ல நாய் அந்த 2 மாடுகளிடமும் மாறி மாறி பால் குடித்துக் கொண்டிருந்தது. மாலை நேரத்திலும் மறைந்திருந்து கண்காணித்தார். அப்போதும் இதுபோலவே நடந்தது. கன்றுக்கு பால் கொடுப்பதை நிறுத்திய மாடுகள், அந்த நாய்க்கு விருப்பத்தோடு பால் கொடுப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். இது மட்டுமின்றி, 2 பசுக்களையும் யாரும் நெருங்க விடாமல் நாய் காவல் காத்து வருகிறது. வழக்கமாக தின்னும் பிஸ்கட் உள்ளிட்ட உணவுகளையும் நாய் தற்போது சாப்பிடுவதில்லை. 2 பசுக்களும் தன் கன்றைக்கூட பால் குடிக்க அனுமதிக்காமல் நாயிடம் அதீத பாசம் காட்டி பால் கொடுப்பது வினோதமாக உள்ளது.
Post a Comment