Header Ads



துனீஷிய பிரதமர் ஹமதி ஜபலி இராஜினாமா



துனீஷிய பிரதமர் ஹமதி ஜபலி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.  துனீஷிய எதிர்க்கட்சி தலைவர் சொக்ரி பிளைடி அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்ட பதற்றத்தை தவிர்க்க துறைசார் நிபுணர்களைக் கொண்ட புதிய அரசொன்றை அமைக்க பிரதமர் முயற்சித்தார். தனது திட்டத்திற்கு ஆளும் அன்ஹதா கட்சி ஆதரவளிக்காவிட்டால் பதவி விலகுவதாக ஜபலி அண்மையில் அறிவித்திருந்தார். எனினும் கட்சி சாரா துறைசார் நிபுணர்களைக் கொண்ட அரசை அமைக்கும் பிரதமரின் திட்டத்திற்கு அவரது அன்ஹதா கட்சி எதிர்ப்பு வெளியிட்டது.

ஜனாதிபதி மொன்கப் மர்சூக்கியுடனான சந்திப்புக்கு பின்னர் இடம்பெற்ற ஊடக மாநாட்டி ஜபலி குறிப்பிட்டார். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே தாம் பதவி விலகியதாகவும், இது தமக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியிருப்பதாகவும் ஜபலி குறிப்பிட்டார். “எனது முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இது துனீஷியாவின் தோல்வி என்றோ மக்கள் எழுச்சியின் தோல்வி என்றோ எடுத்துக்கொள்ள முடியாது” என்றும் ஜபலி குறிப்பிட்டார். 

அரபு எழுச்சி போராட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் துனீஷியாவிலேயே ஆரம்பமானது. இந்த போராட்டம் காரணமாக துனிஷியாவை தசாப்தகாலமாக ஆண்ட முன்னாள் ஜனாதிபதி சைன் அல் அப்தின் பென் அலியின் அரசு கவிழ்க்கப்பட்டது. ஆளும் இஸ்லாமிய வாத அன்ஹதா கட்சி தலைவர் ரஷிட் கனூச்சி, ஜபலி தொடர்ந்தும் பதவியில் நீடிக்க வேண்டும் என கடந்த திங்கட்கிழமை வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. துனீஷியாவில் அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் கனூச்சி, ஜனாதிபதி மொன்காப் மர்சூக்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வுள்ளார்.

மறுபுறத்தில் துனீஷியாவில் அரசியல் இழுபறிக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சி கண்டு வருவதாகவும் அது மேலுமொரு மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு இட்டுச் செல்லும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பதவி விலகிய பிரதமர் ஜபலி முன்னாள் ஜனாதிபதி பென் அலியின் ஆட்சிக்காலத்தில் அரசியல் கைதியாக 15 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.