ஹலால் தொடர்பில் அரசுடன் பேச தயார் - அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
(எம். எஸ். பாஹிம்)
ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட பொருட்களை ஏனைய மதத்தவர்கள் சாப்பிட முடியாது என்பது தவறான பிரசாரமாகும். அத்தகைய பொருட்கள் முஸ்லிம்கள் மட்டும் சாப்பிடக்கூடியது என்ற பொருளல்ல. மாறாக, முஸ்லிம் களல்லாதவர்களும் சாப்பிடக்கூடிய பொருட்கள் என்பதே உண்மையான கருத்தாகும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்தது.
இலங்கையில் மட்டுமன்றி தாய்லாந்து, சிங்கப்பூர் அடங்கலான பல நாடுகளில் உணவுப் பொருட்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுவதாக கூறிய உலமாக சபை இறைவனுக்காக அறுக்கப்பட்ட பொருட்கள் மட்டுமன்றி இஸ்லாம் அனுமதித்த அனைத்துமே ஹலால் என கருதப்படுவதாகவும் குறிப்பிட்டது.
ஹலால் சான்றிதழ் தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கும் ஊடகமாநாடு நேற்று ரண்முத்து ஹோட்டலில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த உலமா சபை ஹலால் பிரிவு பொறுப்பாளர் மெளலவி பஸ்லுர் ரஹ்மான் கூறியதாவது,
உணவுப் பொருட்களுக்கு மட்டுமன்றி திருமணம் முதல் முஸ்லிம்களது சகல விடயங்களிலும் ஹலால் தொடர்புபட்டுள்ளது. வட்டியில்லா கொடுக்கல் வாங்கல்களுக்காகவே ஹலால் வங்கி முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எந்த நிறுவனம் மீதும் பலாத்காரமாக ஹலால் சான்றிதழ் திணிக்கப்படவில்லை. ஏதும் நிறுவனம் ஹலால் சான்றிதழ் பெற எம்மிடம் விண்ணப்பித்தாலே அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இறைவனுக்காக அறுத்துப்பலியிட்ட உணவுகளே ஹலால் என தவறாக கருதப்படுகிறது.
இஸ்லாம் தடை செய்த பொருட்களை கொண்டு தயாரிக்காத பொருட்கள் ஹலால் எனப்படுகிறது. சீமெந்து, ஊதுபத்தி போன்றவற்றுக்கும் ஹலால் சான்றிதழ் வழங்கப்படுவதாக கூறப்படும் பிரசாரம் தவறானது. ஐ.ஒ.எஸ். மற்றும் எஸ். எல். எஸ். சான்றிதழ் போன்று ஹலால் சான்றிதழும் ஒரு தரச்சான்றிதழே. ஆனால் ஹலால் சான்றிதழ் மூலம் உள்ளடக்கப்படுபவை ஐ.ஒ.எஸ். மற்றும் எஸ். எப். எஸ். சான்றிதழினால் உள்ளடக்க முடியாது.
ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட பொருட்கள் என்பது முஸ்லிம்கள் மட்டும் சாப்பிடக்கூடியது அன்றி ஏனையோரும் சாப்பிடக்கூடியது என்பதே உண்மையான அர்த்தமாகும். ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட உணவுகளை பெளத்தர்கள் சாப்பிடவும் பூஜைகளுக்கு படைக்கவும் முடியாது என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. இலங்கையில் மட்டுமன்றி தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற பெளத்த நாடுகளிலும் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
தாய்லாந்தில் தான் ஹலால் பரிசோதனை கூடத்துடன் கூடிய பல்கலைக்கழகம் உள்ளது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா உட்பட 60 ற்கும் மேற்பட்ட நாடுகளில் ஹலால் பரிசோதனை கூடங்கள் உள்ளதோடு 200 ற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஹலால் சான்றிதழ் வழங்குகின்றன. ஆனால் முதற் தடவையாகவே இந்த விடயம் குறித்து தேவையற்ற சர்ச்சை எழுப்பபட்டுள்ளது.
ஹலால் சான்றிதழ் மூலம் மாதாந்தம் 15 இலட்சம் வருமானம் கிடைப்பதோடு 12 இலட்சம் ரூபா இதற்காக செலவாகிறது. எமது கணக்கு விபரங்களை யாருக்கும் காட்ட தயாராகவே உள்ளோம். அதில் ஒளிவுமறைவு கிடையாது. குடிநீர், சாயம்பூசும் பிரஷ் என்பவற்றுக்கும் இச்சான்றிதழ் வழங்கப்படுகிறது என்றார். ஹலால் சான்றிதழ் தொடர்பில் ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள குற்றச்சாட்டு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,
ஹலால் சான்றிதழ் வழங்குவது அரச நிறுவனமொன்றின் கீழ் வரவேண்டும் என்பது அவரது தனிப்பட்ட கருத்தாகும். உலக அளவில் உள்ள அநேக நாடுகளில் அரசாங்கத்துடன் தொடர்பற்ற நிறுவனங்களே ஹலால் சான்றிதழ் வழங்குகின்றன. ஹலால் சான்றிதழ் மூலம் அதனுடன் தொடர்புள்ள நிறுவனம் 20 வீதம் வெளிநாட்டு செலாவணி உழைக்கிறது.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்துடன் பேசத் தயாராக உள்ளோம். நாட்டிற்கு எது சிறந்த முறையோ அதனை செய்ய நாம் பின்வாங்கமாட்டோம். ஹலால் தொடர்பான எந்த பிரச்சினை குறித்தும் பேசவும் கலந்துரையாடவும் நாம் தயார்.
Post a Comment