Header Ads



டெங்கு ஒழிப்பு தொடர்பில் வைத்திய அதிகாரி டாக்டர் பறூஸா நக்பர் ஆராய்வு



(எஸ்.எம்.அறூஸ்)

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதால் இப்பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பினை மேற்கொள்வதற்காக அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் எடுக்கப்படவுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இன்று 01-02-2013 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூஸா நக்பர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.எம். செரீப், மஸ்ஜிதுல் கைறாத் பள்ளிவாசல் தலைவரும் முன்னாள் உதவிக்கல்விப் பணிப்பாளருமான யூ.எம்.வாஹித், பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.ஜவாத் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம சேவகர்கள், சமூக மட்டத்தலைவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

டெங்கு ஒழிப்பு செயற்பாட்டில் அட்டாளைச்சேனை பிரதேச சபையும் பிரதேச செயலகமும் தங்களது ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளனர். அட்டாளைச்சேனை பிரதேசத்தை ஆறு வலயங்களாகப் பிரித்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, அட்டாளைச்சேனை இரண்டாம் பிரிவில் இரண்டு பேரும், பாலமுனை ஐந்தாம் பிரிவில் ஒருவரும், ஒலுவில் ஏழாம் பிரிவில் ஒருவரும் என மொத்தமாக நான்கு டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இப்பிரதேசங்களை முன்னலைப்படுத்தியதாக டெங்கு நடவடிக்கைகள் செயற்படுத்தப்படவுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூஸா நக்பர் தெரிவித்தார். சிரமதானம், புகை விசிறல், விழிப்புணர்வு கருத்தரங்கு, விழிப்பூட்டும் பொது அறிவித்தல்கள் என பல நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார். 




No comments

Powered by Blogger.