துனிசிய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டுக்கொலை
துனிசியாவின் ஆளும்கட்சியை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் சோக்ரி பெலய்ட் (48) நேற்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார்
துனிசியாவின் ஆளும்கட்சியை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் சோக்ரி பெலய்ட் (48) நேற்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார். துனிஸ் புறநகர் பகுதியான மென்சாவில் உள்ள அவரது வீட்டருகே மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சோக்ரி பெலய்ட்டை நோக்கி 3 முறை சுட்டனர்.
இதில் ஒரு குண்டு அவரது இதயத்தை துளைத்துக் கொண்டு வெளியேறியது. சுருண்டு விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 'அரபு வசந்தம்' என்ற பெயரிலான ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டம், கடந்த 2010-ம் ஆண்டு துனிசியாவில் தான் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போராட்டத்தை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். எனினும், அரசியல் தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்த படுகொலைக்கு துனிசிய பிரதமர் ஹமாடி ஜெபலி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சோக்ரி பெலய்ட் கொல்லப்பட்ட செய்தி அறிந்ததும் கட்சி பாகுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு பல்லாயிரக் கணக்கான மக்கள் உள்துறை அமைச்சக அலுவலகத்தின் முன் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.
பிரான்ஸ் பிரதமர் பிரான்கோய்ஸ் ஹாலண்டே மற்றும் பல்வேறு நாட்டின் தலைவர்கள் சோக்ரி பெலய்ட்டின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
Post a Comment