முஸ்லிம்களுக்கு ஹலால் மட்டும் பிரச்சினையல்ல, அநீதியிழைப்பும் தொடருகிறது - ரணில்
(TL) குளியாப்பிட்டி நகரில் பன்றியின் படத்தில் அல்லாஹ் என்ற வாசகம் பொறிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டதன் மூலம் இஸ்லாத்தையும் முஸ்லிம் சமூகத்தையும் அவமதித்தமை குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க தவறியமைக்காக அரசாங்கம் இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோர வேண்டுமென வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு வெறித்தனமாக செயல்பட்டவர்களை காலம் தாழ்த்தாமல் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
முஸ்லிம்களுக்கு அண்மைக்காலமாக இழைக்கப்பட்டு வரும் அநியாயங்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து திருப்தியடைய முடியாதுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் புதன்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க கூயதாவது;,
இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் இலங்கைக் குடி மக்களின் ஒரு பிரிவினர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த யதார்த்தத்தை ஒவ்வொருவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.எனினும் முஸ்லிம் மக்களுக்கு இந்த நாட்டில் அண்மைக்காலமாக அநீதி இழைக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அதுவும் பெரும்பான்மைச் சமூகமான பௌத்த மக்களில் ஒரு பிரிவினரே இந்த அநியாயத்தைச் செய்து கொண்டிருக்கின்றனர். இதன் பாரதூரமான தன்மையை சீர்தூக்கிப் பார்க்காமல் அரசு கண்துடைப்பு வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறது.
அரசு நீதியாகச் செயற்படத் தவறியதன் காரணமாகவே முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கையொன்றை தயாரித்துத் தருமாறு நான் விசேட குழுவொன்றை நியமித்துள்ளேன். கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கபீர் ஹாஷிம் தலைமையில் கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம்.முஸம்மில், கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.ஹலீம், மேல் மாகாண சபை உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், பைரூஸ் ஹாஜியார் வடமேல் மாகாண சபை உறுப்பினர் முஹம்மது நசீர் ஆகியோர் இக்குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இக்குழுவின் அறிக்கையை மூன்று வாரங்களுக்குள் தருமாறு நான் கேட்டிருக்கின்றேன்
முஸ்லிம்களுக்கு இன்று ஹலால் மட்டும் தான் பிரச்சினையல்ல. அவர்களுடைய மத உணர்வுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அண்மைக்காலமாக பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஹலால் சான்றிதழ் விவகாரத்தில் முஸ்லிம்களுக்கிடையே ஒத்த நிலைப்பாடு காணப்படவில்லை. ஆனால் பெரும்பான்மையான முஸ்லிம்களின் நிலைப்பாட்டுடன் ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துப் போகின்றது.
இந்த ஹலால் சான்றிதழ் விவகாரத்தை வைத்துக் கொண்டு முஸ்லிம் சமூகத்துக்கு நெருக்கடிகளைக் கொடுக்க முயற்சிப்பதை நாம் கடுமையாக கண்டிக்கின்றோம். பொது பல சேனா மாத்திரமல்ல. ஹெல உறுமயக் கட்சி உள்ளிட்ட சில அமைப்புகள் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சிங்கள மக்களைத் தூண்டிவிட்டு வருகின்றனர்.
இதனைத் தடுத்து நிறுத்த அரசு எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. நான் பொது பல சேனாவைச் சேர்ந்த கலகொட அத்தே ஞானசாரதேரோ உட்பட மகா சங்கத்தினர் சிலருடன் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடினேன்.
இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிமுடன் முஸ்லிம் எம்.பி.க்கள் மற்றும் சில பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். பொது பல சேனா அமைப்பு முஸ்லிம்கள் விடயத்தில் நடந்து கொள்ளும் முறையை நாம் கடுமையாக எதிர்த்தோம். பிரச்சினையை பேசித் தீர்க்க வேண்டுமென்பதை வலியுறுத்தினோம். இதற்கமைய கபீர் ஹாசீம் தலைமையில் முஸ்லிம் குழுவினருடன் தொடர்ந்து பேசுவதற்கு பொது பல சேனா அமைப்பு இணக்கம் தெரிவித்தது. இப்போது பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் தொடங்கி இதுவரை 10 க்கு மேற்பட்ட முஸ்லிம் மத வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்பட்ட போதிலும் அவ்வாறு எதுவுமே நடக்கவில்லை என்ற தோரணையில் அரசு நடந்து கொள்வதோடு அரசு என்னை விமர்சிக்க முற்பட்டு வருகிறது. தம்புள்ளைச் சம்பவத்தை போன்றே அநுராதபுரம், குருணாகல், ஹரியால சம்பவங்கள் நடந்ததாக அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம் சரத் அமுனுகம ஆகியோர் தெரிவித்த நிலையில் அதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.ஹசன் அலி பத்திரிகைகளுக்கு அறிக்கையும் விட்டிருந்தார். ஆனால் பொலிஸார் அப்படி எதுவுமே நடக்கவில்லையென தெரிவித்துள்ளனர். நாம் கேட்பது ஹஸன் அலியின் அறிக்கை பொய்யா அல்லது பொலிஸ் அறிக்கை பொய்யா? இதனை அரசு தான் சொல்ல வேண்டும்.
குளியாப்பிட்டிய நகரில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான ஊர்வலத்தைத் தடுக்க பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியிருந்தனர். இதன் காரணமாக அந்த ஊர்வலத்தின் போது பன்றியின் படத்தின் மேல் அல்லாஹ் என்ற வாசகத்தை பதித்த சுலோக அட்டையை தாங்கிய வண்ணம் சென்றனர்.
இது மோசமான செயலன்றி வேறென்னதாக இருக்க முடியும். இதனைத்தான் நாம் மத நிந்தனை என்கின்றோம். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமதிக்கும் வெறுக்கத்தக்க இச்செயலை தடுத்து நிறுத்தத் தவறிய அரசு இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் என்று நான் அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இவர் ஒரு தோல்வியின் சின்னம், மஹிந்தவினால் போசிக்கப்படும் குள்ள நரி. எரிகிற வீட்டில் பிடுங்க காத்திருக்கும்....... கூட்டம். இவரை நம்பும் அளவுக்கு ஏன் எமது சமூகம் நாதியற்று போக வேண்டும். இருக்கவே இருக்கிறது எமது வெள்ளிக்கிழமை ஜும்மா.....ஒரே நேரத்தில் சுமார் 8 லச்சம் பேர் நாடு பூராவும் கூடும் எமது மகத்தான மீடீய, எந்த ஒரு செய்தித்தரலும், வெப் சைட்டும் அடய முடியா பிரபபல்யம், காட்டுவோம் எமது ஒற்றுமையை கேட்போம் அரசின் பதிலை....இல்லை இது சிறு குழு என்று சொன்னா அதை பெரிது படுத்தும் ஊடகத்தை கட்டுப்படுத்த கோருவோம். செய்தி தணிக்கை ஒன்றும் இலங்கைக்கு புதிது இல்லயே
ReplyDelete