கொழும்பில் பட்டப் பகலில் ஒரு கோடி ரூபா கொள்ளை
கொழும்பு 2 ஐச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரிடமிருந்து ஒரு கோடி ரூபா பணம் பட்டப்பகலில் கொள்ளையிடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை பிற்பகலே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொம்பனித்தெரு பகுதியில் அமைந்துள்ள வெளிநாட்டு பணப்பரிமாற்ற நிலையமொன்றின் உரிமையாளர் ஒருவரிடமிருந்தே பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் அந்தப் பிரதேசத்தில் தனியார் வங்கியொன்றிலிருந்து பகல் 12 மணியளவில் பணத்தை எடுத்துக்கொண்டு தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது கங்காரமை பகுதியில் போக்குவரத்துப் பொலிஸாரின் சீருடையை ஒத்த ஒருவர் அந்த வாகனத்தை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த வாகனம் நிறுத்தப்பட்டபோது அதற்குப் பின்னால் டிப்பன்டர் வாகனமொன்றிலிருந்து இறங்கி வந்த குழுவொன்று வர்த்தகரின் வாகனத்துடன் அவரை அழைத்துச் சென்று பிட்டகோட்டே பகுதியில் அவரை இறக்கிவிட்டு வாகனத்துடன் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து பிற்பகல் 3 மணியளவில் கொழும்பு குற்றப்பிரிவு பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து வர்த்தகரின் வாகனம் தெமட்டகொட பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொள்ளையர்கள் அந்த வாகனத்தை அங்கே கைவிட்டு பணத்துடன் தமது வாகனத்தில் களனி பக்கம் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment