சவூதி முடிக்குரிய இளவரசர் பதவி வரிசையில் மூன்றாமவராக முக்ரின் நியமனம்
(TN)
சவூதி அரேபியாவின் உளவுப் பிரிவு முன்னாள் தலைவரான இளவரசர் முக்ரின் பின் அப்துல் அஸிஸ் அல் சவுத், நாட்டின் இரண்டாவது துணை பிரதமராக மன்னர் அப்துல்லாஹ்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் 89 வயது மன்னர் அப்துல்லாவுக்கு அடுத்து நாட்டின் மன்னர் பதவியை ஏற்பதற்கான வரிசையில் முக்ரின் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதில் முடிவுக்குரிய இளவரசரும் முதல்நிலை துணைப் பிரதமருமான 77 வயது சல்மான் மோசமான உடல் நிலையால் பாதிக்கப் பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இரண்டாம் நிலை பிரதமராக நியமிக்கப்பட்ட முக்ரின், மன்னரின் பணிகளை முன்னெடுப்பதற்கும் அவரது சீர்திருத்த செயற்பாடுகளில் அவதானம் செலுத்தவும் திட்டமிட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கடும்போக்கு கொள்கைகளை கடைப்பிடித்துவரும் சவூதியில் மன்னர் அப்துல்லா அண்மைக்காலமாக ஒரு சில சீர்த்திருத்தங்களை செய்து வருகிறார். குறிப்பாக சவூதியில் அதிகாரம் மிக்க மதப் பொலிஸ் (முதவா) பிரிவுக்கு நவீன சிந்தனை கொண்ட பதிய தலைவரை நியமித்தார். அத்துடன் பெண்களுக்கு பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்புகளை அதிகரித்துக் கொடுத்த மன்னர், அவர்களுக்கு வாக்குரி மையையும் வழங்கினார். அத்துடன் பாராளுமன்றத்தில் பெண்களுக்கும் பிரதிநிதித்துவத்தையும் மன்னர் வழங்கியுள்ளார். எனினும் மன்னர் அப்துல்லா அடிக்கடி சத்திரசிகிச்சைக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது. அதே போன்று மன்னர் அப்துல்லாவுக்கு அடுத்து இருக்கும் முடிக்குரிய இளவரசர் சல்மானும் மோசமான உடல் நிலைக்கு சிகிச்சை பெற ஒரு மாதகாலமாக நாட்டைவிட்டு வெளியேறியிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கடந்த ஆண்டு சவூதி உளவுப்பிரிவு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இளவரசர் முக்ரினுக்கு இரண்டாம் நிலைத் துணைப் பிரதமர் பதவி வழங்கியிருப்பதன் மூலம் சவூதி மன்னர் பரம்பரை தமது ஆட்சியை அடுத்த தலைமுறைக்கு நகர்த்தும் நடவடிக்கையை எடுத்திருப்பதாக நம்பப்படுகிறது.
67 வயதான முக்ரின், சவூதி மன்னர் பரம்பரையை தோற்றுவித்த அப்துல் அkஸின் இளைய மகன்களில் ஒருவராவார். மிதவாத சிந்தனை கொண்ட இவர் வொஷிங்டன், லண்டனுடன் நெருங்கிய உறவை பேணி வருபவர் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவர் மன்னர் அப்துல்லாவின் சீர்திருத்தப்பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment