Header Ads



எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கும் அரசியல் அறிக்கைகள்


(பெப்ரவரி மாத அழைப்பின் ஆசிரியர் தலைப்பு)

கடந்த ஆண்டில் முஸ்லிம்களுக்கெதிராய் முன்னெடுக்கப்பட்ட இனவாத செயற்பாடுகளின் நிகழ்ச்சி நிரல் இந்த ஆண்டிலும் திட்டமிட்டபடி கண கச்சிதமாய் காய்  நகர்த்தப்பட்டு வருவதனை அவதானிக்க முடிகிறது. இனவாதத்தை பச்சையாய் கக்கும் பணியில் பல பௌத்த அமைப்புகள் கச்சை கட்டி களத்தில் இறங்கியுள்ளமை வௌ்ளிடை மலை. தனிப் பெயரில் இயங்காது வித்தியாசமான பெயர்களை சுட்டிக் கொண்டு முஸ்லிம் விரோத மனப்பான்மையை பெரும் பான்மை சமூகத்தில் விதைப்பதுவே இவர்களின் அடிப்படை இலக்கு. இவ்வாறு பிரிந்து செயற்படுவதற்கு இரு காரணிகள் உண்டு. ஒன்று, பொது பல சேனா என்ற ஒரு அமைப்பினர் மட்டும் தான் இந்த கருத்துக்களை சொல்லவில்லை. இது ஒட்டு மொத்த சிங்களவர்களின் ஏகோபித்த கருத்துதான் என்ற மாயையை மக்கள் மனதில் தோற்றுவிப்பது. அடுத்து, முஸ்லிம்களுக்கெதிரான அத்துமீறல்களை புரிந்து விட்டு ‘இதனை நாம் செய்ய வில்லை’ என்று அறிக்கைவிட்டு ஆளுக்கு ஆள் சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளாது தப்பித்துக் கொள்வது.

இவ்வினவாத அமைப்பினரின் முஸ்லிம் எதிர்ப்புப் படலம் இவ்வாண்டின் துவக்கத்துடன் சுடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக 05-01-2013 அன்று அநுராதபுர மல்வத்து ஓயா பள்ளி வாசல் அவ்விடத்தைவிட்டும் முற்றாக அகற்றப்பட வேண்டும் எனக்கோரி ஒரு பிரிவினரால் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது. இவ்வெதிர்ப்பை கண்டு அச்சமடைந்த அப்பிரதேச வாழ் முஸ்லிம்கள் ‘நாம் வேறு இடத்திற்கு இடம்பெயர தயார்’ என்று ஒத்துக் கொண்டுமுள்ளனர். இது போக, 07-01-2013 அன்று சட்டக்கல்லூரிக்கு முன் ‘முஸ்லிம் மாணவர்களின் சட்டக் கல்லூரி தெரிவில் முறைகேடு உள்ளது’ எனக் கோஷமிட்டு சிங்கள ராவய அமைப்பினர் ஓர் ஆர்ப்பாட்டத்தை நடாத்தினர். இதே விடயத்திற்காக 09-01-2013 அன்று பரீட்சை தினைக்களத்தின் முன்பாக பொது பல சேனாவினால் மீண்டும் ஓர் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மேலும், 19-01-2013 அன்று முஸ்லிம்களின் பொருளாதாரத்தை முடக்கும் நோக்கில் மஹரகம NO LIMIT முன்னால் சிங்கள ராவய என்ற அமைப்பினரால் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது. இவர்களின் துவேச உணர்வுகளை மொத்தமாய் கொட்டித் தீர்க்கும் விதமாய் 22-01-2013 அன்று ஓர் ஊடகவியலாளர்  சந்திப்பை பொது பல சேனா நடாத்தியது. இதில், ‘பள்ளிவாசல்கள் ஜிஹாதுக்கான பங்கர்களாக தொழிற்படுகின்றன. ஜிஹாத் பயிற்சியளிக்கும் 10 அமைப்புகள் இலங்கையில் உள்ளன. ஷபாப் இது போன்ற அமைப்புகளில் ஒன்று. முஸ்லிம்களுக்கு தனி திருமணச்சட்டம் இருக்கக் கூடாது. ஹலால் உணவு முறை ஒழிக்கப்பட வேண்டும்’ உள்ளிட்ட துவேச உணர்வுகளை பச்சையாய் வெளிப்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான தங்கள் குரோதத் தீயை மூட்ட முனைந்தனர். இதே பாணியில் நெத் FM எனும் வானொலிச் சேவையிலும் 23-01-2013 அன்று பொது பல சேனாவினால் காட்டமான முறையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. காவிக்கர சேவகர்களின் மட்டரக சிந்தனையின் உச்ச வெளிப்பாடாய் 24-01-2013 அன்று குளியாப்பிட்டியவில் வைத்து ஹெல சிஹல ஹிரு என்ற அமைப்பினரால் ஓர் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது, வௌ்ளை நிறத்தில் பொம்மை செய்யப்பட்டு, அதில் அல்லாஹ் என்ற சொல்லை எழுதி, ஊர்வல முடிவில் அப்பொம்மை தீமூட்டப்பட்டது. முஸ்லிம்கள் உண்ணவெறுக்கும் பன்றியை வரைந்து, அதன் மீதும் அல்லாஹ் என்ற அரபு சொல்லை எழுதியது மட்டுமின்றி,  ‘ரிஸானாவின் இரத்தம் குடித்த இரத்தக் காட்டேறி அல்லாஹ்’ எனும் தலைப்பில் துண்டுப் பிரசுரமும் விநியோகித்து முஸ்லிம்கள் மீதும், இஸ்லாத்தின் மீதும் தங்களுக்குள்ள வெறுப்புணர்வை வெளிக்காட்டினர். 

முஸ்லிம்களை இலக்கு வைத்துத் தாக்கும் காவிக் காடைத்தனம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ள இத்தருணத்தில், நிகழவிருக்கும் அசம்பாவிதத்தை அணைபோட்டு தடுக்க கடமைப்பட்ட அரசியற் தலைவர்கள் எரியும் தீயில் எண்ணெய் வார்ப்பது போன்று நடந்து கொள்வது கண்டிக்கத்தக்க விடயமாகும். சமூகம் குறித்த பிரக்ஞை துளியும் இல்லாது வாயில் வரும் அபத்தங்களையெல்லாம் அறிக்கைகளாக வெளியிடும் சுயலாபப் போக்கு மீண்டும் ஒரு விஸ்வரூபத்திற்கே வழிகோலும்.

இலங்கை மண்ணை ஆங்கிலேய வெளிநாட்டுச் சக்திகள் ஆக்ரமித்து வளங்களை சுரையாடத்துவங்கிய போது இந்நாட்டின் சுதந்திரத்திற்காய் உழைத்தவர்கள் முஸ்லிம்கள். ஜெனீவாவிலே இலங்கையின் இறைமைக்கு பங்கம் வரும் அபாயம் நிலவியபோது அதனை எதிர்த்து குரல்களை உயர்த்தியது மட்டுமின்றி களத்தில் இறங்கி ஆர்ப்பாட்டம் புரிந்தவர்கள் நாம். இவ்வாறு இந்நாட்டின் நம்பிக்கைக்குரிய பிரஜைகளாய் வரலாறு நெடுகிலும் முத்திரை பதித்து வரும் எம்மை பார்த்து பொது பல சேனா உள்ளிட்ட இனவாதத்தை தூண்டும் பயங்கரவாத அமைப்புகள் ‘முஸ்லிம்கள் அடிப்படை வாதிகள். பள்ளி வாசல்கள் ஜிஹாதிய பங்கர்கள்’ என்ற அவதூறுகளை அள்ளி வீசுவார்கள் எனில் அதனை ரோஷமுள்ள எந்த முஸ்லிமும் சகித்துக் கொள்ள மாட்டான். இலங்கை வாழ் முஸ்லிம்களிடம் இல்லாத ஒரு பயங்கரவாத நடவடிக்கையை இருப்பது போன்று சித்தரிப்பதன் மூலம் இவ்வினவாதிகள் எதிர்பார்ப்பது என்ன? இவர்களின் இப்போலித்தனமான ‘ஜிஹாதிய புச்சாண்டிக்கு’ ஜால்ரா அடிக்கும் விதமாய் சிந்தனைத்திறனற்ற சில அரசியல் வாதிகளும் பாராளுமன்றத்தில் வைத்து பக்க வாத்தியம் இசைப்பது ஆச்சரியமாக உள்ளது. 

கடந்த  23-01-2013 அன்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார ‘இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதம்  இருக்கிறது. அதனை கண்டு பிடித்து அழிக்க வேண்டும்’ என்று  அறிக்கை விட்டார். 24-01-2013 அன்று ஜாதிக ஹெல உருமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்ன தேரர், ரிஸானா நபீக் சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை மீதான விவாதத்தில் உரையாற்றும் போது ‘புத்தர் சிலையை வைத்திருந்தால் கையை வெட்டும் காட்டுமிராண்டித்தனமான சட்டமே சவுதி உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் அமுலில் இருக்கின்றது. இலங்கையை சவுதி அரேபியாவாக மாற்றி இங்குள்ள பெண்கள் பர்தா அணிய வேண்டும் என நிர்ப்பந்திப்பதற்கு அடிப்படை வாதக் குழுக்கள் செயற்படுகின்றன’ என்றார். (25-01-2013 : சுடர் ஒளி, வீரகேசரி 9 ஆம் பக்கம்). இதே பாராளுமன்ற அமர்வில் ஐ.தே.கட்சியின் குருநாகல் மாவட்ட எம்.பி தயாசிரி ஜயசேகர உரையாற்றும் போது ‘நாட்டில் இன்று இரு அடிப்படை வாதங்கள் இருக்கின்றன. ஒன்று பௌத்த அடிப்படை வாதம். மற்றையது முஸ்லிம் அடிப்படை வாதம். இவர்கள் இருவரும் இதைப் பயன்படுத்தி நாட்டை நாசமாக்க முயற்சிக்கின்றனர்.   (25-01-2013 : தினக்குரல் 3 ஆம் பக்கம்) என்று அறிக்கை விட்டுள்ளார்.

எந்த அடிப்படை வாதம் முஸ்லிம்களிடம் புறையோடியிருப்பதாக பொது பல சேனா என்ற அமைப்பு அண்டப்புளுகை அள்ளி வீசுகிறதோ அக்குற்றச்சாட்டை வழிமொழியும் விதமாய் மேற்குறித்த அரசியல்வாதிகளின் அறிக்கைகள் அமைந்திருப்பதை காணலாம். ஒரு பொய்யை பல விடுத்தம் பல நபர்கள் திரும்பத்திரும்ப அழுத்திச் சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற எண்ணத்தில் இனவாத அமைப்புகளும், அவர்களுக்கு உறுதுணையாய் குரல் கொடுக்கும் அரசியல் போர்வை போர்த்திய பச்சோந்திகளும் காய் நகர்த்தும் கைங்கரியமே தற்போது இலங்கை அரசியல் தளத்தில் அரங்கேற்றப்படுகிறது.
இன்னும் சொல்லப் போனால், ‘நாங்கள் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு எதிரானவர்களல்ல. வஹ்ஹாபிய மற்றும் ஸலபி அடிப்படைவாத பிரிவினருக்கே நாம் எதிரானவர்கள்’ என்று பொது பல சேனா எடுத்து வைத்த வாதத்தை நூற்றுக்கு நூறு சரிகாண்பது போல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் அறிக்கை விட்டிருப்பதை காணும் போது இனவாதிகளின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அரச இயந்திரம் இயங்குகிறது என்பது பட்டவர்த்தனமாய் பளிச்சிடுகிறது. 

இனவாத பௌத்த அமைப்புகளால் முஸ்லிம்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு தகுந்த தீர்வு வேண்டும் என்று கோரிக்கை வைத்து முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியோடு சந்திப்பை மேற்கொண்டனர். இதன் போது, முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் எதுவொன்றும் தனக்கு தெரியாதது போன்றும், இவற்றை செய்பவர்கள் யார் என்று தான் ஏலவே அறியாதது போன்றும், தற்போது தான் இத்தகவல் தனக்கு எத்திவைக்கப்படுவது போன்றும் பாசாங்கு காட்டிய ஜனாதிபதி, முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்களை விசாரிப்பதற்கென்று விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைப்பதாக கூறினார். மேலும், தீர்வை தேடிச் சென்றவர்களிடம் மரத்திலிருந்து வீழ்ந்தவனை மாடு குத்துவது போன்று ஒரு குண்டையும் தூக்கிப் போட்டார். ‘இரு தரப்பிலிருந்தும் எனக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. முஸ்லிம்கள் ஒரு மதமாக இருந்தாலும் இஸ்லாத்துக்குள் பல்வேறு குழுக்கள் செயற்பட்டு வருவதாக எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன’ என்றார். 

பொது பல சேனா எந்த வஹ்ஹாபிய, ஸலபிய பிரிவுகள் இந்நாட்டில் இயங்குவதாக குற்றம் சாட்டினவோ, அவை தடை செய்யப்பட வேண்டும் என்று ஆர்ப்பரிக்கின்றனவோ அவர்களின் வாதத்தை, மஹிந்த  அவர்கள் தனது வாயால் இந்நாட்டு மக்களுக்கு பொது பல சேனா சொல்வது உண்மையென பரைசாற்றியுள்ளார். 

முஸ்லிம்களுக்கு எதிராய் அதிகரித்து வரும் இனவாத சக்திகளின் நெருக்குதல்களுக்கு தீனி போடும் எத்தனங்களை அரசியல்வாதிகள் முதல் அரச உயர் பீடம் வரை முன்னெடுப்பதை தெளிவாக அவதானிக்க முடிகிறது. பாலஸ்தீனத்திலும், குஜராத்திலும், மியன்மாரிலும் முஸ்லிம்களுக்கு எதிராய் எவ்வாறு இனவாத தாக்குதல் நடாத்தப்பட்டனவோ, அதே வழிமுறை இலங்கையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை கண்கூடு. சாந்தமாய் இருக்கும் முஸ்லிம்களை வழிச்சண்டைக்கு இழுத்து, உணர்ச்சி வசப்படுத்தி மீண்டும் ஓர் இரத்தக்களரியை தோற்றுவிப்பதை தவிர வேறு எதுதான் இவர்களின் உள்நோக்கமாக இருக்க முடியும்? பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் விதமாய் இன முரண்பாட்டை வழுக்கச் செய்து கலவரம் வெடிக்கும் போது அதனை தடுப்பதற்காக இராணுவத்தையும் தயார் நிலையில் வைத்திருப்பதானது இவ்வரசின் மீது மிகப்பெரிய கேள்விக் குறியை எழுப்பியுள்ளது.  



No comments

Powered by Blogger.