Header Ads



அமைதிக்கான நோபல் பரிசுக்கு மலாலா பெயர் பரிந்துரை


தலிபான்களின் பெண்கல்வி மறுப்புக்கு எதிரான போராட்டங்களின் அடையாளமாக கருதப்படும் மலாலா யூசுப்சாய் 2013-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 15 வயதே ஆன பாகிஸ்தானின் பள்ளி மாணவியான மலாலா தனது சமூக வலைத்தளத்தில் பெண்கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். 

அதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி பள்ளிப் பேருந்தில் தலிபான்களால் சுடப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். நார்வேயில் ஒவ்வொரு வருடமும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 

முந்தய ஆண்டுகளில் நோபல் பரிசு பெற்றவர்கள், சில பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்கள், பல நாடுகளின் நாடாளுமன்ற உறுபினர்கள், சில குறிப்பிட்ட உலகளவிலான அமைப்புகள் உள்ளடங்கிய பல்லாயிரக்கணக்கானோர் இந்த நோபல் பரிசுக்கான பரிந்துரையைச் செய்யலாம். இவ்வாறு பரிந்துரை செய்தவர்கள், தங்களால் பரிந்துரைக்கப்பட்ட நபர்களைப் பற்றிய விபரங்களை வெளியிடலாம். அந்த வகையில் பிரெஞ்சு, கனடா, மற்றும் நார்வே நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலாலாவை பரிந்துரைத்தது தெரியவந்துள்ளது. 

பெலாரசின் அலெஸ் பெல்யாட்ஸ்கி மற்றும் ரஷ்யாவின் லூத்மிலா அலெக்ஸேவா போன்ற மனித உரிமை போராளிகளின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படும் என்பதை யூகிக்க முடியாது. நோபல் கமிட்டி நோபல் பரிசுகளை வழங்குவதால், அவர்களுடைய கொள்கைகளுக்கு நோபல் கமிட்டி அங்கீகாரம் அளிப்பதாக அர்த்தம் இல்லை என விளக்கம் அளித்துள்ளது.

No comments

Powered by Blogger.