சுதந்திரதின நிகழ்வுகளில் முஸ்லிம்களின் பங்கேற்பு - சிங்கள ஊடகவியலாளர் வியப்பு
(அஸ்ரப் மொஹமட் அஸ்லம்)
இலங்கையின் 65வது சுதந்திரத் தின வைபவங்கள் வெகு சிறப்பாக நாடு முழுவதும் அனுஸ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இம்முறை முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சுதந்திரத் தின செயற்பாடுகள் முன்னரை விட கலை கட்டியிருப்பது சகலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
புத்தளமும் இதற்கு விதி விலக்கு இல்லை என்பதை பறைசாற்றும் வகையில் வரர்த்தக நிலையங்கள், அலுவலகங்கள், பாடசாலைகள், வீடுகள். மத்ரசாக்கள், வீதிகள் மற்றும் வாகனங்கள் முதலியவற்றில் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. சுவரொட்டிகளும் ஒட்டப்படடிருந்தன.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சுதந்திரத் தினம் தொடர்பில் முஸ்லிம்களுக்கு விடுத்த அறிவிப்பு, புத்தளம் மாவட்ட உலமா சபை, புத்தளம் பெரிய பள்ளி, இலங்கை ஜமாஅதே இஸ்லாமி புத்தளம் கிளை, புத்தளம் நகர சபை, புத்தளம் பிரதேச செயலகம் என்பவற்றின் செயற்பாடுகள் இதற்கு பெரும் உந்து சக்தியாக திகழ்ந்தன.
புத்தளம் பிரதேச சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் இதனைக் கண்ணுற்று தனது வாழ்வில் புத்தளத்தில் இத்தகையதொரு நிலையைக் கண்டு தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், அதேவேளை பெருத்த ஆச்சரியம் அடைவதாகவும் தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
சுதந்திரத் தின வைபவங்களின் ஓர் அங்கமாக இலங்கையின் முதலாவது அறபு மத்ரசாக்களில் ஒன்றென பெயர் பெற்ற, நூற்றாண்டு கண்ட, வரலாற்று பெருமை மிகு அல்மத்ரசத்துல் காஸிமிய்யா அறபுக் கல்லூரியிலும் எளிமையான வைபவம் ஒன்று அதிபர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் தலைமையில் இடம் பெற்றது. இதில் உஸ்தாத்மார்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இவ் வைபவத்தில் இலங்கையின் சுதந்திரத்திற்காக முஸ்லிம்கள் குறிப்பாக முன்னைய முஸ்லிம் தலைவர்கள் ஆற்றிய மகத்தான பங்களிப்பு. சுதந்திரத்துக்குப் பின்னர் முஸ்லிம்களும் முஸ்லிம் தலைவர்களும் நாட்டுக்காக செய்து வரும் பங்களிப்புக்கள், முஸ்லிம்கள்; தேசப்பற்றுள்ளவர்கள், அதற்கான சான்றுகள்ää முஸ்லிம்கள் இந்நாட்டில் இதர இன மக்களுடன் எவ்வாறு வாழ விரும்புகின்றனர். சமகாலத்தில் முஸ்லிம்களின் கடமைகளும் பொறுப்புக்களும் முதலான விடயங்களை உள்ளடக்கி அல்மத்ரசத்துல் காஸிமிய்யா அறபுக் கல்லூரி அதிபரும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் மாவட்டத் தலைவருமான அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் உரை நிகழ்த்தினார்.
Post a Comment