Header Ads



'தலிபான், அல்கைதா தடை இலங்கை முஸ்லிகளை பாதிக்கும்' - முஸ்லிம் கவுன்ஸில்



தலிபான் மற்றும் அல்கைதா அமைப்புக்களை தடை செய்வது என இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை முஸ்லிம் கவுன்ஸிலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை 03-02-2013 நடத்தியது. அந்தச் சந்திப்பிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டது.

முஸ்லிம் சமூகத்தின் கலாச்சார அம்சங்கள் குறித்து தவறான கருத்துக்களை வெளியிடுவதை அனைவரும் தவிர்த்துக்கொள்ளுமாறு கோரும் வகையில் நடத்தப்பட்ட அந்த செய்தியாளர் சந்திப்புக்கு அந்த கவுன்ஸிலின் தலைவர் என். எம். அமீன் தலைமை தாங்கினார்.

இப்படியான தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதன் மூலம், முஸ்லிம்களுக்கும், ஏனைய சமூகங்களுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அமீன் எச்சரித்தார்.

குறிப்பாக, ஹலால் சான்றிதழ்கள் வழக்கும் நடைமுறைகள் குறித்து சில அமைப்புக்களால் அண்மைக்காலமாக சில தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதாக அங்கு அமீன் விளக்கினார்.

அந்த சந்திப்பின்போது பேசிய ஜனாதிபதி சட்டத்தரணியான எம்.எம். சுஹைர், அவர்கள், தலிபான்கள் மற்றும் அல்கைதாவுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் உத்தேச தடையை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார். 

இப்படியான தடைச் சட்டங்களைப் பயன்படுத்தி சிறுபான்மையினரான முஸ்லிம்கள் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.

சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளுடன், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுடன் வணிகத் தொடர்புகளை வைத்திருப்பதாகக் கூறிய சுஹைர் அவர்கள், இந்தச் சட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படும் பட்சத்தில், அது இவர்களுக்கு பாதகமாக அமையலாம் என்றும் இவை குறித்து தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.