ஒலுவில் கடலரிப்பு - ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்ற அமைச்சர் அதாஉல்லா
(ஜே.எம். வஸீர்)
ஒலுவில் துறைமுக நிர்மாணப்பணிகள் காரணமாக ஒலுவில் பிரதேசத்தில்; கடலரிப்பு ஏற்பட்டு கடல் குடியிருப்புகளை நோக்கி நகர்ந்து வருகின்ற விடயம் தொடர்பாக அடிக்கடி ஊடகங்களின் வாயிலாக செய்திகள் வெளிவந்தமையை நாம் அறிவோம்.
கடலரிப்பின் காரணமாக பிரதேசவாசிகளும் குறிப்பாக பிரதேச மீனவ சமூகத்தினரும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். ஒலுவில் மக்கள் எதிர்நோக்குகின்ற இவ் அச்சுறுத்தல் சம்பந்தமாக அண்மையில் ஒலுவில் மக்கள் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் இப்பிரச்சினை அறிந்த அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்து ஒலுவில் சமூகம் கடலரிப்பு சம்பந்தமாக எதிர்நோக்குகின்ற அசௌகரியங்களையும் அச்சுறுத்தல் களையும் எடுத்துரைத்தார்.
அதனடிப்படையில் ஜனாதிபதி அவர்கள் நேற்றை தினம் தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் பொறியியல் பீட கட்டிடத் திறப்பு விழாவிற்கு வருகை தந்த வழியில் ஒலுவிலில் கடலரிப்பு ஏற்பட்ட பிரதேசத்தையும் அதன் தற்போதைய நிலவரத்தையும் பார்வையிட்டார். கடலரிப்பை தடுக்கும் வகையில் உரிய அதிகாரிகளுக்கு மிக விரைவில் ஆலோசனை வழங்கி அதற்கான பணிகளை முன்னெடுப்பதன் மூலம் அம்மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பேனென அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களிடம் ஜனாதிபதி உத்தரவாதம் அளித்தார். உத்தரவாதம் அளித்த ஜனாபதி அவர்களுக்கு ஒலுவில் பிரதேச மக்கள் சார்பிலும், மாவட்டத்தின் அமைச்சர் என்ற வகையிலும் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா நன்றி தெரிவித்தார்.
Post a Comment