Header Ads



முஸ்லிம் எதிர்ப்பு தலைதூக்க சர்வதேச சக்திகளே காரணம் - தம்பர அமில தேரர்



முஸ்லிம்கள் மீது அடக்குமுறை தொடர்ந்தால் அல் - குவைதா தலையிடக் கூடிய அபாயம்; ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் இயக்கம் எச்சரிக்கை 

சூடானை வடசூடான், தென் சூடான் எனப் பிரிப்பதுபோல சர்வஜன வாக்கெடுப்பினூடாக இலங்கையில் தமிழீழத்தை உருவாக்க சர்வதேச சக்திகள் முயற்சிக்கின்றன.

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு தமிழீழம் உருவாக்கப்படவேண்டுமெனில் அதனைத் தீர்மானிக்கும் சக்தி முஸ்லிம் மக்களிடமே உண்டு. ஏனெனில், கிழக்கு மாகாணத்தில் 33 சதவீதம் தமிழர், 33 சதவீதம் முஸ்லிம்கள், 33 சதவீதம் சிங்களவர் என சம அளவிலான இனப்பரம்பல் காணப்படுகிறது.

முஸ்லிம்களுக்கு எதிரான எதிர்ப்புகளும், அடக்குமுறைகளும் நாட்டில் இனியும் தொடருமாயின் அல் குவைதா உள்ளிட்ட சர்வதேச முஸ்லிம் அமைப்புகள் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் அபாயகரமான நிலை தோற்றம் பெறும் என ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் இயக்கம் நேற்று எச்சரிக்கை விடுத்தது.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்னும் அந்தத் துன்பத்திலிருந்தும், வேதனையிலிருந்தும் மீளவில்லை. சிங்கள மக்களும் அவ்வாறே. இந்நிலையில், அரசு சர்வதேசத்தின் ஒழுங்குப்பத்திரத்துக்கமைய செயற்படுவதைத் தவிர்த்து நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்று ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளர் தம்பர அமில தேரர் அரசுக்கு யோசனை வழங்கினார்.

கொழும்பிலுள்ள தேசிய நூல்நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

முஸ்லிம் மக்களுக்கு எதிரான எதிர்ப்புகளும், அடக்குமுறைகளும் நாட்டில் அதிகரித்து வருகின்றன. புலிகளூடாக உருவாக்க முடியாத வடக்கு, கிழக்கு இணைந்த தமிழீழத்தை உருவாக்க சர்வதேச நாடுகள் சூழ்ச்சி செய்கின்றன. சர்வதேசத்தின் இந்தச் சூழ்ச்சிகார ஒழுங்குப்பத்திரத்திற்கமையத்தான் அரசு செயற்படுகிறது.

சூடானை வடசூடான், தென் சூடான் எனப் பிரிப்பதுபோல சர்வஜன வாக்கெடுப்பினூடாக இலங்கையில் தமிழீழத்தை உருவாக்க சர்வதேச சக்திகள் முயற்சிக்கின்றன.
வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு தமிழீழம் உருவாக்கப்படவேண்டுமெனில் அதனைத் தீர்மானிக்கும் சக்தி முஸ்லிம் மக்களிடமே உண்டு.

ஏனெனில், கிழக்கு மாகாணத்தில் 33 சதவீதம் தமிழர், 33 சதவீதம் முஸ்லிம்கள், 33 சதவீதம் சிங்களவர் என சம அளவிலான இனப்பரம்பல் காணப்படுகிறது.

முஸ்லிம்களின் ஆதரவு எவருக்குக் கிடைக்குமோ அவர்கள்தான் பெரும்பான்மையாவார்கள். எனவே, தமிழீழத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம்கள் இருக்கின்றனர்.

முன்னர் தமிழ், சிங்கள மக்களிடையே பிரிவினையையும், விரிசலையும் ஏற்படுத்திய சர்வதேச நாடுகள், இப்போது முஸ்லிம், சிங்கள மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த சூழ்ச்சி மேற்கொள்கின்றன.

போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்னும் அந்தத் துன்பத்திலும், வேதனையிலும் இருந்து மீளவில்லை. சிங்கள மக்களும் அவ்வாறே. இந்த நிலையில், நாட்டில் மீண்டும் பிரிவினையை ஏற்படுத்த சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்கின்றன.

இதற்கமைய ஐக்கிய நாடுகள் சபை, பொதுநலவாய நாடுகள் அமைப்பு, உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றினூடாக அந்தச் சர்வதேச சக்திகள் தமது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

போரினூடாக உருவாக்க முடியாத தமிழீழத்தை சிங்கள, முஸ்லிம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்திப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் அந்த நாடுகள் இருக்கின்றன.

அதற்கான பாதையை ஏற்படுத்திக்கொடுக்கத்தான் இந்தப் பொதுநலவாய சேனா அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பினூடாக என்றுமில்லாதவாறு முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றன.

பௌத்த மக்களிடம் இனவாதத்தை தூண்டுகிறார் நாட்டில் ஜனாதிபதி

பௌத்த மக்களிடம் இனவாதத்தைத் தூண்டிவிட்டு, அதன்மூலமாக அரசியல் நடத்தவேண்டும் என்பதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நோக்கம். அதுபோல முஸ்லிம் மக்களிடையே இனவாதத்தைத் தூண்டிவிட்டு அதனூடாக அரசியல் நடத்தவேண்டும் என்பதே முஸ்லிம் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் நோக்கம்.

தமது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக சர்வதேச நாடுகளின் ஒழுங்குப்பத்திரத்திற்கமைய அரசு செயற்படுகின்றது. முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் எதிர்ப்புகளும் இனியும் நாட்டில் தொடருமாயின் அல் குவைதா உள்ளிட்ட சர்வதேச முஸ்லிம் அமைப்புகள் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் அபாயகரமான நிலை தோற்றம்பெறும்.

எனவே, நாட்டில் மீண்டும் ஒரு நீண்டகால பேராபத்தை ஏற்படுத்துவதற்கு வழிசமைக்கும். சர்வதேச ஒழுங்குப் பத்திரத்திற்கமைய செயற்படுவதை அரசு நிறுத்தவேண்டும்.

அத்துடன், முஸ்லிம் மக்களுக்கு எதிராக நாட்டில் இடம்பெற்று வரும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் இல்லாதொழிக்க அது நடவடிக்கை எடுக்கவேண்டும்  என்றார் தம்பர அமில தேரர்.

No comments

Powered by Blogger.