Header Ads



எந்தவொரு தன்மானமுள்ள முஸ்லிம் இனத் தலைவரும் முன்வர முடியுமா..?


போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகளாகியும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. மனித உரிமை விடயங்களில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனாலேயே ஒட்டுமொத்த தமிழகமும் இலங்கை அரசுக்கு எதிராகத் திரண்டுள்ளது.

தமிழகத் தலைவர்களை திட்டிப் பயனில்லை. இலங்கை அரசு தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தின் இந்த எதிர்ப்புக்கள் வெறும் ஆரம்பம்தான். இந்த நிலைமை இன்னும் மோசமாகலாம் என்று இலங்கை அரசை எச்சரித்துள்ளார், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள நீண்ட அறிக்கையில் தெரிவித்துள்ளமை வருமாறு: 

தமிழகத்து அரசியல் கட்சி ஒன்றின் தலைவராக இருந்தால் நானும் இதையே தான் செய்வேன். இது ஆரம்பம் மட்டுமே. பெப்ரவரியில் தொடங்கி மார்ச்சில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழு கூட்டம் முடியும் வரை தமிழகத்தின் கொந்தளிப்பு குறையவே குறையாது.

அது மட்டும் அல்ல. கடந்த முறையைப் போல, இந்த முறையும் அமெரிக்காவின் தீர்மான வாசகங்களில் உள்ள கடுமையைக் குறைக்கும் நடவடிக்கையை இந்திய மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது என்று தமிழக முதல்வர் எச்சரித்துள்ளார்.

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களைப் பகிருங்கள்

தி.மு.க தலைவர் இலங்கை விவகாரம் தொடர்பாகக் சர்வதேச மாநாடு ஒன்றை கூட்டப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய மத்திய அரசு அமைச்சர்களும் தாம் தமிழகத்தின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதாக அறிவித்துள்ளனர்.

இலங்கை அரசு தமிழ் மக்களை மட்டும் ஏமாற்றவில்லை. முஸ்லிம் மக்களையும் ஏமாற்றுகிறது. இதனால் இஸ்லாமிய நாடுகளின் ஆதரவை, இலங்கை அரசுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு எந்வொரு தன்மானமுள்ள முஸ்லிம் இனத் தலைவரும் முன் வர முடியுமா என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது.

போர் முடிந்து விட்டது. ஆயுத போராட்டம் இல்லை. நமது கோரிக்கை ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்து வழங்கப்படவேண்டும் என்பதுதான். இதைதான்  உலகமும் சொல்கிறது.

உலகம் சொல்வதைத் கேட்காமல், இந்த நாட்டுத்  தமிழ்த் தலைவர்கள் சொல்வதை கேட்காமல் இனவாத நோக்கில் இந்த அரசு தான்தோன்றிதனமாகச் செயற்படுகிறது.  இதுதான் இன்று தமிழகத்தில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புக்கு காரணம். 

எனவே தமிழக தலைவர்களைத் திட்டாதீர்கள். உங்களைத் திருத்திகொள்ளுங்கள். அரசில் இருக்கின்ற தமிழ், முஸ்லிம் மற்றும்  இடதுசாரித் தலைவர்கள் திருந்தவேண்டும். உலகம் உங்களைப் பார்த்து ஏற்கனவே சிரிக்கிறது. 

கைகொட்டி சிரிக்கும் நிலைமை வருமுன் தயவு செய்து திருந்துங்கள். முதலில் திருந்திக் கொண்டு, பின்னர் நீங்கள் உங்கள் அரசைப் புத்தி சொல்லி  திருத்த முயல வேண்டும். இல்லாவிட்டால் இந்த இனவாதக் கூட்டணி அரசிலிருந்து வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.