Header Ads



அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடாத்த தயார் - ஈரான் அறிவிப்பு


அணு நிகழ்ச்சித் திட்டம் குறித்த அமெரிக்காவின் இரு தரப்புப் பேச்சுகளுக்கு இணக்கம் தெரிவித்துள்ள ஈரான், ஆனால் இவ்விவகாரத்திற்கு உண்மையிலேயே தீர்வுகாணுவதற்குரிய நம்பத்தகுந்ததும் வெளிப்படையானதுமான நடவடிக்கைகளை அமெரிக்கா வெளிக்காட்ட வேண்டும் எனவும் சுட்டடிக்காட்டியுள்ளது.

பேச்சுகளுக்கு அழைப்பு விடுத்திருக்கும் அமெரிக்கா, ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்களை நிறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென ஈரான் வெளிவிவகார அமைச்சர் அலி அக்பர் சலேஹி கூறியுள்ளார்.

 அணு நிகழ்ச்சித் திட்ட விவகாரத்தில் ஈரான் உண்மையான அக்கறையுடன் செயற்பட வேண்டுமென அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பைடன் கூறிய மறுதினம் அக்பர் சலேஜி இவ்வாறு கூறியுள்ளார்.

ஜேர்மனியில் இடம்பெற்ற பாதுகாப்பு மகாநாடொன்றிலேயே இருவரும் இக் கருத்துகளை முன்வைத்திருந்தனர். 

ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபையினால் ஒரு தொகுதி தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஈரான் அணு ஆயுதமொன்றை உற்பத்தி செய்ய முயல்வதாக மேற்குலக நாடுகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் ஈரான் தான் அணு நிகழ்ச்சித் திட்டத்தை சக்தித் தேவைகளுக்காகவே முன்னெடுப்பதாக கூறி வருகின்றது.

மூன்று நாட்களின் முன்னர் ஈரானின் அணு நிகழ்ச்சித் திட்டத்தில் யுரேனியம் மேலும் மேலும் செறிவூட்டப்படுவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.

 ஈரானிய தலைமைத்துவமும் உயர் பீடத் தலைவர் அயொதொல்லா அலி காமொனியும் இவ்விவகாரங்களில் உண்மையான  அக்கறையை வெளிப்படுத்தும் நிலையில் ஈரானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்கா தயாராக இருப்பதாக  மூனிச்சல் இடம்பெற்ற பாதுகாப்பு மகாநாட்டில் பைடன் கூறியிருந்தார்.

 எமது நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் இல்லை. ஆனால் உண்மைத் தன்மையுடன் பேச்சுகள் இடம்பெற வேண்டும். அத்துடன் நிகழ்ச்சி நிரல் ஒன்றின் கீழான பேச்சுகளை வரவேற்கின்றோம். வெறுமனே செய்தோம் என்ற கூற்றுக்காக நாம் இதனைச் செய்யவில்லை எனவும் பைடன் தெரிவித்தார்.

 இதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த சலேஹி, ஈரானிடம் எதுவிதமான சிவப்பு எச்சரிக்கையும் இல்லை. பாக்தாத்திலும் அமெரிக்காவுடன் பேச்சுகள் நடத்தப்பட்டமை அறிந்த விடயமே. பலதடவைகள் இப் பேச்சுகள் நடத்தப்பட்டன.

 ஆனால் அமெரிக்கத் தரப்பினரும் உண்மையான அக்கறையுடனேயே செயற்படுவார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உண்மையான அக்கறை காணப்படவேண்டும். 

அமெரிக்காவின் இரு தரப்பு பேச்சுக்கான அழைப்பினை ஈரான் கௌரவத்துடன் கவனத்தில் கொள்ளும். ஆனால் அனைத்து விடயமும் பேச்சு மேடையில் உண்டெனக் கூறி அச்சுறுத்தும் மனோபாவத்தினை அமெரிக்கா  கைவிட வேண்டும்.

 நற்செய்தியாக ஈரான் மீதான சர்வதேச பேச்சுகள் பெப்ரவரி 25 இல் கஸகஸ்தானின் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.

 ஆனால் இப்பேச்சுகளில் ஈரான் கலந்துகொள்ளுமா என்பது தொடர்பாக அவர் எதுவித கருத்தையும் வெளியிடவில்லை.

 ஐ.நா. பாதுகாப்பு சபையின் உறுப்பு நாடுகள் ஐந்தும் ஜேர்மனும் ஈரான் குறித்த பேச்சுகளில் கடந்த சில வருடங்களாக  ஈடுபட்டு வருகின்றன. ஆனால் எதுவிதமான பெறுபேறும்  கிடைக்கப்பெறவில்லை.

No comments

Powered by Blogger.