Header Ads



நல்லிணக்கம் ஏற்பட காலஅவகாசம் தேவை - ஜெனீவாவில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க


ஐக்கிய நாடுகள் பேரவை, இலங்கையை நடுநிலையாக நடத்த வேண்டும். அத்துடன் நல்லிணக்கம் மற்றும், மனித உரிமைகள் மேம்பாடு குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 22ஆவது அமர்வில் 27-02-2013 இலங்கையின் சார்பில் உரையாற்றிய அமைச்சர் மகிந்த சமரசிங்க இந்த தகவலை வெளியிட்டார். 

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சொத்துக்களின் உரிமையாளர்களுக்கு நட்ட ஈடுகள் வழங்கப்படுகின்றன, அல்லது மாற்றுக் காணிகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், வடக்கில் இன்று இராணுவ நிர்வாகத்திற்கு இடமில்லை. அங்கு முழுமையாக குடியியல் நிர்வாகமே மேற்கொள்ளப்படுகின்றது.

வடக்கில் உள்ள பொது மக்கள் முழுமையாக சுதந்திரமான நடமாட்டத்தை அனுபவிப்பதாக இன்றைய அமர்வில் உரையாற்றிய அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் படி இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட பொதுமக்கள் தொடர்பில், சனல் 4 காணொளி, அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன் வைக்கிறது.

இந்த நிலையில், சனல் 4 குற்றச்சாட்டு தொடர்பில், இலங்கையின் இராணுவ தளபதியால் நியமிக்கப்பட்ட நீதிமன்றம் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையைச் தவிர, மேற்கத்தைய நாடுகளில் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள், இலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்க செயல்பாடுகளை மூடிமறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் மூலம் இலங்கைக்கு எதிராக நீதியற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதன் பிள்ளையினை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் 2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது. எனினும், அந்த குழு நவநீதன் பிள்ளையின் இலங்கை விஜயத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. அதற்கு பதிலாக நவநீதன் பிள்ளை தற்போது இலங்கைக்கு எதிராக சமர்ப்பித்துள்ள அறிக்கைக்கு சான்றுகளை தேடும் வகையிலேயே அந்த குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மகிந்த சமரசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் பேரவை, இலங்கையை நடுநிலையாக நடத்த வேண்டும். அத்துடன் நல்லிணக்கம் மற்றும், மனித உரிமைகள் மேம்பாடு குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இன்று மாலை இலங்கை நேரப்படி 5.18 இற்கு ஆரம்பித்த அமைச்சர் மகிந்த சமரசிங்கவின் உரை 25 நிமிடங்களுக்கு நீடித்தது.

No comments

Powered by Blogger.