Header Ads



தாய் நாட்டிற்காக இலங்கை முஸ்லிம்கள் செய்தது என்ன..?



(ஜே.எம்.ஹபீஸ்)

தாய் நாட்டிற்காக இலங்கை முஸ்லிம்கள் செய்தது என்ன..? என்ற சவாலை எதிர்கொள்ள வேண்டுமாயின் முஸ்லிம்களின் தடையங்களை முஸ்லிம்களே பாதுகாக்க வேண்டுமே தவிர அதனை முட்டாள் தனமாக அழித்துக் கொண்டிருக்கும் ஒரு சமூகமாக நாம் இருக்கக் கூடாது என முஸ்லிம் அறிஞரும் ஆய்வாளரும் தத்துவவியலாளருமான கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் கவலை தெரிவித்தார்.

(7.2.2013) கண்டி சித்திலெவ்வை மகாவித்தியாலயத்தில் இடம் பெற்ற அறிஞர் சித்தி லெவ்வை நினைவு தின வைபவம் தொடர்பாக இடம் பெற்ற வைபவம் ஒன்றில் சிறப்புரையாற்றும் போதே அவர் தனது ஆதங்கங்களையும் மிகக் காரசாரமாக வெளியிட்டார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

சித்திலெவ்வை என்பவர் யார்? என்று கேட்டால் பதில் தரக் கூடிய எத்தனை பேர் இருக்கிறீர்கள். மார்ட்டின் விக்ரமசிங்க யார் என்று கேட்டால் மியுசியமாக மாற்றப்பட்டுள்ள அவரது வீட்டிற்குச் சென்றாவது அவரைப் பற்றி அறிந்து கொள்ளமுடியும். அவர் பயணித்த மாட்டு வண்டி கூட அந்த அரும்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பண்டாரநாயக்கா சுருட்டுப் புகைத்த குழாய் கூட பாதுகாக்கப்பட்டுள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்க இலங்கை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல தமிழ்கூறு நல்லுலகிற்கே அறிஞர் சித்தி லெவ்வை  விட்டுச் சென்ற சொத்துக்களை இன்று எவறாவது பாதுகாக்க முற்பட்டுள்ளனரா?

அவர் வாழ்ந்த வீடு எட்டுக் கோடி ரூபாய்கு விற்பனையாகப் போகிறது. கோடான கோடி செலவழித்து பள்ளிகளைக் கட்டி பேரின மக்களை சீண்டி அவர்களது ஆத்திரத்தை தூண்டி விடும் எந்த பரோபகாரியாவது சித்திலெவ்வையின் தடயங்களைப் பாதுகாத்து அதன் மூலம் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை எடுத்துக் காட்ட முயற்சி செய்துள்ளனரா என்று கேட்க விரும்புகிறேன்.

எனது தேடல்களையும் எனது மாணவர்களின் தேடல்களையும் வைத்து நாம் சேகரித்துள்ள தகவல்களின் படி அறிஞர் சித்தி லெவ்வையுடைய பரம்பரையுடன் இலங்கை முஸ்லீம்களின் வரலாரும் தோற்றம் பெறுகிறது. அதாவது இலங்கை முஸ்லீம்கள் பற்றி பூர்வீகத்தை நிறூபிக்க சித்தி லெவ்வையின் தடயங்கள் அவர் வாழ்ந்த கால வரலாற்று சம்பவங்கள் போதுமானது.

இலங்கை முஸ்லிம் பூர் வீகத்தை உலகுக்கு எடுத்துக்காட்ட முன் அவர் வாழ்ந்த வீட்டைப் பாதுகாக்க வேண்டும். அப்படி அதைப் பாதுகாக்கா விட்டால் காலத்தோடு காலமாக அத்தடையம் அழிந்த பிறகு எமது வரலாற்றுச் சான்று தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சிலரது வரலாறாக சுறுங்கிவிடும். சித்தி லெவ்வையின் வீட்டை ஒரு அருங்காட்சியகம் ஆக மாற்ற வேண்டுமாயின் முதலில் அவர் குடும்ப அங்கத்தவர்களுக்கு அதன் பெறுமதியைக் கொடுத்து வீட்டை விலைக்கு வாங்க வேண்டும். இதனை வெளியில் இருந்து வந்து எவரும் செய்ய முடியாது. கண்டி முஸ்லிம்களே இதனைச் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

சித்திலெவ்வை எழுதிய 'ஹஸன்பே சரிதை' இலங்கையின் முதல் நாவலாகக் கருதப் படுகிறது. தமிழ் மொழியில் முதல் நாவல் என்றும் கூறப்படுகிறது. 18ம் 19ம் நூற்றாண்டு கால ஆக்கம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அதனை விட மிகப் பிந்திய காலத்து சிங்கள நாவலாசிரியரான மார்டின் விக்கிரம சிங்க பற்றிய தடையங்கள் எத்துனை தூரம் பாகாக்கப்பட்டு வருகின்றன என்பது உங்களுக்குத் தெரியும்.

அறிஞர் எம்.சி. சித்தி லெவ்வை வெளியிட்ட 'முஸ்லிம் நேசன்' என்ற பத்திரிகை வரலாற்று முக்கியத்துவம் பெற்றதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் உலகின் பல பாகங்களிலும் நடந்தபல சம்பவங்கள், செய்திகள் நான்கு தினங்களில் அப்பத்திரிகையில் பிரசுரமாகியுள்ள. இண்டநெற், தந்தி, தொலைபேசி, என்ற எந்த தொலை தொடர்புச் சாதனமுமற்ற காலத்தில் இது எப்படி சாத்தியமானது என்று ஆய்வாளர்கள் தேடுகின்றனர். மலேசியா பினாங்கு, இந்தியா சிங்கப்பூர் போன்ற தென்கிழக்காசிய நாடுகளில் அப்பத்திரிகை பிரபலம் பெற்றிருந்தது. மலேசியாவில் அப்பத்திரிகைகளைப் பாதுகாத்து வந்தனர். துரதிஷ்ட வசமாக இரண்டாம் உலக மகாயுத்தத்தில் அவை வைக்கப்பட்டிருந்த வாசிக சாலை அழிந்ததன் காரணமாக அப்பத்திரிகைகளும் அழிந்து போயின. ஒரு சில மட்டும் பகுதியாக தப்பியுள்ளன. இவற்றை ஆராய்ச்சியாளர் தேடித் திரிகின்றனர். இலங்கைக்கும் வெளிநாட்டு ஆய்வாளர்கள் இது தொடர்பாக வந்து போயினர்.

இவ்வாறு உயர் பணியைச் செய்த சித்திலெவ்வை தனக்கு உதவியாக ஒரு தமிழரை வைத்திருந்தார். மேற்படி பத்திரிகை அக்காலத்தில் கையினாலே ஒரு சிறிய இயந்திரத்தில் அச்சிடப்பட்டது. அவ் அச்சு இயந்திரம் சில காலங்களுக்கு முன்பு கலஹா பகுதியில் ஒருவரிடம் இருந்தது. அதை குறைந்த விலைக்கு விற்க அவரது சந்ததியினர் ஒப்படைத்திருந்தனர். அது இப்போது எங்குள்ளது எனத் தெரியாது. இதை நாம் பாதுகாக்க வேண்டுமாயின் சித்தி வௌ;வை வாழ்ந்த வீட்டைப் பாதுகாத்து அதனை ஒரு அருங்காட்சிய அகமாக மாற்றவேண்டும்.

சித்தி லெவ்வை ஒருசாதாரண குடிமகள் அல்ல. அவர் வாழ்ந்த வசதியான படோபகார வாழ்கைக்கு அவரது வீடு அமைந்துள்ள இடம் ஒரு வரலாற்றுச் சான்று. அதன் முன் போய் நின்றால் கிழக்கே நக்கில்ஸ் மலைத் தொடர் முதல் மேற்கே ஹந்தான மலை வரையும் தெற்கே உடவத்தைகெலே முதல் வடக்கே உண்ணஸ்கிரிய  மற்றும் அஸ்கிரிய வரை தெளிவாக காணமுடியும். அது மட்டு மல்ல கண்டி நகரின் முழுத்தோற்த்தையும் ஒரே பார்வையில் காணமுடியும். அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள கப்ரிஸ்தான் அமைந்துள்ள மஹையாவ மயாணம் வரை எல்லா வற்றையும் வீட்டின் முன் இருந்து பார்க்க முடியும். 100 பர்ச்சஸ் காணியில் அவ்வீடு அமைந்துள்ளது.

அதுமட்டுமல்ல அவர் அக்காலத்தில் பெரிய தனவந்தர்களாகவும் வர்த்தகப் பெருமகனாகவும் வாழ்ந்த மூன்று தலைமுறைக்கு முன்சொந்தக் காரன் மட்டுமல்ல தலை சிறந்த வழக்கறிஞ்சனாகவும் இருந்தார். தனது சட்ட நுணுக்கம் மற்றும் வதாட்டத் திறன் காரமாகவும் தனது வர்த்தகத் தொடர்புகள் காரணமாகவும் செல்வம் ஈட்டி பதுக்கிவைக்க வில்லை. சமூக நலன் கருதி அனைத்தையும் செலவிட்டுள்ளார்.

சித்திலெவ்வையின் பூர்வீகத்தினர் களுத்துறையில் வாழ்ந்து  கண்டியில் குடியேறியுள்ளனர். போர்த்துக்கேய மற்றும் சில படையெடுப்புக்கள் உற்பட பல காரணங்ளால் களுத்துறை அல்லது பாணந்துறைப் பகுதியில் இருந்து இடம் பெயர்துள்ளனர். அவ்வாறு இடம் பெயர்தவர்கள் கி.பி.14ம் நூற்றாண்டு முதல் 16ம் நூற்றாண்டு காலப்பகுதியில் வாழ்ந்தவர்களாகும்.

சித்தி லெவ்வையின் சரித்திரத்தைப் பாதுகாப்பதன் மூலம் இந்த வரலாற்றையும் பாதுகாக்க முடியும். அதற்குப் பதிலாக நாம் சித்திலெவ்வை அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் மீசான் தூண்களைக் கூட கண்டு பிடிக்க முடியாது உள்ளோம். அண்மையில் 2ம் ஜோர்ஜ் மன்னரின் மண்டை ஓடு கண்டு பிடிக்கப்பட்ட வரலாற்றை அறிந்திருப்பீர்கள். டி.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொண்டு எமது பூர்வீகத்தைக் காட்ட குறைந்தது கப்ரிஸ்தானாவது இருக்கவேண்டுமே. கப்ரு வணங்கிகள் என்று கூறி அவற்றை எல்லாம் அழிக்கும் முட்டாள்களாக நாம் உள்ளோம்.

சித்தி லெவ்வையின் சமகாலத்தவர்களான ஒராபி பாசா,கசாவத்தை ஆலிம் அப்பா(அக்குறணை), வாப்பிச்சி மரைக்கார் போன்ற பல மூதாதையர்களைப் பற்றி பேசுகிறோம். அவர்கள் வாழ்ந்த வீடு, மரணித்த இடம். அடக்கம் செய்யப்பட்ட புதைகுழி என்று சரித்திரச் சான்றுகள் என்ன எம்மிடத்தில் இருக்கிறது? 

ஒரு சிறிய உதாரணத்தை மட்டும் பார்ப்போம்.-

முன்பு ஒரு காலம் இருந்தது. கத்தம், புர்தா, கந்தூரி என்று கொடுப்பார்கள். பித்அத்தின் அடிப்படையில் அவற்றை நாம் ஒழித்து விட்டோம் என்று பெருமிதம் அடையலாம். நபி(ஸல்) பிறந்த நாளைக்கு கொடி போடுவோம். இவை இஸ்லாத்தில் இல்லாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் 50 வருடங்களுக்கு முன் நாம் போட்ட அந்தக் கொடியை இப்போது எம்மால் போடமுடியாது. காரணம் அதற்கு இடம் தரமாட்டார்கள். அந்த இடம் பறிபோய்விட்டது. இப்படி எல்லா விடயங்களையும் நாம் பறிகொடுத்து இறுதியில் ஒரு சுருங்கிய சமூகமாக எல்லைப் படுத்தப்பட்டு விடுவோம்.
சுமார் பத்து கோடி ரூபாய்க்கு கண்டியில் அறிஞர் சித்திலெவ்வையின் பெயரால் ஒருபாடசாலைக் கட்டிடத்தை மட்டும் அமைத்து விட்டோம் என்பது சித்திலெவ்வை இந்தநாட்டிட்கு ஆற்றிய சேவையை நலிப்படுத்துவதாக அமையும். அதுபோதாது.

1880ல் முஸ்லிம் நேசன் என்ற பத்திரிகையில் அவர் விடுத்த கோரிக்கை மிகப் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்று போல் அன்று அல்-ஜசீராவோ சி.என்.என் செய்திச் சேவையோ, ரோய்டரோ, பீ.பீ.சி. யோ இல்லாத அந்தக் காலக்கட்டத்தில் முஸ்லிம் நேசன் சொன்னது என்ன வென்றால் 'சட்டசபையில் வெள்ளையர்கள் மட்டும்தான் உறுப்பினர்களாக உள்ளனர். பெயரளவில் ஒரு சிங்களவர் உள்ளார். இலங்கையின் சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லிம் பிரதி நிதித்துவம் இல்லை. பிரித்தானியர்களே நீங்கள் நிதி ஒதுக்கீடு செய்வது உங்கள் நலன்களை பாதுகாக்கவா? அல்லது இந்த நாட்டு மக்களின் தேவைகளை வழங்குவதற்காகவா? அதில் நீங்கள் மட்டும் உறுப்பினர்களாக இருப்பது உங்கள் நலனைப் பாதுகாப்பதற்கு மட்டுமதானே' என சுதேச வேட்கைக் கருத்துக்களை முன்வைத்தார். இது தமிழ் முஸ்லிம் ஆகிய இரு சமூகத்தாரையும் தூண்டிய கருத்துக்களாகும். இவ்வாறு அவர் பற்றி இன்னும் கூறலாம். 

சரித்திரச் சான்றுகளை இழந்து பின் எல்லாம் இழந்த சமூகமாக நாம் மாறமுன்பு சிந்திப்பது எமது கடமையாகும். எனவே இலங்கை முஸ்லீம்களின் வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமாயின் சித்தி லெவ்வையின் வீட்டை கண்டி முஸ்லிம்கள் பாதுகாப்பதன் மூலம் அதனை அடைந்து கொள்ள முடியும் என்றார்.








No comments

Powered by Blogger.