யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்து குழு கூட்டம் - முஸ்லிம்கள் புறக்கணிப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இரண்டு நாள் விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளார். இந்த விஜயத்தின்போது யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்திகள் குறித்து கவனம் செலுத்தவுள்ளார். இதற்காக விஷேட மாவட்ட அபிவிருத்திக்கூட்டமொன்றும் யாழ்ப்பாணம் கச்சேரியில் நடைபெற ஏற்பாடாகியிருக்கின்றது. இந்த நிகழ்வில் யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தியுடன் தொடர்புடைய அனைத்து முக்கிய தரப்பினரும் கலந்துகொள்வர் என யாழ் கச்சேரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருந்தபோதிலும் யாழ் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பிரதிநிதிகள் இந்நிகழ்விற்கு அழைக்கப்படவில்லை என அறிய முடிகின்றது. யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் சட்டத்தரணி றமீஸ் அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது அவ்வாறான ஒரு அழைப்பு தமக்கு கிடைக்கவில்லை என்றும், இது குறித்து மாநகர முதல்வருடன் தொடர்புகொள்ள முயற்சித்தபோதும் முதல்வர் தொடர்புகொள்வதை தவிர்த்து வருவதாகவும் தெரிவித்தார். அதேபோன்று யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் பிரதிநிதிகளைத் தொடர்புகொண்டபோதும் அவர்களும் தாம் அழைக்கப்படவில்லை என்றும்,ஜனாதிபதியவர்களை யாழ்ப்பாணத்தில் சந்திப்பதற்கு தாம் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்ல்லை என்றும் தெரிவித்தனர்.
இம்முறை யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் அவர்களால் யாழ் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்களை வெளிப்படுத்தும் மஹஜர் ஒன்று ஜனாதிபதிக்கு கையளிக்கபடும் என முன்கூட்டியே வெளியான செய்திகளைத் தொடர்ந்தே இவ்வாறான புறக்கணிப்புகள் நடைபெறுகின்றனவோ என ஐயம் கொள்ளவேண்டியுள்ளதாகவும் யாழ்ப்பாண முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
இதுவிடயம் தொடர்பாக கௌரவ அமைச்சர் றிஷாட் பதுர்தீன் அவர்களின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்புவிடுக்கப்படவில்லை என்பது இங்கு கவனிக்கத்தாகும்
Post a Comment