யாழ்ப்பாணத்தில் காணிகளின் விலை பலமடங்கு அதிகரிப்பு
யாழ் நகரில் ஒரு பரப்புக் காணி (10 பேர்ச்) 70 இலட்சத்துக்கும் 80 இலட்சத்துக்கும் இடைப்பட்ட பெறுமதியைக் கொண்டதாக இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வெளிக்கிளம்பும் யாழ்ப்பாணம் என்ற தலைப்பில் கே.பி.எம்.ஜி. நிறுவனமும் புலனாய்வு ஆராய்ச்சிப் பிரிவும் இணைந்து வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விபரம் வெளியாகியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் யாழ்.நகரின் கேந்திரப் பகுதியில் காணியின் பெறுமதி 10 மடங்காக அதிகரித்திருக்கிறது. ஆயினும் கடற்கரைப் பகுதிகளில் (உதாரணமாக காரைநகர் கசூர்னா) காணியின் பெறுமதி பரப்பு 2 இலட்சத்துக்கும் 3 இலட்சத்துக்கும் இடைப்பட்டதாக இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் அண்மித்த எதிர்காலத்தில் இக் காணிகளின் விலை கணிசமான அளவுக்கு அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நயினாதீவுக்கு ஆயிரக்கணக்கான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்ற போதும் அவர்களில் பலர் தங்கியிருப்பதற்கு பொருத்தமான இடவசதி இல்லை என்பதும் ஆய்வு மூலம் வெளிவந்திருக்கிறது. நட்சத்திர தர ஹோட்டல் யாழ்ப்பாணத்தில் இதுவரை ஒன்று மட்டுமே இருப்பதாகவும் விரைவில் மேலும் ஹோட்டல்கள் திறக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உள்சார் கட்டமைப்பை பொறுத்தவரை மின்சார விநியோகம் தொடர்பான கவலைகள் காணப்படுகின்றன. தொழிற்சாலைகளுக்கு அதிகளவு மின்சக்தி தேவைப்படுகிறது. இந்தச் சவால் முதலீட்டுத் துறைக்கு தடையாக அமையும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை வதிவிட சொத்துகள் தொடர்பான சந்தை நிலைவரம் அடுத்த 5 வருடங்களுக்கு வருடாந்தம் சுமார் 10 சதவீதமாக வளர்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
விடுமுறை ஓய்வு நேரத்தை செலவிடும் இடங்களாகக் கருதப்படும் கடற்கரைப் பகுதிக் காணிகளின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் விலை இரு மடங்காக உயரும் எனவும் எதிர்பார்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஏ9 நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகள் இப்போது இடம்பெற்று வருகின்றன. இப் பணி பூர்த்தியடைவதிலேயே காணிகளின் பெறுமதி மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் வர்த்தக நடவடிக்கைகளுக்கான பயன்பாட்டுக்காக யாழ்ப்பாண விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தால் மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகளவு பூர்த்தியடையுமெனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
Post a Comment