A/L பரீட்சை - 8544 பேருக்கு 3ஏ சித்தி, 16,538 மாணவர்களுக்கு F
(TL) க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி 8544 பேர் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றுள்ள அதேவேளை, 16, 538 பேர் மூன்று பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.
இதில் மூன்று பாடங்களிலும் "ஏ' சித்தி பெற்றுள்ள மாணவர்களில் அதிகமானோர் வர்த்தகப் பிரிவைச் சேர்ந்தவர்களேயாகும். இதன்படி வர்த்தகப் பிரிவில் 6,471 பேரும், கலைப் பிரிவில் 1, 313 பேரும், கணிதப் பிரிவில் 443 பேரும், விஞ்ஞான பிரிவில் 313 பேரும், பொதுப் பாடப் பிரிவில் 4 பேரும் 3 "ஏ' சித்திகளைப் பெற்றுள்ளனர்.
இதேவேளை, புதிய பாடத்திட்டத்தின் கீழ் பரீட்சைக்குத் தோற்றிய 2 இலட்சத்து 7 ஆயிரத்து 910 பேரில் ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 809 பேர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதிபெற்றுள்ளதுடன், பழைய பாடத்திட்டத்தின் கீழ் தோற்றிய 24,966 பேரில் 513 பேர் மூன்று பாடங்களிலும் "ஏ' சித்திகளைப் பெற்றுள்ளதுடன், 15,936 பேர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் மற்றைய மாகாணங்களை விட மூன்று பாடங்களிலும் சித்தியடைந்த அதிக மாணவர்களும், சகல பாடங்களிலும் சித்தியடையாதவர்களில் அதிக மாணவர்களும் தென்மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். இதன்படி இந்த மாகாணத்தில் 18,935 பேர் புதிய பாடத்திட்டத்திலும், 3064 பேர் பழைய பாடத்திட்டத்திலும் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்துள்ளதுடன், புதிய பாடத்திட்டத்தில் 2630 பேரும் பழைய பாடத்திட்டத்தில் 314 பேரும் சகல பாடங்களிலும் சித்திபெறத் தவறியுள்ளனர்.
இதேவேளை, வட மாகாணத்தில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 7011 பேரும், பழைய பாடத்திட்டத்தின் கீழ் 1145 பேரும் சகல பாடங்களிலும் சித்தியடைந்துள்ளதுடன் அதே மாகாணத்தில் புதிய பாடத்திட்டத்தில் 947 பேரும், பழைய பாடத்திட்டத்தில் 153 பேரும் சகல பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.
மத்திய மாகாணத்தில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 8525 பேரும், பழைய பாடத்திட்டத்தின் கீழ் 1809 பேரும் சகல பாடங்களிலும் சித்தியடைந்துள்ள அதேவேளை பழைய மற்றும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் மொத்தமாக 2129 பேர் சகல பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 8525 பேரும், பழைய பாடத்திட்டத்தின் கீழ் 1112 பேரும் சகல பாடங்களிலும் சித்தியடைந்துள்ளதுடன் அந்த மாகாணத்தில் பழைய மற்றும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 1276 பேர் சகல பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.
Post a Comment