யாழ்ப்பாணத்தில் 7 நாட்களில் 145 பேர் கைது
யாழ்.மாவட்டத்தில் கடந்த வாரத்தில் மட்டும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ன தெரிவித்தார். நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு மன்றில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 43 பேர், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி காயம் விளைவித்த 34 பேரும் கைது செய்யப்பட்டோரில் அடங்குவதாகவும் அவர் கூறினார்.
யாழ்.பொலிஸ் தலைமை அலுவலகத்தில் நேற்றுக் காலை வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ன இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்;
யாழ்.மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுத்து நிறுத்தும் முகமாகவும் பொது மக்களுடைய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாகவும் யாழ்ப்பாணம் மற்றும் பகுதிகளில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் ஊடாகவும் விசேட ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனடிப்படையில் அதிகமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குற்றவாளிகள் தவிர்ந்த கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 11 பேர், வீதி விபத்துச் சம்பந்தமாக 6 பேர், குடிபோதையில் வாகனம் செலுத்திய 8 பேர், மது போதையில் கலகம் விளைவித்த 9 பேர், சூழலுக்கு மாசு ஏற்படுத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் 8 பேர், பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு 2 பேர், கொலை சம்பந்தமாக 2 பேர், சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடித்திரிந்த 10 பேர், சாராயத்தினை அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் தம்வசம் வைத்திருந்த 2 பேர் மற்றும் ஏனைய சிறு குற்றங்களுடன் தொடர்புடைய 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்து கருணாரட்ன தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் அந்தந்தப் பகுதி நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களுக்கான தண்டனையும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுறினார்.
Post a Comment