Header Ads



இஸ்ரேல் சிறையிலிருந்து விந்தணுக்களை கடத்தி 5 பலஸ்தீன மனைவிமார் கர்ப்பம்


(தினகரன்) இஸ்ரேல் சிறையிலிருக்கும் பலஸ்தீன கைதிகளின் விந்தணுவை கடத்தி வந்து அவர்களது மனைவிமாரை வெற்றிகரமாக கர்ப்பமுறச் செய்ததாக பலஸ்தீன மகப்பேற்று மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி 5 பெண்கள் கர்ப்பமுற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் சிறையில் சுமார் 4500 பலஸ்தீன கைதிகள் சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். கல்லெறிந்தது தொடக்கம் இஸ்ரேல் பிரஜையை கொன்றது வரை பல்வேறு குற்றச் சாட்டுகளில் இவர்கள் சிறை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் நீண்ட சிறைத் தண்டனை அனுபவிக்கு தனது கணவர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள பல பலஸ்தீன பெண்களும் முயற்சித்து வருகிறதாக கூறப்படுகிறது. எனினும் தனது மனைவியுடனான உடலுறவுக்கான அனுமதி பலஸ்தீன கைதிகளுக்கு வழங்கப்படுவதில்லை.

“பெண்களான நாம் வயது முதிர்ந்து வருவதால் குழந்தை பெறும் வாய்ப்பை இழந்து வருகிறோம்” என்று கூறிய 38 வயதான ரிமாஹ் சிலாவி, தனது கணவனின் விந்தணு மூலம் கர்ப்பம் தரித்துள்ளார். இவரது கணவனான ஒசாமா மூன்று பலஸ்தீனர் மற்றும் ஒரு இஸ்ரேல் நாட்டவரை கொன்ற குற்றத்திற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

இவ்வாறு இஸ்ரேல் சிறையிலிருந்து விந்தணுக்களை கடத்தி வரும் மேற்குக் கரையின் மருத்துவ முகாமைச் சேர்ந்த மகப்பேற்று மருத்துவர் சலிம் அபு கைசரான், இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஒரு பலஸ்தீன பெண் வெற்றிகரமாக குழந்தை பெற்றெடுத்ததாக குறிப்பிட்டார். தாம் 22 பலஸ்தீன சிறைக் கைதிகளின் விந்தணுக்களை கடத்தி வந்து சிகிச்சை அளித்ததாகவும் அதில் ஐந்து பெண்கள் வெற்றிகரமாக கர்ப்பம் தரித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

எனினும் தாம் கடத்திவரும் முறைபற்றி அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்க மறுத்தார். இதன்மூலம் எதிர்காலத்தில் அவ்வாறு செய்ய இஸ்ரேல் நிர்வாகம் கட்டுப்பாடு விதிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் நியூயோர்க்கிலுள்ள மைமோனிட் மருத்துவ நிலையத்தின் மருத்துவர் ஜென்னிபர் மக்ரொவ் கூறும்போது, ‘விந்தணு உடலுக்கு வெளியில் பல மணிநேரம் வாழக்கூடியதாக இருக்கும். இதனைக் கொண்டு சோதனைக்கூடத்தில் கருவுறச் செய்ய சராசரியாக 40 மில்லியன் விந்தணுக்கள் போதுமானதாகும், என்றார். எனவே இவ்வாறு விந்தணுவை கடத்திச் சென்று கருவுறச் செய்ய சாத்தியமுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.