Header Ads



57 முஸ்லிம் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு

(தினகரன்) உலக முஸ்லிம் நாடுகளை ஒன்றிணைத்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (ஓ.ஐ.சி.) 12 வது மாநாடு இன்று கெய்ரோவில் ஆரம்பமாகவுள்ளது. முஸ்லிம் நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான மாலியில் பிரான்ஸின் இராணுவ தலையீடு, சிரியா சிவில் யுத்தம் மற்றும் பலஸ்தீன விவகாரங்கள் முக்கிய அவதானத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த திங்கட்கிழமை முஸ்லிம் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூடி இந்த மாநாட்டிற்கான முன்கூட்டிய திட்டவரைபுகளை வகுத்தனர். உலகிலுள்ள 57 முஸ்லிம் நாடுகள் அங்கம் வகிக்கும் ஓ.ஐ.சி. அமைப்பு சர்வதேச முஸ்லிம் விவகாரங்கள் குறித்து அவதானம் செலுத்தி வருகிறது. இன்று ஆரம்பமாகும் மாநாட்டில் 26 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்வான முதல் ஜனாதிபதி மொஹமட் முர்சியின் தலைமையிலேயே இன்றைய மாநாடு ஆரம்பமாகவுள்ளது.

ஒ.ஐ.சியின் 12 வது மாநாடு கடந்த 2011ம் ஆண்டிலேயே நடத்த ஆட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது. அந்த காலப்பகுதியில் பிராந்திய நாடுகளில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் காரணமாக மேற்படி மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் விளைவாக அரபு நாடுகளின் சர்வாதிகாரிகள் பதவி துறக்கவேண்டி ஏற்பட்டது. இதில் இந்த மாநாட்டை நடத்தும் எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கும் உள்ளடங்குகிறார்.

இன்றைய மாநாட்டில் “முஸ்லிம் உலகின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்” என்று ஒ.ஐ.சி. யின் செயலாளர் நாயகமான எக்மலிதின் இஹ்சானொக்லு குறிப்பிட்டார். “ஓ.ஐ.சி. உறுப்பு நாடுகள் மாறுபட்ட வெளிநாட்டு கொள்கையை கொண்டிருந்தாலும் அவை ஒரு தேசத்தின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆதரவளிக்கும் நிலைபாட்டை கொண்டுள்ளன. ஆபிரிக்க தேசங்களின் இறையாண்மை மற்றும் நாட்டின் ஒருமைபாட்டை நாம் மதிக்க வேண்டும்” என்றும் இஹ்சனொக்லு வலியுறுத்தினார்.

“முஸ்லிம் நாடுகளில் நிலவும் மதத் தீவிரவாதம் குறித்து தனிப்பட்ட முறையில் நான் கூடிய அவதான செலுத்துகிறேன். இந்த வன்முறைகளால் குறித்த நாடுகள் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றன. இந்த நிலைதான் மாலியிலும் ஏற்பட்டிருக்கிறது” என இஹ்சனொக்லு ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் வட ஆபிரிக்காவில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த ஹொஸ்னி முபாரக், துனீஷிய ஜனாதிபதி சைன் அல் அப்தின் பென் அலி மற்றும் லிபிய தலைவர் முஅம்மர் கடாபி ஆகியோர் மக்கள் எழுச்சி மூலம் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டனர்.

அதேபோன்று 2011ம் ஆண்டி சூடான் இரு நாடாக பிரிந்து சென்றது. இதில் தென் சூடானில் கிறிஸ்தவ அரசும் வட சூடானில் முஸ்லிம்களின் அரசும் தோன்றியுள்ளன. “தென் சூடானின் கோரிக்கை ஏற்கப்பட்டதன் மூலம் ஏனைய நாடுகளிலும் மத மற்றும் இன அடிப்படையில் சுதந்திரம் கோரி போராடும் குழுக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்று இஹ்சனொக்லு கூறியுள்ளார். துருக்கியின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான இஹ்சனொக்லுவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போர் காரணமாக ஓ.ஐ.சி. அங்கத்துவத்திலிருந்து சிரியா கடந்த 2012 ஒகஸ்ட்டில் நீக்கப்பட்டது. எனினும் இன்று ஆரம்பமாகும் மாநாட்டி சிரிய விவகாரம் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதினஜாத் நேற்று எகிப்து சென்றார். 

இதன்படி 1979 ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சிக்கு பின்னர் ஈரான் ஜனாதிபதி ஒருவர் எகிப்து சுற்றுப்பயணம் மேற்கொள்வது இது முதல் முறையாகும்.

சிரிய உள்நாட்டு போரில் அந்நாட்டு அரசுக்கு ஆதரவளிக்கும் ஒரே நாடகாவே ஈரான் இன்றைய மாநாட்டில் பங்கேற்கிறது. 

சக்திவாய்ந்த ஏனைய முஸ்லிம்  ாடுகளான துருக்கி, எகிப்து மற்றும் சவூதி அரேபியா ஆகியன சிரிய அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களுக்கே ஆதரவை வெளியிட்டு வருகின்றன.

“சிரியாவில் தொடரும் வன்முறைகள், படுகொலைகள் தொடர்பில் எம்மால் இன்னும் அமைதி காக்க முடியாது. இந்த மோதலை நிறுத்த சர்வதேச சமுகம் முன்வரவேண்டும்” என்று இஹ்சனொக்லு வலியுறுத்தினார். சிரிய உள்நாட்டு மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

எனினும் “ஜனநாயக முறையிலான ஆட்சி மாற்றத்திற்கு அமைதி பேச்சுவார்த்தை கட்டாயம் முன்னெடுக்கப்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டார். இதில் சிரியாவின் பிரதான எதிர்த்தரப்பு தலைவரான அஹமத் மவுஸ் அல்காதிப் மோதலை முடிவுக்கு கொண்டுவர அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என இந்த வாரத்தில் கூறியிருந்தார். சிறிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசும் பேச்சுவார்த் தைக்கு தயார் என கூறியிருந்த போதும் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என நிபந்தனை விதித்திருந்தது.

இந்நிலையில் இன்று ஆரம்பமாகும் ஓ.ஐ.சி. மாநாட்டில் சிரியாவின் பிரதான எதிர்த்தரப்புடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட வுள்ளதாக எகிப்தின் மெனா செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

மறுபுறத்தில் இஸ்லாமிய ஒத்து ழைப்பு அமைப்பில் சவூதி அரேபியா தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் செயற்பாட்டில் இறங்கியுள்ளது. ஒ.ஐ.சி. யின் தலை மைப் பதவி முன்னர் தடை செய்யப் பட்டிருந்த முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த எகிப்து ஜனாதிபதியிடம் சென்றிருப் பதால் சவூதி அரேபியா ஓ.ஐ.சி. செயலாளர் நாயகம் பதவிக்கு போட்டியிடுகிறது. இதன்படி இன்று ஆரம்பமாகும். மாநாட்டில் சவூதியின் முன்னாள் கலாசார மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சர் இயாஸ் மதனி ஓ.ஐ.சி.யின் அடுத்த பொதுச் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப் படுகிறது. 

இந்த பதவிக்கு மூன்று ஆபிரிக்க நாடுகள் போட்டியிட்டிருந்தபோதும் சவுதி போட்டியில் இறங்கியதால் அந்நாடுகள் தமது பிரதிநிதியை வாபஸ் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.