பாகிஸ்தானில் 3 நாட்களின் பின்னர் ஷியாக்களின் உடல்கள் நல்லடக்கம்
பாகிஸ்தானில் வாழும் ஷியா பிரிவினரை குறிவைத்து பல இடங்களில் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி குவெட்டா நகரில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவங்களில் 92 ஷியா இனத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
இம்மாதம் 16ம் தேதி குவெட்டாவில் உள்ள ஹசாரா பகுதியில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் 89 பேர் பலியாகினர். சுமார் 200 பேர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து பாகிஸ்தான் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ. விசாரணை நடத்தியதில், குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தின் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியின் அடியில் சுமார் 800 கிலோ வெடி மருந்துகளை பதுக்கி வைத்திருந்த லஷ்கர்-இ-ஜாங்வீகள், இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்தியதாக தெரியவந்தது.
இதனையடுத்து, குவெட்டா பகுதியை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பாகிஸ்தான் மக்கள் தொகையில் 20 சதவீதமாக உள்ள சிறுபான்மையினத்தவரான ஷியாகளை அரசு பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த 3 நாட்களாக ஷியா பரிவினர், குவெட்டா, லக்னோ, இஸ்லாமாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டங்களை நடத்தினர்.
அதுவரையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களின் உடல்களை புதைக்கமாட்டோம் என்று கூறிவந்த போராட்டக்காரர்கள், தங்களின் முடிவை நேற்று கைவிட்டனர். குண்டு வெடிப்பில் பலியான 89 பேரின் உடல்களும் நேற்று ஒரே இடத்தில் புதைக்கப்பட்டன. அப்போது, அந்த வழியாக வாகனங்களை சில இளைஞர்கள் கல் வீசி தாக்கினர்.
உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் புகுந்து தாக்குதல் நடத்த முடியாதபடி ஷியா இளைஞர்கள் மனித சங்கிலி போல் ஒன்றாக கூடி நின்று பாதுகாப்பு அளித்தனர்.
Post a Comment