Header Ads



ஹமாஸ் போராளிகள் 25 பேரை ஆக்கிரமிப்பு இஸ்ரேல் கைது செய்தது


பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த 25 பேரை இஸ்ரேல் ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் பாலஸ்தீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவர்.
கடந்த நவம்பரில் இஸ்ரேல் அரசுப் படைக்கும், ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தினருக்கும் இடையே நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே பிரச்னை தீவிரமடைந்துள்ளது.

இதற்கிடையே பாலஸ்தீனத்துக்கு உறுப்பினரல்லாத தனி நாடு அந்தஸ்தை ஐக்கிய நாடுகள் சபை அளித்தது. இதை இஸ்ரேல், அமெரிக்கா எதிர்த்தன. இந்நிலையில், பாலஸ்தீன ஹமாஸ்  இயக்கத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இஸ்ரேல் அரசு ஈடுபட்டுள்ளது.

மோதல் மேலும் பெரிதாகாமல் தடுப்பதற்காகவே இந்நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட செய்தியில்,

 ""மேற்குக் கரையில் பாலஸ்தீனர்கள் 25 பேர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்'' என்று தெரிவித்துள்ளது. இதில் 20 பேர் ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் என்றும், 3 பேர் பாலஸ்தீன நிர்வாக சட்ட கவுன்சில் (நாடாளுமன்றம்) உறுப்பினர்கள் என்றும் கூறப்படுகிறது. அவர்களின் பெயர் ஹதேம் காஃபிஸô, முகமது அல்-தால், அஹமத் அடென் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராளிகளுக்கு உதவினார்கள் என்ற பெயரில் இதுவரை 12 நாடாளுமன்ற உறுப்பினர்களை (அனைவரும் ஹமாஸ் இயக்க ஆதரவாளர்கள்), இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது. பாலஸ்தீன நிர்வாக சட்ட கவுன்சிலில் மொத்தம் 132 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஹமாஸ் இயக்க ஆதரவாளர்கள் 74 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.