உலக இஸ்லாமித் தமிழ் இலக்கிய மாநாடு - 2013 ஸ்ரீலங்கா
2013ல் இலங்கையில் நடைபெறவிருக்கும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டுக்கான கலந்துரையாடல் ஒன்று முதன் முதலில் மாநாட்டு நிதிக்குழுவினருடன் மாநாட்டின் தலைவர் ரவூப் ஹக்கீம் நீதி அமைச்சர் தலைமையில் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதில் நிதிக்குழுவைச் சேர்ந்த முக்கியஸ்தர்களுடன் ஏற்பாட்டுக் குழுவினரும் கலந்து கொண்டனர். நிதிக்குழுவின் காப்பாளராக அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களும் தலைவராக கிழக்கு மாகாணசபை அமைச்சர் அல்ஹாஜ் ஹாபிஸ் நஸீர் அவர்களும், செயலாளராக கல்முனை மாநகர பிதா சிராஸ் மீரா சாஹிப் அவர்களும், பொருளாளராக இலக்கிய புரவலர் ஹாஸிம் உமர் அவர்களும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
மாநாட்டிற்கான நிதி சேகரிப்பு விடயங்களில் வருகை தந்தோர் ஆர்வமுடன் தத்தமது ஆலோசனைகளை முன்வைத்தனர். மாநாடு மூன்று நாட்கள் நடத்துவதெனவும், தென்கிழக்கில் நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
நவீன இலக்கிய வடிவங்களை மையப்படுத்தி இம் மாநாட்டை நடாத்துவதும், அத்துடன் மாநாட்டுக்கு இணைந்ததாக புத்தகக் கண்காட்சி நூல் வெளியீட்டாளர்களுக்கான சந்திப்பு போன்றவற்றையும், கலை, கலாச்சார, சமய நிகழ்ச்சிகளை குறிப்பாக நடைபெறவிருக்கும் தென்கிழக்கு பகுதியின் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் நடத்தப்பட வேண்டும் எனவும் துறைசார் ஈடுபாடுள்ள தமிழ் அறிஞர்களையும் கட்சி பேதம் பாராது அரசியல் பிரமுகர்களையும் இணைத்துக் கொண்டு இதுவரை நடைபெற்ற மாநாடுகளை விடவும் முற்றிலும் மாறுபட்டதும் கலை இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்களின் கவன ஈர்ப்பையும் பெறக்கூடியதுமான ஒன்றாகவும் இம்மாநாட்டை நிரல் படுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் ஊடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஒரு மாநாடாகவும் வெளிநாட்டு அறிஞர்களும் பேராளர்களும் கலந்துக்கொள்ளும் பல அரங்குகளை கொண்ட ஒரு மாநாடாகவும் இது அமையப்பெறும். முன்னேற்பாடுகளுக்கான குழுக்கூட்டங்கள் அனைத்தும் இணைத்தலைமைகளாக ஏகமனதாக முன்மொழியப்பட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் பஷீர் சேகுதாவூத், பாராளுமன்ற உறுப்பினர் ஹஸன் அலி ஆகியோரின் தலைமையில் அவ்வப்போது நடைபெறும்.
கூட்டத்தின்போது, பொதுச்செயலாளராக வைத்திய கலாநிதி தாஸிம் அகமதும் தேசிய ஒருங்கிணைப்பாளராக மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத்தும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
வைத்திய கலாநிதி தாஸிம்
பொதுச்செயலாளர்.
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு - 2013 ஸ்ரீலங்கா
Post a Comment