யாழ் முஸ்லிம் ஒன்றுகூடல் 2013 (22,23,24,25-பெப்ரவரி)
யாழ் முஸ்லிம் ஒன்றுகூடல்-2013ற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் யாவும் நிறைவடைந்திருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் இம்முறையும் கடந்த வருடத்தை விடவும் கூடுதலான யாழ் முஸ்லிம் உறவுகள் இந்நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. நடைபெற இருக்கின்ற நிகழ்ச்சிகளின் ஒழுங்குகளை இங்கே சுருக்கமாகத் தருகின்றோம்.
22ம் நாள்- வெள்ளிக் கிழமை அஸர் தொழுகையினைத் தொடர்ந்து நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும். அதனைத்தொடர்ந்து மேடை நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள் என்பன ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
23ம் நாள் சனிக்கிழமை காலை முதல் கிரிக்கட் போட்டிகள், மற்றும் மாணவர் போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறும். அத்துடன் யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசம் தொடர்பிலான புகைப்படக் கண்காட்சி மற்றும் யாழ் மண்ணின் சாதனையாளர்கள், யாழ் முஸ்லிம் வரலாற்றின் முக்கியஸ்த்தர்களுடைய வாழ்க்கை வரலாற்றை உணர்த்தும் கண்காட்சியும் அங்குரார்ப்பனம் செய்துவைக்கப்படும். பின்நேர வேளையில் உணவுக் கண்காட்சி மற்றும் ஆண்கள், பெண்களுக்கான விநோதப்போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறும், பெண்களுக்கான விநோதப்போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்திற்கு ஆண்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மாலை வேளையில் அறிவுக்களஞ்சியம், மற்றும் விவாத அரங்குகள் மேடை நிகழ்ச்சிகளாக அரங்கேற்றப்படும்.
யாழ் முஸ்லிம் ஒன்றுகூடலை முன்னிட்டு யாழ் முஸ்லிம் வட்டாரம் முழுமையாக வர்ண விளக்குகலால் அலங்கரிக்கப்படும், அத்துடன் முஸ்லிம் வட்டாரத்தின் எல்லா இடங்களில் இருந்தும் நிகழ்ச்சிகளை செவிமடுக்கும் வகையில் ஒலிபெருக்கிகளும் பொறுத்தப்படும்.
24ம் நாள் ஞாயிற்றுக் கிழமை பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காலை வேளையில் மரதன் ஓட்டப்போட்டி, சைக்கிள் ஓட்டப்போட்டி, குறுந்தூர ஓட்டப்போட்டி விநோதப்போட்டிகள், என்பனவும் உதைப்பந்தாட்டம் இறுதிப்போட்டி நிகழ்ச்சியும் நடைபெற ஏற்பாடாகியிருக்கின்றன, அதுதுடன் இந்நிகழ்வில் பங்கேற்கும் அனைவருக்கும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இம்முறை யாழ் முஸ்லிம்களின் பாரம்பரிய அமைப்பிலான தேங்காய்ச்சோறு, மற்றும் கத்தரிக்காய், வாழைக்காய் கறி, மற்றும் இறச்சிக்கறி என்பன அவசியம் இடம்பெறவேண்டும் என வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளன, அனைத்து விதமான உணவுப் பகிர்வுகளும் பிலாவில் வழங்கப்படும் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மாலை வேளையில் இறுதி நாள் மேடை நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியிருக்கின்றன. கவியரங்கு, மற்றும் பரிசளிப்பு விழா என்பவற்றுடன் “யாழ் முஸ்லிம் மீள்குடியேற்றம்- ஏன் எதற்கு” என்னும் தலைப்பிலான விஷேட விளக்க நிகழ்வும் இடம்பெற ஏற்பாடாகியிருக்கின்றன.
யாழ் முஸ்லிம் சொந்தங்களின் ஒன்றுகூடலாக அமையவுள்ள இந்நிகழ்வின் நோக்கமாக இருப்பது யாழ்ப்பாணம் எமது தாய் மண், யாழ்ப்பாணம் எமது அடையாளம் என்பதை நிறுவுதலாகும், அனைத்து சொந்தங்களையும் யாழ் மண்ணை நோக்கி அணிதரளுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்போடு அழைக்கின்றார்கள்.
யாழ் முஸ்லிம் ஒன்றுகூடல்- ஏற்பாட்டுக்குழு
யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம்
Post a Comment