1077 கோடியை ஏப்பம்விட்ட ஆசிரியை
வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள தன்னாட்சி உரிமம் பெற்ற நாடு மெக்சிகோ. இந்த நாட்டில் சுமார் 11 1/2 கோடி மக்கள் வாழ்கின்றனர்.
இந்த நாட்டின் மேல்மட்ட அரசியல் வட்டாரத்தில் சக்தி வாய்ந்த பெண்மணியாக அறியப்படுபவர், எல்பா எஸ்தர் கார்டில்லோ (68). மெக்சிகோ நாட்டில் உள்ள 'கல்வி பணியாளர்கள் தேசிய யூனியன்' என்ற ஆசிரியர் சங்கத்தின் தலைவராக இவர் கடந்த 20 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார்.
இவர் மீது சில ஆண்டுகளாக ஊழல் குற்றச்சாட்டுகளை ஆசிரியர்கள் கூறி வந்தனர். சங்கத்தின் நிதியை தனது சொந்த தேவைகளுக்காக எல்பா எஸ்தர் கார்டில்லோ பயன்படுத்திக் கொண்டதாக மெக்சிகோ ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தும்படி மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நிடோ உத்தரவிட்டார். இதனையடுத்து, கடந்த ஒரு வாரமாக அவரிடம் நடத்திய விசாரணையில் ஆசிரியர்கள் யூனியனுக்கு சொந்தமான 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்புக்கு ரூ. ஆயிரத்து 77 கோடியே 26 லட்சத்து 55 ஆயிரத்து 165) தனது சொந்த தேவைக்காக அவர் கையாடல் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 1 1/2 கோடி ஆசிரியர்கள் உறுப்பினர்களாக உள்ள யூனியனின் பணத்தை கையாடல் செய்து, அத்தொகையின் மூலம் ஆடம்பர மாளிகை, ஆண்டுக்கு ஒருமுறை முகமாற்று (பிளாஸ்டிக் சர்ஜரி) அறுவை சிகிச்சை என எல்பா எஸ்தர் கார்டில்லோ உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Post a Comment