Header Ads



பங்களாதேஷில் 100 பேர் பயணித்த படகு கடலில் மூழ்கியது


பங்களாதேஷ் தலைநகர் டாக்காவுக்கு அண்மையிலுள்ள மேக்னா நதியில் 100  பயணிகளுடன் பயணம் செய்த படகொன்றே நீரில் மூழ்கியது. இப்படகு விபத்தில் சிக்கிய பயணிகளில் 25 பேர் நீந்திக் கரை திரும்பியுள்ளதுடன் ஏனைய பயணிகள் தொடர்பான விபரங்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லையென அந்நாட்டு செய்திச் சேவையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

 டாக்கா நகருக்கு அண்மையிலுள்ள மேக்னா நதியில் பயணம் செய்த எம்.வி. சரோஸ் என்ற பயணிகள் படகு  அளவுக்கு அதிகமான பயணிகளை  ஏற்றிச் சென்றதால் நீரில் மூழ்கியிருக்கலாமெனத் தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியாளர் சைபுதின் பதால் இவ்விபத்தில் சிக்கிய 25 பேர் நீந்திக் கரை ஒதுங்கியுள்ளதுடன் படகில் பயணித்த ஏனைய பயணிகளைத் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது;
பங்களாதேஷ் தலைநகரை அண்டிய பகுதிகளில் நதிமூல போக்குவரத்து பரந்து காணப்படுவதால் ஒவ்வொரு வருடமும் அதிகளவிலான படகு விபத்துகள் ஏற்படுகின்றன.

 படகுகளில் அதிகளவான பயணிகளை ஏற்றுதல், போக்குவரத்துக்கு தகுதியற்ற படகுகளை பயன்படுத்தல் போன்றவை இவ்வாறான விபத்துக்கு மூல காரணியாக அமைகின்றது. 

டாக்கா நகரிலிருந்து சாந்பூர் மாவட்டத்துக்குப் புறப்பட்ட எம்.வி. சரோஸ் முன் சிகான்ஜ் தலைநகரைக் கடந்து 30 கிலோ மீற்றர் தூரத்தில் திடீரென நீரில் மூழ்க ஆரம்பித்தது. இப்படகில் பயணித்த சில பயணிகள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நீரில் குதித்து  நீந்த ஆரம்பித்ததுடன் ஏனைய சிலர் தத்தளித்ததாக செய்தி நிறுவனமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

 இதேவேளை, பாறை ஒன்றுடன் மோதியதால் இப்படகு விபத்துக்குள்ளானதாகவும் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.