முல்லைத்தீவில் 1000 ஏக்கரில் முஸ்லிம்களை குடியேற்ற நடவடிக்கை - தமிழர்கள் எதிர்ப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கர் நிலப்பகுதியில் முஸ்லிம்களை குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட செயலகத்திற்கு ஜனாதிபதி செயலணி உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கு தமிழர் தரப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
1990 இல் விடுதலைப் புலிகளின் பலாத்கார இனச்சுத்திகரிப்புக்கு உள்ளான வடக்கு முஸ்லிம்கள் தற்போது அவர்களின் தாயகப் பிரதேசத்தில் மீள்குடியேறி வருகின்றனர். குறிப்பாக முல்லைத்தீவில் வாழ்ந்த முஸ்லிம்களின் காணிகள் புலிகளின் காலப்பகுதியில் தமிழர்களுக்கு விற்கப்பட்டுவிட்டது. இதனால் மீளக்குடியேறுவதில் முஸ்லிம்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.
இந்நிலையிலேயே முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் முஸ்லிம்களை குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெடுங்கேணி முல்லைத்தீவு வீதி, மாங்குளம் முல்லைத்தீவு 6 ஆம் கட்டை பகுதி, முத்தையன் காடு, ஓட்டுச்சுட்டான் ஆகிய காட்டுப்பிரதேசங்களை அழித்தே முஸ்லிம் மக்களை குடியேற்றுமாறு ஜனாதிபதி செயலணி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு பெப்ரவரி முதலாம் திகதி உத்தரவு பிறப்பித்துள்ளது.
முல்லைத்தீ மாவட்டத்திலுள்ள ஹிக்கிராபுரம், கணுக்கேணி, குதரபுரம், முல்லைத்தீவு நகர், நீராவிப்பிட்டி, தண்ணீரூற்று கிழக்கு, தண்ணீரூற்று மேற்கு, வண்ணாங்குளம், முத்தையன்கட்டு, திருமுறிகண்டி ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்களின் காணிகளையே 1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் புலிகள் தமிழர்களுக்கு விலைக்கு விற்றிருந்தனர்.
இப்பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கே காட்டுப் பகுதியை அழித்து 1000 ஏக்கரில் குடியமர்த்தப்படவுள்ளனர். அரசாங்கம் மேற்கொண்டுள்ள இத்திட்டத்திற்கே தமிழர் தரப்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ் மக்களோ தாம் யுத்தத்தில் பாதிப்படைந்தவர்கள் எனவும் தமக்கு நிலம் ஒதுக்காது, முஸ்லிம்களுக்கு காணிகள் ஒதுக்கப்படுவதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதுடன் இச்செயற்பாடு இரு சமூகங்களுக்குமிடையிலான உறவில் பாதகத்தை ஏற்படுத்துமெனவும் குறிப்பிட்டுள்ளனர்..
Post a Comment