சிங்கள ஊடகவியலாளர் பார்வையில் றிசானா - Crocodile Tears For A Thousand Rizanas
தமிழில் எஸ்.குமார் (தேனீ))
அப்பாவி ஸ்ரீலங்காப் பெண்ணான ரிசானா நபீக்கின் தலையை துண்டித்ததற்காக சவுதி அரேபியர்களுக்கு எதிராக எழுந்துள்ள கோபத்தையும் ஆத்திரத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும், ஆனால் இந்த துயரத்துக்கான பொறுப்பு சவுதிக்கு மட்டும்தானா?
ஒவ்வொரு நாடும் அதற்குரிய விசித்திரமான நீதிமுறைகள் மற்றும் தண்டனை சட்டங்களைக் கொண்டுள்ளன, அவைகளை அவர்கள் தங்கள் சொந்தப் பிரஜைகளுக்காக கூடத் தளர்த்திக் கொள்ளாதபோது அதை அவர்கள் வெளிநாட்டவர்களுக்காக – குறைந்தது வறிய நாடுகளில் இருந்து வேலைக்கு வந்துள்ள பரிதாபகாரமான ஏழை வேலையாட்களுக்காவது - தளர்த்துவார்கள் என எதிர்பார்க்க முடியாது.
ஸ்ரீலங்கா , அதேபோல தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள், தங்கள் பிரஜைகள், தலைமுறைகளாக தங்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் வறுமையின் பிடியிலிருந்து தங்களை கைதூக்கி விடுவதற்காக அந்நியச் செலவணியில் கணக்கிடும்போது மிகவும் துச்சமான தொகையான ஒரு சம்பளத்தை தேடி செல்லும்போது எதிர்நோக்கும் ஆபத்துகளைப் பற்றி நன்கு அறிவார்கள். தாங்கள் பெறும் கணிசமான இலாபத்துக்காக இந்த அதிகாரிகள் 21ம் நூற்றாண்டின் ஒரு அடிமைத்தனமான செயலுக்கு துணையாக இருக்கிறார்கள்
டொலரின் அழைப்பு
பிரகாசமான தீவு என்கிற பெயரும், இப்போது ஆசியாவின் அதிசயம் என்கிற பெரும் கூட இருந்தாலும், டொலர் சைகை காட்டி அழைக்கும்போது, அவர்களின் பிரஜைகளுக்கு இந்த முறையின்கீழே அடைக்கலம் தேடிச்செல்லுவதற்கு எழும் சலனத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியாமலிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. (தற்பொழுது கிடைக்க கூடியதாக உள்ள புள்ளி விபரங்களின்படி) 2010 ல் புலம்பெயர்ந்த ஸ்ரீலங்கா தொழிலாளர்கள் நாட்டுக்கு கொண்டு வந்த அந்நியச் செலவாணி 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இந்த தொழிலாளர் சக்தியின் பெருமளவிலானவர்கள் பாலைவன மண்ணில் வீட்டுப் பணிப்பெண்களாக அடிமைத்தொழில் செய்துவரும் ரிசானக்களைப் போன்றவர்களே.
நாட்டின் அந்நியச் செலவாணி வருமானத்தில் 33 விகிதத்தையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 விகிதத்தையும் இது உள்ளடக்குகிறது. 1970 களின் பிற்பகுதியில் மத்திய கிழக்கு நாடுகளின் தொழிலாளர் சந்தை திறந்து விடப்பட்டதிலிருந்து இதுதான் நிலமையாக உள்ளது.
சிங்கங்களின் ஓட்டப் பந்தயத்தில் கிளம்பும் தோரணைகள் மற்றும் உறுமல்களைப்போல், அதிலுள்ள சிக்கல்களையும் சிரமங்களையும் பொருட்படுத்தாமல் நாங்கள மத்தியகிழக்கு பாலைவனங்களிலிருந்து அந்த தங்கப் புதையலை சேகரிப்பதற்காக எங்கள் பெண்களை கணிசமானளவு அடிமைத்தொழில் புரிவதற்காக தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருக்கிறோம்.
பொதுவாக இந்த பணத்தில் எவ்வளவு தொகை இந்த நாட்டில் உள்ள வறியவர்களுக்கு பயன்பட்டுள்ளது? ஆம், இந்த தொழிலாளர்கள் வருடக்கணக்காக வெற்றிகரமாக உழைத்ததின் பின்னர் நாடு திரும்பியதும் தங்கள் குடும்பத்தினருக்காக செங்கல்லும் சலவைக் கல்லும் பயன்படுத்தி ஒரு நவீன வீட்டைக் கட்டுவார்கள், அந்த இளம் பெண் ரிசானாவும் இந்த நோக்கத்துக்காகத்தான் போனாள். மூதூரிலுள்ள கிடுகளால் வேயப்பட்ட அவளது எளிய வீட்டின் புகைப்படங்கள் அவளது குடும்பத்தினருக்கு ஒரு கௌரவமான வதிவிடத்தை வழங்குவதற்கு அவளுக்கிருந்த ஆவலை பேசுகின்றன.
கிட்டத்தட்ட 1.7 மில்லியன் புலம்பெயர் ஸ்ரீலங்கா தொழிலாளர்கள் வெளி நாடுகளில் இருந்து பணம் அனுப்பி வருவதாக மதிப்பிடப் பட்டுள்ளது. இந்த நாடு வறுமையிலிருந்து வெளியேற வேண்டுமானால், நாட்டிலுள்ள இயலுமான மக்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளையும், வயதானவர்களையும் கவனிப்பாரில்லாது விட்டுவிட்டு வெளிநாடு சென்று தங்கள் எதிர்காலத்தை வெளிநாடுகளிலிருந்துதான் தேட வேண்டுமா?
அடிமைத்தனம் மற்றம் வறுமை ஒழிப்பு
வறுமை ஒழிப்பு என்கிற குறிச்சொல், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் அலங்காரமான கூட்ட அறைகளில் நடக்கும் கருத்தரங்குகளில் இருந்துதான் கிராமத்து பசுமைகளின் பொது மேடைகளுக்கு வருகிறது. ஒரு மூன்று தசாப்தகாலமாக அத்தகைய பிரச்சார விளம்பரங்களை, ஜனாதிபதி பிரேமதாஸவின் கிராம எழுச்சி, சந்திரிகா குமாரதுங்கவின் சமூர்த்தி, மற்றும் ராஜபக்ஸவின் சமீபத்தைய ஆரவாரமான திவி நகும, என்பனவற்றின் ஊடாக நாங்கள் கேட்டு வருகிறோம். எனவே உண்மையில் நடைபெற்று வரும் ஒரேயொரு வறுமை ஒழிப்பு மத்திய கிழக்கு வேலை வாய்ப்பு மூலமே நடைபெற்று வருகிறது. வறுமை ஒழிப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் பெரும்பகுதி பிரச்சார வெடிகளுக்கும் மற்றும் அரசியல் அலைச்சல்காரர்களின் நிதி வளர்ச்சிக்குமே பயன்பட்டு வருவதை பொதுமக்கள் கண்கூடாக கண்டு வருகிறார்கள். அதிக எதிர்பார்ப்புகளை மலர வைத்திருக்கும் திவி நகுமவினை பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
அதேவேளை பதவியில் இருக்கும் எந்த அரசாங்கமும் வறுமை ஒழிப்பிற்காக, மத்திய கிழக்கு வேலைவாய்பினை தவிர்த்து வேறு பாதைகளை பற்றி சிந்திக்க வேண்டும், ஸ்ரீலங்காவாசிகளை அங்கு வேலைகளுக்கு அனுப்புவதை பற்றி அதிகம் சிந்திக்க வேண்டியுள்ளது. ராஜபக்ஸவின் அரசாங்கம் ஒரு பிடியில் அகப்பட்டுள்ளது. அதனால் வெறுமே மத்திய கிழக்கு வருமானத்தை விட்டுவிட முடியாது, ஆனால் நமது புலம்பெயர் தொழிலாளர்களின் நலன்கள் மற்றும் பாதுகாப்புக்கான ஒரு பதிலை கண்டு பிடிக்க வேண்டும். இதுவரை மேற்கொண்ட சகல முயற்சிகளும், குறிப்பாக சவுதி அரேபியாவிடம் மேற்கொண்டவைகள் யாவும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே உள்ளன. றிசானாவின் மன்னிப்புக்காக தூதுவர்கள், முன்னணி முஸ்லிம் அரசியல்வாதிகள், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு பொறுப்பான அமைச்சரின் தலைமையில் மேற்கொண்ட தூதுக்குழுக்கள், மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் மேற்கொள்ளப்பட்ட மேன் முறையீடுகள் யாவும் தோல்வியடைந்து விட்டன. தூதரக தொடர்புகள் மட்டுமே சாத்தியமான ஒரே வழி ஆனால் நாங்கள் ஒரு கல்லில் தலையை மோதிக் கொள்வதுபோல உதாசீனப் படுத்தப்பட்டு விட்டோம்.
ஏ.சி.எஸ். ஹமீதின் காலம் தொட்டே முஸ்லிம்களை தூதுவர்களாக இந்த முஸ்லிம் நாடுகளுக்கு அனுப்புவது, வெளிநாட்டு அமைச்சகத்தின் உத்தியாக இருந்தபோதும் அதனால் எந்த பயனும் கிட்டவில்லை .றிசானாவின் மரணதண்டனைக்குப் பிறகு தற்போதைய தூதுவரையும் கொழும்புக்கு திருப்பி அழைத்தாகிவிட்டது, ஆனால் எட்டு வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டு வருந்தி, இறுதியில் தலை துண்டிக்கப்பட்ட அந்த ஏழை சிறுமியை காப்பாற்ற ஜனாதிபதியின் வேண்டுகோள் உட்பட முக்கியமானதும் பிரபலமானதுமான அனைவரினதும் முறையீடுகளும் தோல்வி கண்டிருக்கும், இந்தக் கட்டத்தில் இந்தச் சோகத்திற்காக அவரை பலிகடாவாக ஆக்குவது மோசமான செயல்.
இதே நிலையிலுள்ள ஏனைய தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் கூட்டுச்சேர்ந்து ஒரு உத்தியை திட்டுமிட்டு உருவாக்கும் வாய்ப்பு உள்ளது, ஆனால் அது இந்த புலம் பெயர் நாடுகளின் தொழிலாளர்களை தாங்கள் வரவழைப்பது, இந்த ஏழை நாடுகளுக்கு தாங்கள் ஏதோ உதவி செய்வதாக எண்ணும் சக்திமிக்க டொலர் தை;திருக்கும் சேக்குகளின் கோபத்தை தூண்டிவிடும்.
மகிந்த சிந்தனை போன்றவற்றில் உள்ள தலைவர்களின் சிந்தனைகளில் புலம்பெயர் தொழிலாளர்களின் கொள்கைகளில் அதை ஒரு செலவாணி உழைக்கும் தொழிலாக கருதாமல் ஒரு மனிதாபிமான அணுகுமுறைக் கண்ணோட்டத்தில் கவனத்தில் கொள்ளும் வகையில் மாற்றம் செய்வதற்கான வெளிப்பாடுகள் தெரிகின்றன. அனால் இவையாவும் கடினமான யதார்த்தமாகிய பிரதான வளந்தரும் அந்நியச் செலவாணி ஈட்டுதலை அபாயத்திற்கு உட்படுத்துவதால், அவை எதிர்காலத்துக்கு ஏற்ற வளமான பார்வைகளாக மட்;டுமே இருக்கும். பிரதான வளந்தரும் அந்நியச் செலவாணியை அபாயத்திற்கு உள்ளாக்காமல் தடுப்பதா, அதேவேளை ஸ்ரீலங்கா புத்திரிகளின் உயிரற்ற உடல்கள் மற்றும் சிலர் உயிரோடு சித்திரவதைகளை அனுபவித்ததுக்கான சான்றுகளோடு விமானமூலம் நாடு திரும்புவது போன்ற சம்பவங்களை பார்த்துக் கொண்டிருப்பதா என்பதில் எதை தேர்வு செய்வது என்பது அரசாங்கத்தின் கடினமான தேர்வாக இருக்கும்.
ரிசானாவின் விதியை எண்ணி எங்களது இரத்தம் கொதிக்கும் அதேவேளை, இதேபோன்ற கொடுந் துன்பங்களை எதிர்கொள்ள நாம் இன்னும் ஆயிரக்கணக்கான ரிசானாக்களை தொடர்ந்து அனுப்ப போகிறோமா?
மடமைகளைச் செய்து கொண்டு அதேநேரம் அதன் விளைவுகளைக் கண்டிக்கும் ஸ்ரீலங்காவின் இரட்டைச் சிந்தனைதான் இதற்கான பதிலா?
முதலைகள்
வியாழக்கிழமை டெய்லி நியூஸ், இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (ஐ.யு.சி.என்.) ஸ்ரீலங்காவில் இந்த வருடம் மே மாதம் நடைபெறவுள்ள உலக முதலைகள் மாநாட்டுக்கான அனுசரணையை வழங்கியுள்ளதாக ஒரு செய்தியை தாங்கி வெளிவந்திருந்தது. இந்த நிகழ்வுக்கான இடமாக ஏன் ஸ்ரீலங்கா தேர்வு செய்யப்பட்டது? ஒருவேளை முதலைக் கண்ணீர் வடிப்பதில் நாங்கள் சர்வதேசப் புகழ் பெற்றிருக்கிறோம் என்பதினால் போலும்.
நன்றி காமினி வீரக்கோன் AND குமார் ,
ReplyDeleteஇங்கே உருப்படியான திட்டமும் இல்லை, வேலை வாய்ப்புமில்லை. ஆனால் பல ரிசானாக்களை உருவாக்கும் யுக்தியும் நடைமுறையும் நிறையவே உண்டு .
நாய் வாண்டா என்ன ? பூனை கண் பொண்டாட்டியா ஆனா என்ன ?
அரசியலுக்கு வருவதே தனக்கும் தன் பரம்பரைக்கும் சுக வாழ்வுக்கு பணமும், சொத்தும் சேர்பதற்குத்தானே.
பழைய முதலைகள் -
கண்ணீர் விட்டன, ஆற்றில் இருந்தன .
இன்றைய முதலைகள் -
றீல் (பொய்) விடுகின்றன, பிரஸ் மீட் வைக்கின்றன,போட்டவுக்கு போஸ் குடுகின்றன, ஆபீசுக்கும் போகின்றன .