பாகிஸ்தான் - இந்தியா நாடுகளிடையே புதிய பிரச்சினை
எல்லை பகுதியில் அரிய வகை பறவைகள் வேட்டையாடப்படுவதால், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பூசல் ஏற்பட்டுள்ளது.
அரபு நாடுகளில் காணப்படும், அபூர்வ இன, ஹவுபாரா பஸ்டார்ட் பறவைகள், குளிர் காலத்தில், பாகிஸ்தான்-இந்திய எல்லையில் உள்ள பாலைவன பகுதிகளுக்கு இடம் பெயர்கின்றன. இந்திய-பாகிஸ்தான் எல்லையில், துப்பாக்கி சூடு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ராஜஸ்தானின், ஜெய்சால்மர் பகுதிக்கு அருகே, சமீப காலமாக அடிக்கடி துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது. இது தொடர்பாக, பாகிஸ்தான் எல்லையோர காவல்படையினரை, இந்தியா எச்சரித்தது. இருப்பினும் இந்த குண்டு சத்தம், எல்லை பகுதிகளில் நிற்கவில்லை. இதையடுத்து, இந்திய-பாகிஸ்தான் எல்லைகாவல் படையினரின் கூட்டம், கடந்த வாரம், பஞ்சாப் அருகே உள்ள அட்டாரியில் நடைபெற்றது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அதிகாரி கூறியதாவது,
ஹவுபாரா பறவையின் இறைச்சியை அரபு நாட்டவர், குறிப்பாக அரச குடும்பத்தினர் விரும்பி சாப்பிடுவர். இதற்காக அவர்கள், இந்த பறவையை வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குளிர் காலங்களில், இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு இந்த பறவைகள் வருவதால், பாகிஸ்தானில் தங்கியுள்ள அரபு நாட்டினர், இந்த பறவைகளை வேட்டையாடும் போது தான், துப்பாக்கி சத்தம் கேட்கிறது. நல்லெண்ணத்தின் அடிப்படையில், அரபு நாட்டவருக்கு, இந்த பறவைகளை வேட்டையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பறவைகளை வேட்டையாட தடை விதிக்கும் பட்சத்தில், அரபு நாட்டிடமிருந்து கிடைக்கக்கூடிய நிதியுதவிகள் நிறுத்தப்படலாம். எனவே, அவர்களை பகைத்து கொள்ள விரும்பவில்லை. குறைந்த அளவில் வேட்டையாடும் படி அறிவுறுத்தியுள்ளோம்.இவ்வாறு பாகிஸ்தான் அதிகாரி கூறினார்.
Post a Comment