றிஸானா நபீக் மீதான மரண தண்டனை - குற்றவாளி(கள்) யார்?
இலங்கைப் பணிப்பெண் றிஸானா நபீக்கிற்கு சவூதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை மட்டுமல்ல சர்வதேசமும் அதிர்ந்து போனது. எதிரும் புதிருமான கருத்துக்களும் ஊகங்களும் முடிவுகளும் தெரிவிக்கப்பட்டுவருகின்றன.
இஸ்லாமியத் தண்டனைகள் காட்டுமிராண்டித்தனமானவை என்றும் நாகரிக உலகுக்குப் பொருத்தமற்றவை என்றும் அப்பாவியான அபலைப் பெண்ணின் தலையை அராஜகர்கள் கொய்துவிட்டார்கள் என்றும் முஸ்லிம் அல்லாதவர்களும் ஏன் முஸ்லிம்களிற் சிலரும்கூட எழுதவும் பேசவும் தலைப்பட்டுவிட்டனர். இஸ்லாத்தில் பற்றுக் கொண்ட சிலரோ, மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமை சரியானது என்று வெளிப்படையாகக் கூறத் தயங்குவதுடன் சவூதியைப் பாதுகாக்க எமக்கு எத்தேவையுமில்லையென்றும் கூறிவருகின்றனர்.
இஸ்லாத்தில் பூரணமாக நுழைந்துவிடுங்கள்
ஆனால், இந்த நிகழ்வைப் பல கோணங்களில் இருந்து நோக்க முடியும். ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை இஸ்லாம் என்பது ஒரு பூரண வாழ்க்கை திட்டமாகும். 'இஸ்லாத்தில் பூரணமாக நுழைந்துவிடுங்கள்' (2:208) என்பது அல்லாஹ்வின் கட்டளை. அந்த பூரண இஸ்லாத்தில் நம்பிக்கைக்கோட்பாடுகள், வணக்கவழிபாடுகள், பண்பாட்டு விழுமியங்கள், தனிமனித குடும்ப, சமூக விவகாரங்களுடன் தொடர்பான சட்ட திட்டங்கள், சமூக அமைத்திக்கு பங்கம் விழைவிக்கும் குற்றங்களுக்கான தண்டனைகள், சர்வதேச உறவுகள் பற்றிய நியமங்கள் என்பன அடங்கிருக்கின்றன. ஈமான்(நம்பிக்கை) மற்றும் இபாதா(வழிபாடுகள்) விடயத்தில் மாத்திரம் இஸ்லாத்தை அமுல்படுத்தி ஏனைய பகுதிகளில் உலக மனிதர்களால் இயற்றப்பட்ட சட்டதிட்டங்களையோ தனது மனோ இச்சையின் முடிவுகளையோ பின்பற்றுபவர் பரிபூரண முஸ்லிம் ஆக மாட்டார்.
எனவே, குற்றங்களுக்கான தண்டனைகள் (Criminal Laws) அல்லது (PenalCode) என்ற பகுதி பற்றியும் இஸ்லாம் மிகவுமே விரிவாகவும் தெளிவாகவும் பேசியிருக்கிறது. ''ஜராஇமுல் ஹுதூத்'', ''ஜராஇமுல் கிஸாஸ்'', ''ஜராஇமுஸ் தஃஸீர்'' என்று மூன்று பிரிவுகளை இது கொண்டிருக்கிறது. முதல்வகைக் குற்றங்களாக விபசாரம், அபாண்டம், மதுவருந்தல், களவு, அரசுக்கெதிரான புரட்சி, வழிப்பறிக் கொள்ளை போன்றன அடங்கும். அவை ஒவ்வொன்றுக்குமான தண்டனைகள் பற்றி குர்ஆன், சுன்னாவில் தெளிவான பல முடிவுகள் தரப்பட்டிருக்கின்றன. இவை நிரூபிக்கப்பட்டால் மன்னிப்புமில்லை. நிர்ணயிக்கப்பட்ட தண்டனைக்கு பதிலாக வேறு தண்டனைகளை வழங்கவும் முடியாது. தண்டப்பணம் பெறவும் முடியாது. இவை 'ஹுகூகுல்லாஹ்' (அல்லாஹ்வின் உரிமைகள்) என்ற பிரிவில் அடங்கும்.
இரண்டாம் பிரிவுக் குற்றங்கள் 'ஜராஇமுல் கிஸாஸ்' (பழிக்குப்பழி வழங்க முடியுமான குற்றங்கள்) எனப்படும். அதாவது மனித உயிர் மீதோ உடல் மீதோ செய்யப்படும் அனைத்து வித அத்துமீறல்கள் பற்றியும் இப்பிரிவு பேசுகின்றது. கொலை செய்வது, காயப்படுத்துவது, அடிப்பது, உறுப்புக்களை நீங்கி விடுவது என்பனவற்றுக்கான தண்டனைகள் பற்றி இங்கு பிரஸ்தாபிக்கப்படுகின்றது. கொலையைப் பொறுத்தவரை வேண்டுமென செய்யப்பட்ட கொலை, வேண்டுமென செய்யப்பட்டதுபோன்ற கொலை, கைமோசக் கொலை என 3 பிரிவாக அமையும்.
முதலாவது நிலையில் ,அதாவது,வேண்டுமென கொலை செய்யப்பட்டால்,இறந்தவருடைய பொறுப்புதாரிகளான உறவினர்களுக்கு கொலை செய்தவரை பழிக்குப்பழியாக கொலை செய்வதற்கு உரிமையுண்டு. அல்லது பொறுப்புதாரிகளில் ஒருவர் மன்னிக்கும் பட்சத்தில் கொலைத்தண்டனை ரத்து செய்யப்பட்டு தண்டப் பணம்; செலுத்துதல் என்ற நிலைக்கு அது மாறிவிடும். தண்டப்பணமும் தேவையில்லை என்ற முடிவுக்கு வருவதற்கும் பொறுப்புதாரிகளுக்கு உரிமை உண்டு. இது விடயமாக ஆட்சியாளர்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. அதாவது தண்டனையைத் தீர்மானிக்கும் பூரண உரிமை பொறுப்புதாரிகளுக்குப் பூரணமாக வழங்கப்பட்டுள்ளது.
கொலைஞனைக் கொல்ல முடியும். அதற்கான உரிமை கொல்லப்பட்டவரது பொறுப்பாளருக்குண்டு (17:33) ஆனால், மன்னிக்கலாம். மன்னிப்புக்கான அனுமதியானது அல்லாஹ்வின் அருளால் வழங்கப்படும் சலுகை என்றும் (2:178) அல்லாஹ் கூறுகின்றான். தவறுதலாக கொலை இடம்பெறும் பட்சத்தில் அதற்கான பரிகாரம் யாது என்றும் (4:92,93) அல்லாஹ் தெரிவிக்கிறான்.
இது மனித உயிர் மற்றும் உடல் மீதான அத்துமீறல்கள் தொடர்பான மிகச் சுருக்கமான அறிமுகமாகும். பொதுவாக இஸ்லாம் கூறும் குற்றவியல் சட்டங்கள் நிலையானவை, எக்காலத்துக்கும் பொருத்தமானவை,எல்லாவித நலன்களையும் ஈட்டித்தருபவை என்று நம்புவது முஸ்லிமின் கடமை. சந்தேகிப்பது பாரிய தவறு மாத்திரமன்றி இறைநிராகரிப்புமாகும். குர்ஆனின் சட்டங்களை வைத்து ஆட்சி செய்யாதவர்களும் (5:44) அவற்றை விட்டுவிட்டு வேறு சட்டங்களை நாடுவோரும் விசுவாசிகள் அல்லர் என்பது குர்ஆனின் ஆணித்தரமான கருத்தாகும்.
நிபந்தனைகள் உள்ளன
எது எப்படி இருப்பினும் இத்தகைய சட்டங்கள் அமுலாகுவதாயின் பின்வரும் நிபந்தனைகள் அவசியமாகும்:-
1. இந்தக் சட்டங்கள் அமுலாகும் சமூக அமைப்பு முற்றிலும் வித்தியாசமானதாகும். அங்குள்ள குடிமக்கள் அனைவரும் அல்லது பெரும்பாலானோர் இஸ்லாத்தை தமது கொள்கையாக ஏற்றிருப்பார்கள். அல்லாஹ்வின் சட்டங்களால் மட்டுமே உலகில் நீதி, சமத்துவம், அமைதி சாத்தியப்படும் என்பதில் அவர்கள் ஆழமான விசுவாசம் கொண்டிருப்பர்.
2. அந்த சட்டங்களை அமுல்படுத்துவதற்கான இஸ்லாமிய அரசும், மிகப் பொருத்தமான ஆட்சியாளர்களும் இருக்க வேண்டும். அரசுடனும் குற்றவியலுடனும் தொடர்பான இஸ்லாமிய சட்டங்கள் அனைத்தும் மதீனாவில் இறக்கப்பட்டமை இதற்கான நல்ல சான்றாகும். மக்கா காலப்பிரிவில் சட்டங்கள் இறங்கவில்லை.
3. நற்காரியங்களை வளர்ப்பதற்கும் அவற்றிற்கு உற்சாகமளிப்பதற்குமான முயற்சிகள் அங்கு(அந்த நாட்டில்) தீவிரமாக இடம்பெறும.; தனிமனித, குடும்ப, சமூக உருவாக்கத்துக்கான ஷதர்பிய்யா| எனப்படும் சமுதாய மேம்பாட்டுத்திட்டங்களும்ஏற்பாடுகளும் அங்கு செய்யப்பட்டிருக்கும். குற்றச் செயல்கள் இடம்பெறுவதற்கு ஏதுவான சூழல் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டிருக்கும்.
எனவே.தீமைகள் வளர்வதற்கு இடமளித்துவிட்டு அவை இடம்பெற்ற பின்னர் அவற்றில் ஈடுபட்டவர்களை தண்டிக்க முடியாது. கலீபா உமர்(ரலி) அவர்களது காலத்தில் களவெடுத்தவர்களுக்கான கைவெட்டும் குர்ஆனிய தண்டனையை அவர்கள் இடைநிறுத்தி வைத்தார்கள். அக்காலத்தில் கடுமையான பஞ்சம் நிலவியது. பட்டிணியை ஒழிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவிட்டு, நாடு சுபீட்சமான நிலையை அடைந்த பின்னரும் ஒருவர் களவெடுப்பாராயின் அவரைத் தண்டிப்பது தான் நியாயம் என்பது உமர்(ரலி) அவர்களது கருத்தாகும்.
எனவே, தண்டனைகள் எடுத்த எடுப்பில் ஒரே தடவையில் அமுலுக்கு வருவதில்லை. இஸ்லாத்தில் மனமாற்றத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும். இறைவன், மறுமை மீதான விசுவாசம், உயர்ந்த விழுமியங்களைக் கொண்ட தனிமனிதர்கள், குடும்பங்கள், நிம்மதியைத் தரும் சமூக அமைப்பு என்பன ஏற்படுத்தப்பட்டதன் பின்னரும் ஒருவர் படுபாதகமான வேலைகளில் ஈடுபடுவாராயின் அவர் மேற்கொண்டும் தவறு செய்யாதிருக்க தண்டிக்கப்படுவார். அவருக்கு வழங்கப்படும் தண்டனையைப் பார்த்து பிறருக்கும் பயம் ஏற்பட்டு அவர்களும் சட்டத்துக்கு பயந்தேனும் தவறு செய்யாதிருப்பர். சமூகத்திலுள்ள அனைவரும் புனிதர்களாக மாறிவிடுவர் என எதிர்பார்க்க முடியாது. அங்கு ஒரு சில விஷமிகளேனும் இருக்கவே செய்வர்.; சமூக சூழலை மாசடையச் செய்யஅவர்களை அனுமதிக்க முடியாது. சட்டங்களால் அவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள்.
ஒரு கொலையாளியைக் கொலை செய்வதால் எதிர்காலத்தில் அவனாலோ அல்லது வேறு சிலராலோ கொலைகள் இடம்பெறமாட்டாது. எனவே, குர்ஆன், 'பழிக்குப் பழிவாங்குவதில் வாழ்வுண்டு' என்று கூறியது. எதிர்காலத்தில் பலருக்கு வாழ்வுண்டு. அதாவது, வழங்கப்படும் இத்தண்டனைகள் எதிர்காலத்தில் பல கொலைகளை இடம்பெறாது தடுக்கும் என்பதே இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
மனிதவாழ்வு மேம்பட அமைதியான சமூக அமைப்புத் தேவை, உயிர், பொருள், மானம், மதநம்பிக்கை போன்றவற்றுக்கு உத்தரவாதமில்லாத சமூக அமைப்பு மிகப்பெரும் அபாக்கியமாகும். எந்த நிமிடமும் எதுவும் நிகழலாம் என்ற அச்ச உணர்வு மனித மனங்களில் பயங்கர உணர்வு அலைகளைத் தோற்றுவிக்கும்.
எனவே,ஸ்தீரமான சமூக அமைப்பைத் தோற்றுவிக்க தண்டனையும் ஒரு கருவியாக அமைந்திருக்கின்றது. தற்போது இலங்கையில் படுமோசமாக நிகழும் பாலியல் வக்கிரங்கள், கொலைகள், பகற்கொள்ளைகள் என்பனவற்றுக்கு அரபு நாட்டுப்பாணியிலான தண்டனை அவசியம் என முஸ்லிம் அல்லாத பலரும் கடந்த காலங்களில் பேசி வந்தார்கள்.அத்தகைய தண்டணைகளை அமுலாக்குவதன் மூலமாக மட்டுமே சமுதாயத்தைப் பாதுகாக்க முடியும் என்பது அவர்களது கருத்தாகும். ஆனால், தண்டனைகளில் மட்டும் இஸ்லாம் நம்பிக்கை வைக்கவில்லை. தவிர்க்க முடியாத இறுதிக்கட்ட நடவடிக்கையாகவே அதனைக் கையாளுகின்றது.
இஸ்லாமிய நீதித் துறை
அத்துடன், இன்னுமொரு உண்மையை இங்கு தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும். அதாவது, தண்டனைகளை அமுலாக்க முன்னர் இஸ்லாமிய ஷரீஆ தீவிரமாக விசாரிக்கும்படியும் அலசி ஆராயும் படியும் பணிக்கிறது. சாட்சியமளிப்பது, குற்றத்தை ஏற்றுக்கொள்வது, நீதிபதி, நீதித்துறையின் பக்கச்சார்பற்ற வலுவேறாக்கற் தன்மை போன்றன பற்றி இஸ்லாமிய ஷரீஅத்தில் சமுத்திரம் போன்ற ஆய்வுகள் இருக்கின்றன. ஷஹாதா(சாட்சியம்), ஹுகும்(சட்டம்), அத்ல்(நீதி), களா(தீர்வு)போன்ற சொற்கள் இஸ்லாமிய ஷரீஆத்தில் மிகப் பாரமானவை. எனவே, இஸ்லாமிய நீதித்துறை என்பது கேலிக்கூத்தல்ல என்பதை நாம்முதலில் புரியவேண்டும்.
மேற்சொன்ன விளக்கத்தினடியாக நோக்குகையில், றிஸானாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை பற்றி பல முடிவுகளைப் பெறமுடியும். அதாவது, அப்பெண்ணுக்கு அத்தகைய ஒரு சோகமான முடிவு கிடைப்பதற்கு பலரும் காரணகர்த்தாக்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் அதில் பங்கெடுக்க வேண்டும். அவர்கள் அனைவரையும் நோக்கி நாம் விரல்களை நீட்ட வேண்டும்.
தண்டிப்பதில் மட்டும் இஸ்லாம் இருக்கமுடியாது
நாம் அறிந்த வகையில் சவூதி அரேபியா இஸ்லாத்திற்கான முழுமையான முன் உதாரணமல்ல. சில போது அங்குள்ள அரசு குற்றவியல் சட்டங்களில் மட்டும்தான் இஸ்லாத்தை கடைப்பிடிக்கிறதா என்ற கேள்வியை சிலர் எழுப்புகின்றார்கள். அந்நாட்டு மக்களில் மிகவும் நல்லவர்களும் இருக்கின்றார்கள். ஆனால் பொதுவாக அங்கு ஆடம்பர, மேற்குலக மோகம் தலைவிரித்தாடுகின்றது. அவர்களிற் பெரும்பாலானவர்கள்புலனின்பங்களை அனுபவிப்பதில் தான்; குறியாக இருப்பதை அறியமுடிகிறது.. தன்னால் பெற்றெடுக்கப்பட்ட மழலைக்கு இரண்டு வருடங்கள் முழுமையாகத் தாய்ப்பால் ஊட்டவேண்டும் என்ற குர்ஆனிய கடமையை நிறைவேற்றாமல் புட்டிப்பால் கொடுத்த தாயிடம் இஸ்லாமிய உணர்விருக்குமா என்று சிலர் வினவுவதுண்டு. ஹஜ்ஜுக்காக, உயர்கல்வி நோக்கங்களுக்காக வரும் பெண்கள் விடயமாக மட்டுமே அஜ்னபி- மஹ்ரமீ பார்க்கிறீர்கள். மஹ்ரமே இல்லாத நிலையில் பெண்கள் வருடக்கணக்கில் கடல்கடந்து வந்து உங்கள் வீடுகளில் பணிபுரிய எந்த சட்டத்தில் அனுமதியுண்டு என்று வேறு சிலர் கேட்கின்றார்கள். தொழிலாளர்களுக்குரிய உரிமைகள் மறுக்கப்படும், துன்புறுத்தப்படும், அரபு நாட்டு சிறைகளில் வாடும் ஆசிய நாட்டுத் தொழிலாளர்கள் விடயத்தில் இஸ்லாமிய ஷரீஆத் சட்டங்களை ஏன் நீங்கள் அமுலாக்குவதில்லை என்று இன்னும் சிலர் புலம்புகின்றார்கள். ஆசியர்களையும் அமெரிக்கர்களையும் நீங்கள் ஒரே விதமாக நடாத்துகிறீர்கள் என்று உத்தரவாதப்படுத்துவீர்களா என்று வினவுவோரும் இருக்கின்றார்கள். மொத்தத்தில் சவூதி அரேபியாவில் இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகளை அமுல் செய்வதற்கு பொருத்தமான சூழல் இருக்கிறது என ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கின்றது.
றிஸானா மீதான மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவுடன் சர்வதேச, தேசிய ஊடகங்கள் இஸ்லாமிய ஷரீஆத்தை தாறுமாறாக விமர்சித்தன. சிலர் றிஸானா தனது குற்றத்தை ஏற்றார் என்றும் வேறுசிலர் அவர் நிர்ப்பந்தமாக ஏற்றார் என்றும் கூறினர். விசாரணைகளின் போதும் மேன்முறையீட்டின் போதும் உரிய மொழிபெயர்பாளர்கள் அமர்த்தப்படவில்லை, மேன்முறையீட்டின்போது அநீதிகள் நடந்துள்ளன, குழந்தையின் தகப்பன் மன்னித்தார், தாய் தான் மன்னிக்கவில்லை என்றெல்லாம் பலர் மனதில் வந்ததையெல்லாம் எழுதினர், பேசினர். றிஸானாவை இரண்டு மணித்தியாளங்களுக்கு முன்னர் தான் சந்திதாகக் ஒரு மௌலவி தெரிவிதிருக்கிறார். றிஸானாவின் வாக்குமூலம் பதியப்பட்ட கடிதமொன்றின் பிரதியை பலர் Facebook இல் பரிமாறினர். மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முறைமையை காண்பிக்கும் வீடியோ ஒன்றும் காட்டப்பட்டு வருகிறது. இவை உத்தியோகப்பற்ரற்றவை, ஆதாரமற்றவை என்பதே எமது கருத்தாகும். ஊகிப்பதும்தக்க ஆதாரமின்றிப் பேசுவதும் இஸ்லாத்தில் பாரிய குற்றங்களாகும்.(குர்ஆன் -17:36),(49:6)ஆனால், இவற்றை வைத்து பலர் முடிவுகளை எடுத்துவிட்டார்கள். சவூதி அரேபியாவுக்கு மட்டுமல்ல இஸ்லாத்திற்கும் களங்கம் கற்பிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
றிஸானா மீதான தன்டணையை நிறைவேற்றியமைக்கு சவுதி சில நியாயங்களைக் கூறியிருப்பதாக உத்தியோகபூர்வமற்ற அறிக்கைகள் கூறுகின்றன. அவை வருமாறு:
1. மருத்துவ பிரேத அறிக்கையின் படி கழுத்து நெரிக்கப்பட்டே குழந்தை கொல்லப்பட்டிருக்கிறது.
2. குழந்தையைக் கொன்ற போது றிஸானாவிடம் இருந்த கடவுச் சீட்டின்படி அவர் 22 வயதில் இருந்தார். அந்தவகையில் 18 வயதுக்குக் குறைந்த குற்றவாளிகளைத் தண்டிக்கலாகாது என்ற உலகில் பொதுவான கருத்தை அல்லது நிலைப்பாட்டை நாம் மீறவில்லை.
3. கொலைக் குற்றத்தை மன்னிக்கும் உரிமை இறந்தவர்களின் பொறுப்புதாரிகளுக்கு மட்டுமே உண்டு என்ற வகையில் இறந்த குழந்தையின் பெற்றார் இருவரும் றிஸானாவை மன்னிக்கவில்லை. அவர்கள் மன்னிப்பார்களென இறுதிநேரம் வரை எதிர்பார்க்கப்பட்டும் கூட அவர்கள் றிஸானாவுக்கு மன்னிப்பளிக்கவில்லை. அவ்வாறு அவர்கள் மன்னித்து நஷ்டஈட்டை எதிர்பார்த்தால் அவர்கள் எதிர்பார்க்கும் நஷ்டஈட்டுத் தொகையை சவுதி அரசாங்கமே நீதிமன்றத்துக்குச் செலுத்தத் தயாராக இருந்தது.
மேற்கூறப்பட்ட நியாயங்கள் எதுவும் சவுதி அரசால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டதாக எமக்குஅறியக் கிடைக்கவில்லை. ஆனால், அந்தத் தகவல்கள் உண்மையாயின் ஷரீஆவின் அடிப்படையில் அவற்றை மீள் பரிசீலனை செய்ய வேண்டி வரும்.
சவூதி அரசின் பொறுப்பு
இந்நிலையில் சவூதி அரசுக்கு ஒரு பெரிய பொறுப்புள்ளது. குறிப்பாக இலங்கையருக்கும் பொதுவாக அனைவருக்கும் ரிஸானா பற்றி தெரிந்து கொள்வதற்கு உரிமையுள்ளதால் றிஸானாவின் விசாரணைகளில் கையாளப்பட்ட அணுகுமுறைகள், இறுதித் தீர்மானத்துக்கு வருவதற்கு ஏதுவாக அமைந்த காரணிகள் பற்றி ஊடகங்கள் வாயிலாகத் உத்தியோகபூர்வமாகத் தெளிவுபடுத்த வேண்டும். அது பத்திரிகைகளுக்கான அறிக்கைகளாகவோ, ஊடகவியளார்கள் சந்திப்பாகவோ அமையலாம். சவூதியுடன் தொடர்பான அரசசார்பற்ற நிறுவனங்கள், சவூதியில் கற்ற உலமாக்கள், சகாய உதவி பெறுவோர் அனைவரும் இவ்விடயம் நடந்தேற ஒத்துழைப்பு நல்கவேண்டும்.
றிஸானா விடயமாக மட்டுமன்றி இதற்கு முன்னர் பணிப்பெண்களது உடல்களில் ஆணிகள் ஏற்றப்பட்டமை,சம்பளங்கள் உரிய விதத்தில் வழங்கப்படாமை, உடல் உள ரீதியாக பணிப்பெண்கள் துன்புறுத்தப்படுவது பற்றியெல்லாம் இந்த நாட்டு ஊடகங்கள் அவ்வப்போது படுமோசமான தகவல்களை வெளியிடுவதால் இலங்கை முஸ்லிம்கள் கூடவெட்கித் தலைகுனிகிறார்கள். எனவே,சவூதியின் நற்பெயர் பாதுகாக்கப்படுவதற்கு மட்டுமன்றி இஸ்லாத்தின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கவும் இந்த ஏற்பாடு தேவை.
இலங்கை அரசும் முகவர் நிலையங்களும்
றிஸானாவை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்பிய முகவர்கள் மிகப்பெரும் தவறை செய்திருக்கின்றார்கள். அவர்களால்17 வயது நிரம்பிய றிஸானா 22 வயதாகக் காட்டப்பட்டு போலிக் கடவுச்சீட்டு; தயாரிக்கப்பட்டது. றிஸானாவுக்கு வீடொன்றில் பிள்ளை பராமரிப்பதற்கான எவ்வித பயிற்சியும் வழங்கப்பட்டிருக்கவில்லை. இலங்கையில் சட்டத்தை மீறி இலஞ்சம், ஊழல், களவு வழிகளில் உழைப்போரை தண்டிக்கும் சட்டங்களில் பெரும் ஓட்டைகள் இருப்பதனாலும்; இது நடந்திருக்கின்றது. இப்படியான தவறுகள் செய்யும் முகவர்கள், அதிகாரிகள் அனைவரும் குற்றவாளிகள்தான்.
சமூகக்கடமை
றிஸானா வெளிநாடு செல்வதற்கான நிர்ப்பந்தநிலை உருவாகியிருக்கின்றது. அதனால் இலங்கையிலுள்ள அரசியல் வாதிகள், அதிகாரிகள், முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பதிகாரிகள் அனைவரும் றிஸானாவின் நிலைக்கு பொறுப்பானவர்களாவர். நாட்டில் பொருளாதார சமச்சீரற்ற நிலை உள்ளது. றிஸானாவின் குடும்பம் வாழும் குடிசையைப் பார்க்கும் போது 21 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் இப்படியொரு வீடா என்று கேட்குமளவு அக்குடும்பம் ஏழ்மையின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. உணவு, கல்வி, மருந்து என்று ஏகப்பட்ட செலவுகளுக்கு 17 வயது மகளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்று அக்குடும்பம் தீர்மானிக்கும் அளவுக்கு கவனிப்பாரற்று விடப்பட்டுள்ளது. வீடுகட்டவும், தொழில் செய்யவும், அக்குடும்பத்துக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுப்பதற்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் தனவந்தர்கள் யாருமில்லை என்று எவராலும் கூறமுடியாது.
அண்மையில் மேற்கொள்ளப்பட் ஓர் ஆய்வின்படி நான்கு மாதங்களுக்குள் 20,000 பேர் இலங்கையிலிருந்து உம்ராவை நிறைவேற்றச் சென்றிருக்கின்றார்கள். இவர்கள் ஆகக்குறைந்தது 200 கோடி இலங்கை ரூபாய்களை இதற்காக செலவிட்டிருக்கின்றார்கள். சுன்னத்கள் உயிர்ப்பிக்கப்படுகிறன. ஏழைகளின் அடிப்படைத் தேவைகள் வாஜிப்களாகும். அவை பற்றி நாம் கவனமெடுப்பது குறைவாகும். வானொலியைத் திறந்தாலே உம்ராவுக்கான வசீகரமான விளம்பரங்கள்தான் கேட்கின்றன. ஈமானுக்கான முயற்சிகள் எடுக்கப்பட்டால்.ஸகாத் கடமை நிறுவனமயப்படுத்தப்பட்டால் ஸதகாக்கள், ஸதகா ஜாரியாக்கள் உரிய விதத்தில் வழங்கப்பட்டால், குடும்ப உறவுகள் (ஸிலதுர் ரஹ்ம்), செலவளிப்பது (நபகா) எனப்படும் சட்டங்கள் சமூகத்தில் உரிய முறையில் நடைமுறைக்கு வந்தால், சீதனக் கொடுமை ஒழிக்கப்பட்டு வாரிசுரிமைச் சட்டங்கள் அமுலுக்கு வந்தால், இஸ்லாமிய ஞானங்கள் சமூகத்தில் பரப்பப்பட்டால் அல்லாஹ்வின் கிருபையால் இந்த துர்ப்பாக்கிய நிலைகள் எதிர்காலத்தில் உருவாகுவதைத் தடுக்கலாம். நபி(ஸல்); ஷஷகணவனற்ற ஒரு பெண்ணை அல்லது ஏர் ஏழையை கவனிக்கின்ற ஒருவர், இறைவழியில் போராடுபவருக்கு, பகலெல்லாம் நோன்பிருந்து இரவெல்லாம் நின்று வணங்குவபவருக்கு நிகரானவர்||(புஹாரீ)எனக் கூறினார்கள்.எனவே,வணக்கங்களில் தீவிரமாக ஈடுபடுபவருக்கு கிடைக்கும் அதேகூலி சமூக நலப்பணிகளில் ஈடுபடுபவருக்கும் கிட்டும் என்ற கருத்தை நாம் சமூகத்தில் பரப்பவேண்டும்.பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்வது உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
வெளிநாடுகளிலிருந்து முஸ்லிம் அரச சார்பற்ற நிறுவனங்களினூடாக உழ்ஹிய்யா, நோன்பு திறப்பது போன்றவற்றுக்குப் பணம் வருவதற்கு பதிலாக வீடற்றவர்களுக்கு வீடு அமைக்க, சிறுதொழில் முயற்சிகளை உருவாக்க,கல்வி முயற்சிகளை தோற்றுவிக்க என்ற நோக்கங்களுக்காகப் பணம் வரவேண்டும்.
எனவே, இஸ்லாத்தை முழுமையான வடிவில் போதிக்காத, கல்வி, பொருளாதாரம், குடும்பவியல் போன்ற துறைகளில் இஸ்லாம் கூறியுள்ள போதனைகளை சமூகமயப்படுத்தாத உலமாக்களும், படித்தவர்களும் றிஸானாவின் விவகாரத்துக்குப் பதிலளிக்க வேண்டும்.
மொத்தத்தில் றிஸானாவின் விவகாரம் ஒரு கண்திறப்பு (Eye Opener) ஆக அமையட்டும். எமது நிலைமைகளை மீள்பரிசீலனை செய்வதற்கு அல்லாஹ் தந்த ஒரு சோதனையாக அதனை பார்ப்போமாக. பேச்சைக் குறைத்து செயலில் இறங்குவோமாக. சகோதரி றிஸானாவின் பாவங்களை மன்னித்து அவருக்கு சுவர்க்கத்தையும் றிஸானாவை இழந்த குடும்பத்தாருக்கு பொறுமையையும் அல்லாஹ் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.
Though some controversial points have been omitted for obvious reasons, this analysis is the best I read on Rizana"s matter.Let all of us pray for this poor girl.
ReplyDeleteயாழ் இணையமும் இவர்கள் தரும் அறிக்கைகளை மீண்டும் மீண்டும் பிரசுரிக்காமல், கட்டுரையாளரின் கடைசி பந்தியில் உள்ளது போல் நடப்போமாக.
ReplyDeleteபோனது ஒரு உயிர், காப்பாற்ற வேண்டியது நிறைய உயிர்கள்.
நமது பயணம் - மிக நீண்டது .
இன்ஷா அல்லாஹ் நீயே எங்களுக்கு உதவி புரிவாயாக. ஆமீன் .
இதுவரையிலே ரிசானாவின் அவலம் தொடர்பாக எழுதப்பட்டு நாங்கள் படித்த கட்டுரைகளில் ஒன்றில் உணர்ச்சி வசப்பட்டு ரிசானாவின் அவலத்திற்கு எதிராக எகிறியிருப்பார்கள். அல்லது சவூதியையும் அவர்களால் பின்பற்றப்படும் சட்டத்தையும் வக்காலத்து வாங்க முயற்சித்திருப்பார்கள்.
ReplyDeleteசிலரது எழுத்துக்களில் தாம் இதுவரை உயர்வாக நினைத்துப் போற்றிக் கொண்டிருந்த சில மாயைகள் பிம்பங்கள் மிக மோசமாய் உடைந்து சுக்கு நூறாகி விட்ட கவலை இழையோடியிருக்கும்.
ஆனால், இது ஒன்று மட்டும்தான் உண்மையிலேயே சரியாகவும் அதேவேளை மிகவும் சமநிலையான பார்வையுடன் எழுதப்பட்டுள்ளது. அதற்காக உங்களைப் பாராட்டுகின்றோம் திரு. பளீல் அவர்களே.
நீங்கள் எழுதிச்செல்வதைப் பார்க்கும்போது உங்களால் இதுவிடயமாக மட்டுமன்றி உலகின் வேறுபல முஸ்லீம் நாடுகளின் நிலைமைகள் சர்ச்சைகள் பற்றியும் தெளிவுபடுத்தக்கூடிய தகுதியும் ஆற்றலும் இருப்பதாகத் தோன்றுகின்றது.
அதை உடனடியாகச் செய்யுங்கள் பளீல் அவர்களே!
அஷ்ஷேக் பளீல் அவர்களுக்கு இறைவன் அருள் புரிய வேன்டும்.அவர்களின் மார்க்க அறிவில் மேலும் இறைவன் அருள்பாலிப்பானாக். இதுவரை வெளிவந்த கருத்துக்களுக்கெல்லாம் ஓர் முடிவுரை வழங்கியது போல் ஓர் போது மான தெளிவை வழங்கினீர்கள். நீங்கள் கற்ற கலாசாலையின் தரமும் தத்துவமும் உங்கள் மூலம் வெளிப்பட்டுள்ளது. உங்களைப் போன்ற உலாமாக்களே எம் சமுகத்தின் தேவை. மாறாக உடைச்சி உடைச்சிப் பேசி உடைந்து போவோர் அல்ல.
ReplyDeletea great article is written by Faleel sir, I am really appreciate your Islamic approach and knowledge, thanks sir May Allah assist you always
ReplyDelete